2 இராஜாக்கள் 2:19-22 இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 2:23-25 வரையிலுள்ள வசனங்களை ஆராய்வோம். இந்த வசனங்களை வாசிக்கிறபோதே மனத்தில் ஒரு பயம் ஏற்படும்.
மேலும் இந்தப் பகுதிக்கு விளக்கவுரை எழுதிய பல விரிவுரையாளர்கள் இது நம் காலத்திற்குப் பொருந்தி வராத கட்டுக்கதை என்று விளக்கியிருக்கிறார்கள். அது எப்படி ஆண்டவருடைய மனிதனான ஒரு தீர்க்கதரிசி இப்படிக் கோபப்பட்டுச் சபித்து இத்தனை பேரைக் கரடிகளைப் பயன்படுத்திக் கொல்ல முடியும் என்பது அவர்களுடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் வேதம் நம் கையில் கொடுக்கப்பட்டிருத்தும் தெய்வீக வழிநடத்தலை நம்புகிறவர்கள் அதில் தவறொன்றும் இருக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள். அதாவது வேதம் பரிசுத்த ஆவியினாலே ஊதி அருளப்பட்டிருக்கிறது என்று பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார், அது மனிதனின் சிந்தனையில் இருந்து வெளிப்படவில்லை. மனிதர்களை வைத்து ஆவியானவர் அதை எழுத வைத்தாலும் எதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானித்தாரோ அந்த விஷயங்களை மட்டும் ஒரு வார்த்தையும் விடாமல் உள்ளது உள்ளபடியே அவர்களைக் கொண்டு எழுத வைத்தார். அந்தமுறையில் நம் கையில் வந்து சேர்ந்ததுதான் வேதம். அவசியத்தின் அடிப்படையில் தெய்வீகத் தேவையின் காரணமாக இந்த இரண்டாவது அதிகாரத்தின் கடைசி வசனங்கள் வேதத்தில் பதியப்பட்டிருக்கின்றன.
இந்த வசனங்களுக்கு முந்தைய வசனங்களில் எலிசா இப்போது எரிகோ பட்டணத்தில் இருக்கிறதை நாம் வாசிக்கிறோம். அந்த எரிகோ பட்டணத்தில் நடந்த அற்புதத்தை இதற்கு முந்தைய ஆக்கத்தில் நாம் விரிவாகக் கவனித்தோம். யோசுவா காலத்தில் சபிக்கப்பட்ட பட்டணமாக அது இருந்தது. அந்தப் பட்டணத்தில் இருந்த தண்ணீர் ஊற்றுக்களிலெல்லாம் நச்சுத்தன்மை பரவி இருந்தது. அதனால் அதைக் குடித்த பெண்களுக்குக் குழந்தைகளைப் பெற முடியாத அளவுக்கு அது மோசத்தை உண்டாக்கி இருந்தது. அப்படியிருந்த அந்த நீரூற்றுகளை எல்லாம் எலிசா நல்ல நீரூற்றுகளாக மாற்றினார். சபிக்கப்பட்ட அந்த எரிகோ பட்டணத்தின் சாபம் அகற்றப்பட்டு ஊருக்கு நன்மை கிடைத்தது என்று பார்த்தோம். அங்கிருந்த மக்கள் நிச்சயமாக எலிசாவிற்குப் பெரு நன்றியைத் தெரிவித்திருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் ஆண்டவரையும் அவர்கள் மகிமைபடுத்தியிருப்பார்கள். எலிசா வந்த வேலை முடிந்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட வேண்டும். ஒரு முக்கிய காரணத்திற்காக எரிகோ பட்டணத்திற்கு ஆண்டவர் எலிசாவை அழைந்து வந்தார். தெய்வீக வழிநடத்துதலின்படி அவர் இப்போது நகரைவிட்டுப் போகவேண்டியிருந்தது. கர்த்தரின் வழிப்படி அடுத்த கட்ட ஊழியத்தை அவர் ஆரம்பிக்க வேண்டும். எரிகோவைவிட்டுப் புறப்பட்டு அவர் போன நகரம் பெத்தேல். “அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்” (2 இராஜாக்கள் 2:23) என்று வாசிக்கிறோம்.
ஆண்டவருடைய சித்தமில்லாமல் எலிசா பெத்தேலுக்கு போயிருக்கமாட்டார். அவர் பெத்தேலில் செய்ய வேண்டிய ஒரு காரியம் இருந்தது. எலிசாவின் வழிகள் கர்த்தரால் வழிநடத்தப்பட்டவையாக இருந்தன. அந்தவகையில்தான் அவர் இம்முறை பெத்தேலுக்கு வந்தார். அதை விவரிக்கும் வேதம்,
2 இராஜாக்கள் 2:23-24
“அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள். அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது” என்கிறது.
இந்த சம்பவத்திற்கு முன்பு எரிகோ பட்டணத்தில் நடந்த அருமையான நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். ஆனால் பெத்தேலுக்கு எலிசா வந்தபோது இத்தனை கோரமான நிகழ்வு நடைபெறுவதைப் பார்க்கிறோம். முன்பு நாம் வாசித்த வசனங்களில் எரிகோ பட்டணத்திற்கு சந்தோஷம் வந்ததைப் பார்க்கிறோம். இங்கு வன்முறையை நாம் பார்க்கிறோம். எலிசாவின் சாபத்தினாலே கரடிகள் அத்தனை பேரை அங்கு கொன்றுபோட்டதைக் கவனிக்கிறோம். எரிகோ பட்டணத்தில் மனந்திரும்புதல் இருந்தது, ஒப்புரவாகுதல் இருந்தது, தேவனுடைய சமாதானம் மக்களுக்குக் கிடைத்தது. ஆனால் இங்கேயோ பாவத்தைப் பார்க்கிறோம், பாவத்தினால் ஏற்பட்ட சாபத்தைப் பார்க்கிறோம், நியாயத்தீர்ப்பைப் பார்க்கிறோம். எவ்வளவு வேகமாக நிகழ்ச்சிகள் மாறிவிட்டன என்பதைக் கவனிக்கிறோம். ஒரு நகரத்தில் ஆனந்தமாக மக்கள் சந்தோஷத்தை அனுபவித்து கடவுளை மகிமைப்படுத்தின நிலையிலிருந்து, இன்னொரு நகரத்தில் ஒரு கோரமான நிகழ்ச்சிக்கும் மிகவும் துக்ககரமான நிலைக்கும் மக்களின் நிலைமை மாறியதை நாம் பார்க்கிறோம். அதுமட்டுமல்லாமல் தாழ்மையானவரான எலிசா இங்கு மிகவும் கோபமுள்ள ஒரு தீர்க்கதரிசியாக பழிவாங்கும் விதத்தில் பெத்தேல் வாலிபர்களைச் சபித்து அவர்கள் அகோரமாக மாண்டுபோனதைப் பார்க்கிறோம்.
எலிசா ஏன் அவர்களைச் சபித்தார்? தமிழ் வேதத்தில் இந்தப் பகுதியில் ‘அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. பிள்ளைகள் என்று சொன்னால் இரண்டிலிருந்து ஐந்து வயதுள்ள சிறுபிள்ளைகள் என்று நாம் நினைத்துக்கொள்ளுவோம். ஆனால் அந்த வார்த்தையை மூல மொழியான எபிரெய மொழி அந்தமுறையில் பயன்படுத்தவில்லை. ஆங்கில வேதத்தில் அதை வாலிபர்கள் (Youths) என்று மொழிபெயர்த்துள்ளனர். NASB என்ற ஆங்கில வேதத்தில் இளம் வாலிபர்கள் (Young lads) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆகவே இவர்கள் சிறுபிள்ளைகள் அல்ல, வாலிப வயதில் இருந்தவர்கள். அவர்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்திருந்தது. நான்கைந்து வயதுள்ள சிறுபிள்ளைகளாக இருந்திருந்தால் அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உணராமல் செய்திருப்பார்கள். ஆனால் இங்கிருந்த வளர்ந்த வாலிப பையன்களுக்கு தாங்கள் என்ன செய்கிறோம் என்பது நன்றாகத் தெரிந்திருந்தது. அவர்கள் உலகம் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை நிந்தித்தார்கள். அதாவது மிகவும் அசிங்கமாகப் பேசுவது, அவமானப்படுத்துவது, கேவலமாக ஒரு மனிதனை நடத்துவது போன்றவை அதில் அடங்கும். அவர்கள் அவ்வாறு எலிசாவின் இருதயத்தில் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படச் செய்திருக்கிறார்கள். அந்த வாலிபர்கள் தீர்க்கதரிசியை அன்பாகவோ, கனிவாகவோ, மரியாதையுடனோ நடத்தவில்லை. அவர்கள் யாரோ முன்பின் தெரியாத ஒரு சாதாரண மனிதனை நித்திக்கவில்லை; அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது யார் இந்த மனிதனென்று. அந்த நாட்டில் ஆண்டவரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு தீர்க்கதரிசியை அவர்கள் நிந்தித்து அவமானப்படுத்தியிருந்தனர். அதனால்தான் ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பு அந்த வாலிபர்கள் மீது வந்தது என்று பார்க்கிறோம். அன்று அங்கிருந்த வாலிபர்களின் மொத்தத் தொகையை வேதம் நமக்கு விளக்கவில்லை. “அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது” என்று வேதம் சொல்லுகிறது. அவர்களில் என்று சொல்லுகிறபோது அங்கு இருந்தவர்களில் நாற்பத்திரண்டுபேரைக் கரடி கொன்று போட்டிருக்கிறது என்று அறிகிறோம். அன்று பெருந்தொகை வாலிபர்கள் அங்கிருந்திருக்கலாம். அநேக வாலிபர்கள் அன்று தப்பிப்போயிருக்கிறார்கள். ஆனால் கோரமான முறையில் இறந்து போனவர்கள் நாற்பத்திரண்டு பேர். அன்று ஒன்று இரண்டு பேர் சாகவில்லை, ஒரு பெரிய கூட்டத்தில் நாற்பத்திரண்டு பேரை அந்த இரண்டு கரடிகளும் சின்னாபின்னமாக்கிக் கோரமாகக் கொன்று போட்டிருந்தன என்று அறிந்துகொள்கிறோம்.
இந்தப் பகுதியிலிருந்து மூன்று விஷயங்களை நாம் கவனிப்போம்.
முதலாவதாக, நிந்தனை ஆரம்பித்த விதம்
எலிசா தீர்க்கதரிசியை இளம் வாலிபப் பிள்ளைகள் நிந்தித்தார்கள். அது எப்படி ஆரம்பித்தது? எரிகோவில் தன்னுடைய பணிகளை முடித்த எலிசா இப்போது பெத்தேலுக்கு வந்தார். பெத்தேல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேவனுடைய வீடு என்பதாகும். பெத் (Beth) என்ற வார்த்தைக்கு அர்த்தம் வீடு. எல் (El) என்ற வார்த்தை ஆண்டவரைக் குறிப்பதாகும். இது அந்த இடத்திற்குத் தற்செயலாகக் கொடுக்கப்பட்ட பெயர் அல்ல. பெத்தேல் நகரம் ஆண்டவருக்கு மகிமை கொடுத்த நகரமாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அது அநேக காலங்களுக்கு முன்பு. அந்த நகரம், தேவனுடைய வீடு என்று இருந்தது, ஆனால் அந்தப் பெயர் பின்பு மாற்றப்பட்டுவிட்டது. பெத்தேல் என்பது பெத்தாவேன் என்று மாற்றப்பட்டது. பெத்தாவேன் என்ற வார்த்தைக்கு மாயையின் நகரம் அல்லது பழிவாங்குதலின் நகரம் என்று பொருள்படும். இதனை நாம் ஓசியாவில் வாசிக்கிறோம்,
ஓசியா 10:5
“சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்” என்று வாசிக்கிறோம்.
கன்றுக்குட்டி என்பது யெரொபெயாம் சிலையாக ஏற்படுத்தி மக்களை வணங்க வைத்த கன்றுக்குட்டியாகும். (இந்த வசனத்தில் ‘அதின்’ என்ற வார்த்தை மூன்று தடவைகள் வந்திருக்கின்றன. அது பழங்காலத் தமிழ் வார்த்தை. இன்று அந்த வார்த்தையை எவரும் பயன்படுத்துவதில்லை; எவருக்கும் அது புரியாது. அதை ‘அதன்’ என்றே நம் காலத்தில் எழுத வேண்டும்.)
தேவனுடைய வீடாக இருந்த நகரம் இவ்வாறு மாயையின் நகரமாக அல்லது பழிவாங்குதலின் நகரமாக (பெத்தாவேன்) மாறியதற்குக் காரணமென்ன? 1 இராஜாக்கள் 12:26-33 வசனங்கள் அதற்கான காரணத்தை நமக்குத் தருகிறது.
“யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள். அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து, தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.”
இதெல்லாம் யெரொபெயாம் செய்த காரியங்களாகும். அது சாதாரணமான காரியமல்ல, தேவனுடைய வீடு என்று சொல்லப்பட்ட ஒரு பட்டணம் பழிவாங்குதலின் நகரம் என்று பெயர் வாங்குகிற அளவுக்கு அவன் செய்த மோசமான பாவமாக இருந்தது. யெரொபெயாம் இதையெல்லாம் தன் சுயநல நோக்கத்திற்காகச் செய்தான். மக்கள் தன் வழியில் போகவேண்டும் என்பதற்காக அவர்களைக் கர்த்தருடைய வழியில் போகவிடாமல் போலித்தனமான ஒரு ஆராதனையையும் போலி தெய்வங்களையும் உருவாக்கி ஆராதிக்க வைத்தான். எந்தவொரு மனிதனும் கர்த்தருக்கு எதிராக ஒரு பாவத்தை செய்கிறபோது அல்லது கேட்டைச் செய்கிறபோது அதெல்லாம் சாதாரணமானதுதான், பெரிய தவறு இல்லை என்று நம்ப வைக்கத்தான் சகல முயற்சிகளையும் எடுப்பான்.
அதிக கேடான பாவத்தை செய்தவனிடம் நீங்கள் பேசிப்பார்த்தால் அதெல்லாம் பெரிய விஷயமல்ல என்று நாம் நினைக்கும்படிதான் பேசுவான். யெரொபெயாமும் அப்படித்தான் செய்தான். அவன் ஆண்டவருடைய மக்களிடத்தில் வந்து கன்றுக் குட்டிகளைக் காட்டி இவைகள்தான் எகிப்திலிருந்து நம்மைக் கூட்டிவந்த தெய்வங்கள் என்று சொன்னான். அவைகளை நாம் ஆராதிக்க வேண்டுமென்று சொன்னான். அவன் வார்த்தைகளில் பொய் இருந்தது, அவன் வார்த்தைகளிலும் செயல்களிலும் மாயமும், ஏமாற்றுத்தனமும் இருந்தன. அவன் இருதயம் எந்தளவுக்கு இருளடைந்து போயிருந்தது என்பதை அது காட்டியது. அவன் இருதயத்தில் ஒரு துளியும் தேவபயம் இல்லாமல் இருந்தது. ஆண்டவருக்கு எதிராகத் தீவிரமாக அவன் நடவடிக்கைகளை எடுத்துத் தான் செய்யும் செயல்களை ஆண்டவரே செய்யச் சொன்னார் என்பதைப் போல மக்களைத் திசை திருப்பி ஏமாற்றினான்.
இதைப்பற்றி எழுதுகிறபோது எனக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது, இன்று நம் சமுதாயத்தில் இருக்கின்ற பெரும்பாலான பாரம்பரிய சபைகளும், தனிப்பட்ட முறையில் இயங்குகிற சபைகளும் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இவைகள் கிறிஸ்தவ சபைகள் என்ற பெயரை வைத்துக்கொண்டு எந்தவித மனசாட்சியும் இல்லாமல், வேதத்தையும் அறிந்திராமல், ஆண்டவருக்குக் கொஞ்சமும் பயப்படாமல், போலிப் பிரசங்கங்களைச் செய்து, மேளமடித்து ஆண்டவர் தன் பிரசன்னத்தை அறியத் தரும் சபையை ஒரு களியாட்டுக்கூடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். யெரொபெயாம் செய்ததற்கும் இவர்கள் இன்றைக்கு செய்து வருகிறதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்னைப் பொறுத்தளவில் ஒரு வித்தியாசமும் இல்லை. அநேக சபைகளுக்குப் போய் பார்க்கிறபோது அங்கு தேவ பயத்திற்கே இடமில்லாமல் இருக்கிறது. அது இன்றைக்கு சபையில் காணப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? அல்பர்ட் என். மார்டின் எழுதிய தேவபயம் என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறோம். தேவபயம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள அதை வாங்கிப் படித்துப்பாருங்கள். அவ்விதமான தேவபயம் போதகர்களுக்கும் இல்லை; சபைகளிலும் இல்லை. போதகர்கள், மக்களைத் தங்கள் வசப்படுத்தி அவர்களை அதிகமாகக் காணிக்கை கொடுக்க வைத்து கூட்டத்தைச் சேர்த்து ஆண்டவரின் பெயரை நிந்தித்து வருகிறார்கள். வேதம் ஆராதனையைப் பற்றித் தந்திருக்கின்ற போதனைகளை அறிய விரும்பாமலும், அது பற்றி எவ்விதக் கவலையும் இல்லாமலும் ஓய்வுநாளில் அவர்கள் செய்துவருகிற அட்டகாசங்கள் எல்லை மீறிப் போயிருக்கின்றன. யெரொபெயாம் செய்ததற்கும் இவர்கள் இன்று செய்து வருவதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
யெரொபெயாம் செய்த செயலில் இரண்டு பாவங்களைப் பார்க்கிறோம். முதலாவதாக, கடவுளுடைய பெயரைத் தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தினான். அவன் கடவுளை அடியோடு துப்பரவாகத் தூக்கி எறிந்துவிடவில்லை. அவன் கன்றுக்குட்டிகளை உருவாக்கி மக்களிடம், நான் உருவாக்கிய இந்தக் கன்றுக்குட்டிகளை மட்டுமே வணங்க வேண்டும், இஸ்ரவேலின் தேவனை வணங்கக்கூடாது என்று சொல்லவில்லை. அவன் அந்த சிலைகளை மக்களிடம் காட்டி, உங்களை எகிப்திலிருந்து கொண்டுவந்த தேவன் இந்த சிலைகள் என்று சொன்னான். இது ஆண்டவருடைய பெயரைப் பயன்படுத்தி செய்த ஏமாற்றுத்தனமாகும். இதுபோன்ற ஏமாற்றுத்தனத்தை இன்றைக்கு எத்தனையோ பேர் செய்து வருகிறார்கள். ஒரு வேத வசனத்தை எடுத்து அதை ஆழமாக ஆராய்ந்து படிக்காமல் அந்த வசனத்திலிருந்து ஒரு தவறான போதனையைக் கொடுத்து மக்களை நம்ப வைக்கிறார்கள். யெரொபெயாம் செய்ததற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? யெரொபெயாம் ஆண்டவருடைய பெயரைத் தன் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டான். இது ஒரு பெரிய பாவம்.
இரண்டாவதாக, ஆண்டவருடைய ஆராதனையை அவன் அடியோடு தூக்கியெறிந்துவிடவில்லை. அந்த ஆராதனையில் இவன் அநேக காரியங்களை இணைத்துக்கொண்டான். தனக்குப் பிடித்த காரியங்களைத் தனக்குப் பெருமை வரவேண்டும் என்பதற்காக ஆராதனையில் சேர்த்துக் கொண்டான். அவன் ஏற்படுத்திய ஆராதனை முறைக்கு ஆங்கிலத்தில் Normative principle of worship என்று சொல்லுவார்கள். அதாவது யெரொபெயாம், ஆண்டவரைத்தான் ஆராதிக்க வேண்டும், ஆனால், அந்த ஆராதனையை நான் கொஞ்சம் மேன்மைப்படுத்தி இன்னும் சிறப்பாக மாற்றியிருக்கிறேன் என்று சொல்லுகிறான். சீர்த்திருத்த சபைகளாகிய நம்மைப் பார்த்து அநேகர், என்ன வெறும் சங்கீதங்களையும், கீர்த்தனைகளையும் பாடிக்கொண்டு இருக்கிறீர்கள், அது நன்றாகவா இருக்கிறது என்று அநேகர் சொல்லுவார்கள். சினிமாப் படப் பாடல்களைப் போல ராகங்கள் இருந்தால்தான் மனதிற்கு குளுகுளுவென்று இருக்குமென்று சொல்லுவார்கள். பெர்க்மென் பாடல்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கும். அநேகருக்கு அவற்றைப் பாடினால்தான் பரலோக இன்பம் கிடைத்தது போல உணருவார்கள், ஆனால் பேர்க்மன் அடிப்படையில் ஒரு கத்தோலிக்க கெரிஸ்மெட்டிக் என்பது கூடத் தெரியாமல் அம்மனிதரின் பாடல்களைப் பாடிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் எந்தளவுக்கு அறியாமையில் வாழுகிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறார்கள். நாம் பாடுகிற பாட்டுப் புத்தகத்தில் இருக்கும் பாடல்கள் சத்தியம் தெரிந்த பக்திமான்களாகிய மனிதர்களால் எழுதப்படாமல் இருந்தால், அவை வேத சத்தியங்களையும் இறையியல் உண்மைகளையும் கொண்டிராமல் இருந்தால், அந்தப் பாடல்களை ஆண்டவருக்காக நாம் பாடக்கூடாது. நாம் நிச்சயமாக ஆராய்ந்து தெரிந்தெடுக்கப்பட்ட இறையியல் அர்த்தம் நிறைந்த பாடல்களைத்தான் ஆண்டவருக்காகப் பாட வேண்டும். நிச்சயம் அதில் இராகம் இருக்க வேண்டும், அதில்லாமல் பாட்டுப்பாட முடியாது. ஆனால் அது தேர்ந்தெடுத்த இராகங்களாக இருக்க வேண்டும். கர்த்தருடைய ஆராதனையில் பாடவேண்டிய பாடலுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய இராகத்திற்கும் பாப் இசைக் கச்சேரியில் வாசிக்கிற இராகத்திற்கும் வித்தியாசம் இல்லாவிட்டால் அது கிறிஸ்தவ ஆராதனையாக இருக்க முடியாது. அதை அறிந்திராதவன் கிறிஸ்தவனாகவும் இருக்க முடியாது. நம் சரீரங்களை அசைத்து ஆட வைக்கின்ற இராகங்கள் நமக்குத் தேவையில்லை. ஆண்டவருடைய சந்தோஷத்தை உண்மையாக இருதயத்தில் ஏற்படுத்துகின்ற இராகங்களைக் கொண்ட பாடல்களை நாம் பாடவேண்டும். Normative principle of worship என்ற தத்துவம் நாம் ஆண்டவரை ஆராதித்தால் போதும், ஆனால் அவரை நாம் எந்தவிதமாக, எவற்றைப் பயன்படுத்தி ஆராதிக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது என்று விளக்குகிறது. அதற்குக் காரணம் அத்தகைய ஆராதனை பற்றிய தெளிவான விளக்கங்களை வேதம் தரவில்லை என்று இந்தப் போதனையைப் பயன்படுத்துகிறவர்கள் கொக்கரிக்கிறார்கள். யெரொபெயாம் ஏற்படுத்தியதுபோல இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஆராதனை முறை. ஆனால் கர்த்தர் அத்தகைய ஆராதனை முறையை சபைக்கு ஏற்படுத்தவில்லை.
மனிதன் ஏற்படுத்தின வழியைப் பின்பற்றிதான் இன்று அநேகர் நாம் ஏன் வீட்டிலிருந்து கர்த்தரை ஆராதிக்க முடியாது? என்று கேட்கிறார்கள். அவர்கள் கட்டிலில் ஆயாசமாக சாய்ந்துகொண்டு தேவ செய்தியைக் கேட்கும் வசதிக்காக அலைகிறார்கள். ஆனால் அத்தகைய சிந்தனையும், செயலும் அவர்களுக்குச் சாபமாக மாறப்போகிறது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். ஆண்டவருடைய வழிநடத்துதலின்படி காணப்படும் ஆராதனையே நமக்கு அவசியமே தவிர, எது நமக்குப் பிடித்தமானதாக இருக்குமென்று சிந்தித்து தனக்குப் பிடித்த விதத்தில் ஆராதனையை ஏற்படுத்துவது முழுத் தவறு. ஆகவே இந்த யெரொபெயாம் ஏற்படுத்தின ஆராதனை தத்துவம் உலகத்தைச் சார்ந்தது, ஆண்டவர் அதைக் கொடுக்கவில்லை.
ஆண்டவர் ஆராதனையை எப்படி வடிவமைத்திருக்கிறார்? சுருக்கமாக விளக்குவதானால், நாம் ஆண்டவரை ஆராதிக்க வேண்டும், அந்த ஆராதனையை அவர் ஏற்படுத்தித் தந்திருக்கின்ற வழிமுறையின்படி ஆராதிக்க வேண்டும் என்று விளக்கலாம். அந்த வழிமுறைகள் எங்கு காணப்படுகின்றன? அவற்றைப் பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களை வாசித்து அறிந்துகொள்ளலாம். அந்த ஆராதனை முறைக்குப் பெயர்தான் வரையறுக்கப்பட்ட ஆராதனை தத்துவம் (Regulative principle of worship). இதனை வேதத்திலிருந்து பெயர்த்தெடுத்து 1689 விசுவாச அறிக்கையில் ‘ஆராதனையும், ஆண்டவருடைய நாளும்’ என்ற தலைப்பின் கீழ் ஒரு தனி அதிகாரத்தில் நமது முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
யெரொபெயாம் திட்டமிட்டுக் கேடான இருதயத்தோடு மக்களைத் திசை திருப்பும்விதமாகத் தவறான ஆராதனையை ஏற்படுத்தியதால் மக்கள் அவன் வலையில் விழுந்துபோனார்கள். அதன் மூலம் மக்களுடைய பாராட்டை அவன் பெற்றிருக்கலாம், அது அவர்களுக்கு பிடித்தமானதாக இருந்திருக்கலாம், ஆனால் அது மோசமான பாவமாக இருந்தது. வேதம் விளக்குகிறதை நாம் செய்யவேண்டுமே தவிர மக்களுடைய பாராட்டு நமக்கு முக்கியமில்லை. யெரொபெயாம் நாட்டு மக்களை ஏமாற்றினான்.
1 இராஜாக்கள் 14:8-11 வசனங்களில்,
“நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல், உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய். ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம் பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறதுபோல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப்போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார். யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்” என்று சொல்லப்பட்டுள்ளது.
யெரொபெயாம் செய்தது சாதாரணமான பாவமாக இருந்திருந்தால் ஆண்டவர் இந்தளவுக்கு அவன் சந்ததியையே இல்லாமல் ஆக்குவேன் என்று சொல்லுவாரா? Normative principle of worship எங்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். இருதயம் கடினப்பட்டுப் போய் ஆண்டவருடைய வார்த்தைகளை மீறித் திமிரோடு செய்கிற காரியங்களை ஆண்டவர் சும்மா விடமாட்டார். அன்றைக்கு யெரொபெயாம் செய்த பாவத்தின் சாபம் இன்றைக்கு சபையில் அதைச் செய்து வருகிறவர்கள் மேல் நிச்சயமாக இருக்கிறது. என்ன நீங்கள் இப்படியெல்லாம் சொல்லுகிறீர்கள்? அதெல்லாம் பழைய ஏற்பாட்டுக் காலத்தில்தான் நடந்தவை, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் நடக்கப்போவதில்லை என்று நீங்கள் தவறாகச் சொல்லலாம். ஆனால் நான் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு சொன்னதையே சொல்லுகிறேன். அவர் பழைய ஏற்பாட்டில் ஏற்படுத்தின ஆராதனைத் தத்துவ முறைதான் புதிய ஏற்பாட்டிலும் இருக்க வேண்டுமென்று நியமித்துள்ளார். நாம் யெரொபெயாம் மாதிரி நடந்து பழைய ஏற்பாட்டு ஆராதனை முறை வேறு, புதிய ஏற்பாட்டு ஆராதனை முறை வேறு என்று சொல்லுவதெல்லாம் போலித்தனமாகும். லேவியர்கள் செய்த சடங்குகள், செலுத்தின தகனபலிகளை நாமின்று செய்யவேண்டிய அவசியமில்லை. ஆனால் அன்றைக்கு ஆண்டவர் ஏற்படுத்தித் தந்திருக்கும் அடிப்படை ஆராதனை தத்துவம் எக்காலத்திலும் மாறாதவை. என்ன அந்த தத்துவம்? அவரை மட்டும் ஆராதிக்க வேண்டும், அவர் ஏற்படுத்தின வழிமுறைகளை மட்டும் பின்பற்றி அவரை ஆராதிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆராதனைத் தத்துவம்.
யெரொபெயாம் பத்துக் கட்டளைகளில் நான்கு கட்டளைகளை மீறியிருக்கிறான். அது சாதாரணமான செயலல்ல.
யாத்திராகமம் 20:3-11
முதலாவது கட்டளை
3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
இரண்டாவது கட்டளை
4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்;
5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
6. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
மூன்றாவது கட்டளை
7. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
நான்காவது கட்டளை
8. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
9. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
10. ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
11. கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.”
இதற்குமேல் ஆண்டவர் எதைத் தெளிவாகச் சொல்ல முடியும்? கன்றுக் குட்டியைக் கொண்டுவந்து வைத்து அது தான் ஆண்டவர் என்று சொன்னால் அது பாவம். கன்றுக்குட்டி மட்டுமல்ல, வேறு எதன் மூலமும் நாம் ஆண்டவரை நாம் ஆராதிக்க முடியாது. இங்கு விசாரிக்கிறேன் என்று (யாத்திராகமம் 20:5) ஆண்டவர் சொல்லுவதை ஏதோ நலமாக இருக்கிறீர்களா என்று கேட்பது போல் எடுத்துக்கொள்ளக்கூடாது. மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் நான் நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவர் வாரத்தின் ஒரு நாளை ஓய்வுநாளாக ஏற்படுத்தி வைத்திருக்கிறபோது நாம் திமிரோடு இன்னொரு நாளை ஓய்வுநாளாக ஏற்படுத்தக் கூடாது. ஓய்வு நாளில் உன் வீட்டிலிருக்கிற மாட்டைக் கூட வேலை செய்ய வைக்கக்கூடாது என்கிறார். ஆனால் நீங்கள் எப்படி துணிகரமாக அந்நாளில் உலகத்து வேலைகளைச் செய்கிறீர்கள்? படைத்த ஆண்டவரே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தபோது, அவரை ஆராதிக்க வேண்டிய நீங்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருப்பதற்கும் ஆராதிப்பதற்கும் மறுப்பதற்குக் காரணமென்ன? யெரொபெயாம் என்ன செய்தான்? அவன் சந்ததியையே பாகால் வணக்கத்திற்கு கொண்டுபோய் விட்டான். அந்த சந்ததியில் பிறக்கிற பிள்ளை எப்படி இருக்கும்? தேவனுடைய வீடான பெத்தேல், பலிவாங்குதலின் நகரமான பெத்தாவேன் என்று எப்படி மாறியது என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? ஆண்டவரையும் அவர் வழிகளையும் நாம் விட்டு விலகிப் போகிறபோது உலகத்திலிருக்கிற அத்தனைக் கேடுகளும் நம்மோடு வந்து ஒட்டிக்கொள்ளும்.
யெரொபெயாம் செய்து வைத்த பாவம் பயங்கரமான பாவம். அவன் சந்ததியில் வந்த வாலிபர்கள் எலிசாவை நிந்தித்தது நாற்பத்திரண்டு பேர் மட்டுமல்ல, அங்கிருந்த எல்லோரும் அப்படிதான் செய்திருப்பார்கள். அன்று அங்கிருந்த அனைத்து வாலிபர்களும் கேடாக நடந்து தீர்க்கதரிசியைக் கேவலமாகப் பேசி நிந்தித்தற்குக் காரணமென்ன? அது அவர்களுடைய பெற்றோர்கள் வளர்த்த முறை மட்டுமல்ல, அவர்களின் ஆராதனை முறையும், அதோடு சேர்ந்து வந்த அத்தனைக் கேடுகளுந்தான் காரணம். இதிலிருந்து நாம் அறிந்துகொள்ளுகிறோம்? இன்றைக்கு நம் காலத்தில் யெரொபெயாம் ஆராதனைதான் நடந்துகொண்டு இருக்கிறது. அத்தகைய ஆராதனையில் கலந்துகொள்ளுகிற வாலிபர்கள் நடந்துகொள்ளும் முறையைக் கவனித்துப் பாருங்கள். பெரியோர்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள், மிகவும் கேவலமாக நடந்துகொள்ளுவார்கள். பாட்டும் நடனமும் களியாட்டமும் மட்டுமே அவர்களுக்குக் கிறிஸ்தவமாகத் தெரியும். யெரொபெயாம் ஆராதனை முறையை நாம் எல்லா சபைகளிலும் காண முடியும். அவர்கள் இயேசுவை ஒரு கையில் வைத்துக் கொண்டு இந்த உலகத்து வாழ்க்கையை இன்னொரு கையில் வைத்திருக்கிறார்கள். எத்தனையோ சபைகளில் வாலிபர்கள் அணிந்திருக்கும் உடையைப் பார்த்தாலே அது சபையா என்று கேள்வி கேட்கத் தோன்றும். உங்கள் சபையில் வாலிபர்கள் எப்படி இருக்கிறார்கள்? பெத்தேல் வாலிபர்கள் இந்தளவுக்கு மோசமாக நடந்ததற்கான காரணத்தைத்தான் இதுவரை கவனித்திருக்கிறோம்.
இரண்டாவதாக, அது எப்படிப்பட்ட நிந்தனை?
எலிசா தீர்க்கதரிசியின் மீதான நிந்தனை ஆரம்பித்த விதத்தை நாம் இதுவரை கவனித்திருக்கிறோம், அதற்கு நாம் யெரொபெயாம் காலம் வரைக்கும் காலத்தைக் கடந்து பின்நோக்கிப் போகவேண்டியிருந்தது. ஏற்கனவே விளக்கியிருப்பதுபோல இந்த வேதப்பகுதியில் பிள்ளைகள் என்று இங்கே சொல்லப்பட்டிருப்பது வயதில் குறைந்த சிறுபிள்ளைகளை அல்ல, அவர்கள் வாலிபர்கள். அன்று ஏன் அவர்கள் அந்த இடத்தில் கூடி வந்திருந்தார்கள்? இவர்கள் இருந்த இடத்திற்கு எலிசா போனாரா? அல்லது எலிசா வந்துகொண்டிருந்த வழியில் இவர்கள் இருந்தார்களா? என்ன நடந்தது? இவ்விதமான கேள்விகளை நாம் கேட்டுப் பார்க்க வேண்டும். வாலிபர்களை ஒரு பக்கம் வைத்துவிட்டு அவர்களுடைய பெற்றோர்களைக் கவனிப்போம். பெற்றோர்களைப் பற்றி எந்தவிதக் குறிப்பும் அங்கு இல்லை. தங்களுடைய பிள்ளைகளின் கொடூரமான மரணத்தைக் கேள்விப்பட்டு அவர்கள் கதறி ஓடி வந்திருப்பார்கள். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் எலிசாவை இவ்வாறு நிந்தித்தபோது அவர்கள் அங்கு இல்லை.
பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டாமா? ஒழுங்காக வீட்டில் வளர்ந்திருந்து பெற்றோர்களின் கண்காணிப்பு சரியாக இருந்திருந்தால் பிள்ளைகள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்கள். பள்ளிக்கூடத்தில் இருக்க வேண்டிய நேரத்தில் அவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அன்று சமுதாயம் எத்தனை மோசமாகப் போய்க்கொண்டிருந்திருக்கிறது என்பதைக் கவனியுங்கள். பெற்றோர்களின் போலியான ஆராதனையோடு, போலியான தெய்வங்களை வணங்கி அதற்கேற்ற முறையில் அமைந்திருந்த கேவலமான வாழ்க்கை முறையும் சேர்ந்து அவர்களுடைய பிள்ளைகளையும் பாதித்து வாலிபர்கள் இம்முறையில் வளர்ந்து நிற்கிறார்கள். ஆகவே இந்த வாலிபர்கள் ஒன்றுமறியாத பிள்ளைப் பூச்சிகளான ஒழுக்கமான வாலிபர்கள் என்று நினைத்துவிடக்கூடாது.
எலிசா அந்தப் பாதையில்தான் வரப்போகிறார் என்பது அந்த வாலிபர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அன்று அவர்கள் செய்த நிந்தனை மிகவும் திட்டமிட்டதாய் இருந்தது. எலிசா தீர்க்கதரிசியை நிந்திக்க வேண்டுமென்று தீர்மானித்து அவர்கள் அந்த இடத்தில் அன்றிருந்திருக்கிறார்கள். 23 வது வசனத்தில்,
“அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்” (1 இராஜாக்கள் 2:23) என்று சொல்லப்படுகிறது.
எலிசாவிற்கு தலையில் முடி கொஞ்சம் இல்லாமல் இருந்திருக்கலாம், இல்லாவிட்டால் அவர்கள் மொட்டைத்தலையா என்று சொல்லியிருக்கக் காரணமில்லை. அவர்கள் எந்தளவுக்கு மோசமாக அவரிடம் நடந்துகொள்ள முடியுமோ அந்தளவுக்கு நடந்திருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக அவரின் உடையைப் பிடித்து இழுத்திருக்கலாம், பின்னால் நின்று கற்களை அவர்மீது எறிந்திருக்கலாம், காதில் கேட்க முடியாத அளவுக்கு அசிங்கமாகப் பேசியிருக்கலாம்.
அவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? அதற்குக் காரணம் இருந்தது. முதலாவதாக, சமுதாயத்தில் எலிசா தான் எல்லாவற்றிற்கும் ஆவிக்குரிய அடையாளமாக இருந்தார். பக்திவிருத்திக்கும், ஆவிக்குரிய காரியத்திற்கும், தேவனுடைய வார்த்தைக்கும் ஒரு அடையாளமாக அவர்தான் அன்றிருந்தார். ஆகவே நான் ஏற்கனவே சொன்னதுபோல எலிசா இருக்குமிடத்தில் தேவன் இருந்தார், எலிசா இருக்குமிடத்தில் தேவனுடைய வார்த்தை இருந்தது. அவர் தேவனுடைய மனிதனாக இருந்தார், அதுதான் உலக இச்சைகளோடு வளர்ந்திருந்த அந்த வாலிபர்களுக்குப் பிடிக்கவில்லை. தேவனைப் பிடிக்காதவர்களுக்கு அவருடைய மக்களைப் பிடிக்காது. ஆகவே அவர்கள், இந்த மனிதன் இங்கு வருவது நம்முடைய சமுதாயத்திற்கே அசிங்கம் என்று நினைத்தார்கள். எலிசா இந்த வழியில் போகக்கூடாது, அவர் இந்த வழியில் போய் நகருக்குள் நுழைந்தால் நம் சமுதாயத்திற்கே நல்லதல்ல என்று நினைத்தார்கள். மொட்டத்தலையா என்று அவர்கள் எலிசாவை அழைத்தது அவர்களுடைய மோசமான இருதயத்தை வெளிப்படுத்தும் வார்த்தையாக இருக்கிறது; அது அவமதிப்பின் உச்சத்தைச் சுட்டுகிறது.
இரண்டாவதாக, இந்த வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையில் எதை விரும்பினார்களோ அதற்கெல்லாம் எதிராக எலிசா இருந்தார். என்னென்ன காரியங்களை அவர்கள் இருதயம் விரும்பியதோ, என்னென்ன காரியங்களை அவர்கள் பெரிதாக எண்ணி நாடினார்களோ அவை எல்லாவற்றிற்கும் எதிரானவராக எலிசா இருந்தார். சுவிசேஷம் சொல்ல வருகிறீர்களா? அது எங்களுக்குப் பிடிக்காது. பக்திவிருத்தியைப் பற்றிப் பேச வருகிறீர்களா? பேசாதீர்கள், அது எங்களுக்குப் பிடிக்காது. தேவபயத்தைப் பற்றிப் பேசாதீர்கள். சபையில் பக்தியாய் நடந்துகொள்ள வேண்டுமென்று பேசாதீர்கள். நான் நடனமாடினால் உங்களுக்கு என்ன? சமுதாயமே அதைச் செய்யவில்லையா? நான் வலையொளியில் (Youtube) காண்கிறதுபோல ஒரு சபை எனக்கு வேண்டும். இக்காலத்து வாலிபர்களைப் போல இந்தவிதமான சிந்தனை கொண்டவர்களாகத்தான் அந்த வாலிபர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு யெரொபெயாம் ஆராதனைதான் மிகவும் பிடித்திருந்தது. பாவத்தைப் பற்றியும், இரட்சிப்பைப் பற்றியும், மனந்திரும்புதலைப் பற்றியும் பிரசங்கம் செய்தால் அவர்களுக்குப் பிடிக்காது. பாவங்களைச் சுட்டிக்காட்டாத, எந்தவித குற்றவுணர்வையும் ஏற்படுத்தாத மனத்தைக் குளிர்விக்கக்கூடிய பிரசங்கங்கள் அவர்களுக்குத் தேவை. ஆனால் எலியாவும் எலிசாவும் அப்படிப்பட்ட பிரசங்கிகள் அல்ல. அதனால் அவர்கள் எலிசாவை வெறுத்தார்கள்.
கடைசியாக, நித்தனையினால் ஏற்பட்ட விளைவுகள்
எலிசா, ஏன் அந்த வாலிபர்களைச் சற்றுக் கண்டித்துவிட்டு அனுப்பியிருக்கக்கூடாது என்று நாம் நினைக்கலாம். ஆனால் எலிசா அவ்வாறு அவர்களை விட்டிருக்க முடியாது. அவர்கள் எலிசாவை நிந்தித்தது எலிசாவோடு மட்டும் நின்றுவிடவில்லை, அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஆண்டவரையே அவர்கள் நிந்தித்தார்கள். அவர்களை எப்படி எலிசா கண்டித்து அனுப்பியிருக்க முடியும்? எலிசா அவர்களை எந்தவிதத் துன்புறுத்தலும் இல்லாமல் சாகச் செய்திருக்கலாம். எலிசா ஏன் அவர்களைக் கோரமாக சாகப்பண்ணினார்? அன்று அந்த வாலிபர்கள் இறந்த செய்தி பெத்தேல் மட்டுமல்ல, முழு இஸ்ரவேலுக்கும் சென்றிருக்கும். அந்தளவுக்கு ஏன் எலிசா அவர்களைக் கரடிகள் கோரமாகக் கிழித்தெறியச் செய்திருக்க வேண்டும்? அதற்குக் காரணம் இருக்கிறது. கர்த்தருக்கெதிரான அந்த வாலிபர்களின் செயல்கள் அன்று அத்தனை மோசமாக இருந்தன. எந்தளவுக்கு மோசமாக ஒருவரின் பாவம் இருக்கிறதோ அந்தளவுக்குதான் நியாயத்தீர்ப்பும் அமையும். ஆண்டவர் நீதியுள்ளவர், அநீதியாக ஒருநாளும் நடக்கமாட்டார். நம் பாவங்களுக்குத் தகுந்த அளவில்தான் தண்டனையும் காணப்படும், அதில் எந்தவிதமான சந்தேகமும் நமக்கிருக்கக்கூடாது. அந்த வாலிபர்கள் செய்த அக்கிரமத்திற்குத் தக்க அளவிற்கு நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வந்த நியாயத்தீர்ப்பு அவர்கள் செய்த பாவம் எத்தனை மோசமானது என்பதைக் காட்டுகிறது. அவர் சபித்தவுடன் இரண்டு கரடிகள் காட்டிற்குள் இருந்து வந்து அங்கிருந்த தொகையான வாலிபர்களின் கூட்டத்தில் நாற்பத்திரண்டு பேரைக் கோரமாகக் கொன்று போட்டன. அவை எந்த வேகத்தில் அவர்களைப் பீறிக் கொன்றிருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். கோரமான விபத்து ஏற்படுவது போல அன்றைக்கு அவர்கள் அகோரமாகக் கரடிகளால் கிழித்தெறியப்பட்டார்கள்.
அன்று நடந்ததைக் கேள்விப்பட்டு பெருந்தொகையான பெற்றோர்களும், சகோதரர்களும், சகோதரிகளும், உறவினர்களும் ஒடி வந்திருப்பார்கள். நடந்திருக்கும் நிகழ்ச்சி அவர்களுக்கு எத்தனை பெரிய பயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். பெத்தேல் நகரம் முழுவதையும் அன்று பயமும் நடுக்கமும் ஆட்டிப் படைத்திருக்கும். பெத்தேலில் நடந்த இந்தக் கோரமான நிகழ்வு, எலிசாவின் செயல்கள், ஆண்டவருடைய நியாயத்தீர்ப்பு எல்லாவற்றையும் கவனிக்கும்போது ஆண்டவரின் இரண்டாம் வருகை எந்தவிதத்தில் அமைந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றி சிறிதும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. ஆகவே அன்றைக்கு நடந்த அந்தக் கோரமான நிகழ்வு கர்த்தருடைய நியாயத்தீர்ப்பாக இருந்தது.
இதிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
முதலாவதாக, ஆண்டவரோடு தொடர்புடைய எதையும் வாலிபர்களாகிய நீங்கள் நிந்திக்கக்கூடாது. வேதத்தையும், போதகர்களையும், உதவிக்காரர்களையும், சபையையும், ஆண்டவருடைய செய்தியையும், கிருபையின் நியமங்களையும் பக்திக்குரிய எதையும் நிந்திக்கக்கூடாது; அவமதிக்கக்கூடாது.
இந்த வாலிபர்கள் அதையெல்லாம் அன்று செய்திருந்தார்கள். ஆண்டவரை பிரதிநித்துவப்படுத்துகிற எதையும் நாம் அவமதித்து நடக்கக்கூடாது. அதைவிட மோசமானது வேறெதுவும் இல்லை. இன்று இந்தவகையில் நடந்துகொள்ளும் வாலிபர்கள் இருக்கிறார்கள். பெருமையுள்ள இருதயத்தைக் கொண்டிருந்து சபையைத் திட்டுவதும், போதகரைத் திட்டுவதும், ஆராதனையைப் பற்றி அசிங்கமாகப் பேசுவதுமாக இருக்கிறார்கள். இரண்டு கரடி வந்து அன்று செய்தது போல் இவர்களைக் கொன்றுவிடவில்லையே என்று யோசிக்கிறீர்களா? நீடிய பொறுமை கொண்ட ஆண்டவர் அவர்களைச் சும்மா விடமாட்டார். பாவத்திற்குத் தக்க தண்டனையைக் கொடுப்பார். யெரொபெயாம் வழிவந்த மக்களைப் போல நாம் நடக்கக்கூடாது. அவிசுவாசி கூட இன்றைக்கு சபைக்கு மதிப்புக் கொடுக்கிறான். ஆனால் கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்த வாலிபர்கள், சுவிசேஷத்தை அறிந்த வாலிபர்கள் நடந்துகொள்ளும் விதந்தான் மோசமாக இருக்கிறது.
கிறிஸ்தவன் என்று பெயரை வைத்துக் கொண்டு ஆண்டவரையும், அவருடைய சபையையும் உங்களுடைய இறுமாப்பினால் நிந்தித்தால் ஆண்டவர் உங்களைச் சும்மா விடப்போவதில்லை. பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் எப்படி வளர்ந்து வருகிறார்கள்? நீங்கள் அவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறீர்களா என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் தவறான உதாரணம் உங்கள் பிள்ளைகளையும் அதேமாதிரி செய்ய வைக்கும். நீங்கள் தப்பவே முடியாது. இந்த நாற்பத்திரண்டு பேரும் தவறாக நடந்ததற்கு அவர்களுடைய பெற்றோர்கள் நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டும். அவர்களுடைய செல்வாக்கில்லாமல் இதையெல்லாம் அவர்கள் செய்திருக்கவே முடியாது. ஒருநாளும் தேவனோடு சம்பந்தப்பட்ட எதையும் அசிங்கமாகப் பேசவோ, உதாசீனப்படுத்தியோ நடக்கக்கூடாது. அவ்வாறு செய்திருந்தால் அதை அறிக்கை செய்து மனந்திரும்புங்கள். சிந்தித்துப் பார்த்து திருந்துவதைத்தான் ஆண்டவர் எதிர்பார்க்கிறார். பிள்ளைகள், வாலிபர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று வேதம் சொல்லுகிறது.
“பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.” (எபேசியர் 6:1).
சில வாலிப பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பது பிடிப்பதில்லை, அதனால் பெற்றோர்களையும் அவர்கள் நிந்திக்கிறார்கள். உங்கள் பெற்றோர்கள் விசுவாசியாகவோ அவிசுவாசியாகவோ இருக்கலாம், ஆனால், நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும், அதுவே நியாயமானது; கர்த்தரின் கட்டளையுங்கூட. பெற்றோர்கள் ஆண்டவரை மீறி எதையும் பிள்ளைகளைச் செய்யும்படி சொல்லக்கூடாது. யெரொபெயாம் வழியில் போவென்று பெற்றோர்கள் சொன்னால் அதை வாலிபர்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. அமைதியாக அதை மறுத்துவிட வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளைத் தேவனுடைய நீதியான வழியில் வழிநடத்த வேண்டுமே தவிர எதிரான வழியில் அல்ல. ஆகவே வாலிபப் பிள்ளைகள் எல்லாம் இதையெல்லாம் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கிறிஸ்தவ பெற்றோர்களை ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருந்தால் அது ஆசீர்வாதம், அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே தவறாக நடக்க முயன்றால் வாலிப வயதில் அவற்றை மாற்றிக்கொள்ள முடியாது. நீங்களே தவறாக வளர்ந்தால் நாளைக்கு உங்கள் பிள்ளைகளை எவ்வாறு வளர்ப்பீர்கள்? நீங்கள் அவருடைய வார்த்தையைக் கேட்க வேண்டும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். சிறுவயதில் இருந்தே சரியான வழியில் நடக்கப் பார்க்க வேண்டும்.
இரண்டாவதாக, ஆண்டவர் உங்களுக்கு மனந்திரும்படியாக அளித்திருக்கின்ற சந்தர்ப்பங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆண்டவர் சுவிசேஷத்தைக் கேட்கும்படியாகவும், நல்ல புத்தகங்களை வாசிக்கும்படியாகவும் எத்தனையோ வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து உங்களோடு ஏதோவொரு விதத்தில் பேசிக்கொண்டிருக்கிறார். அதை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. பிரசங்கி 12:1-7 வரை ஆண்டவர், “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” (பிரசங்கி 12:1) என்று சொல்லுகிறார். ஏன் வாலிப வயதில் ஆண்டவரை நினைக்க சொல்லுகிறார்? சிறு வயதிலே ஆண்டவரை நினைத்து, பாவத்திற்கு விடுதலையைத் தேடி, அவரை விசுவாசித்தால் பெரிய பாவங்களைச் செய்யாமல் நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். கேடான வழியில் போவது கேட்டுக்குத்தான் வழிவகுக்கும். ஆண்டவருடைய வழியில் நீதியாக வளருவது நீதியை விளைவிக்கும். ஆகவேதான் உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை என்று சொல்லுகிறார்.
நீங்கள் ஆண்டவரைத் தேடுகிறீர்களா? அவரை விசுவாசிக்கிறீர்களா? இளம் வயதாக இருக்கும்போதுதான் எல்லாவற்றையும் சந்தோஷமாக அனுபவிக்க முடியும் என்று நினைப்பதெல்லாம் பாவம். ஆகவே நாம் ஆண்டவரை விசுவாசித்து அவருடைய வழியில் நடந்து பரிசுத்தமாக வாழ வேண்டும்.
சங்கீதம் 119:9 இல்
“வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே” என்று வேதம் சொல்லுகிறது.
நீதிமொழிகள் 1:8-9 இல்
“என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்” என்று சொல்லுகிறது.
2 நாளாகமம் 34:1-2 இல்
“யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்” என்று சொல்லுகிறது.
அந்த அதிகாரத்தின் கடைசியில், 2 நாளாகமம் 34:33 இல்
“அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை” என்று வேதம் சொல்லுகிறது.
இங்கு யோசியா எட்டு வயதிலிருந்து கர்த்தருடைய வழிகளில் நடந்தான் என்பதைப் பார்க்கிறோம். அவன் கீழிருந்த மக்களும் அதனால் பயனடைந்தார்கள்.
ஆண்டவருக்கு விரோதமான ஆராதனை செய்வது, அவருக்கு விரோதமான இடத்தில் இருப்பது வளர்வது எல்லாம் உங்களுக்கு நன்மையைத் தராது. வாலிபர்களே, நீங்கள் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் சீக்கிரத்தில் திருமணம் செய்து விடுகிறீர்கள் அதெல்லாம் நல்லதுதான், ஆனால் உங்களுக்கு முதிர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. தாவீதைப் போல, தீமோத்தேயுவை போல உங்களிடம் முதிர்ச்சி இல்லை. உங்கள் வாழ்க்கையில் வெளிப்பட வேண்டிய காரியங்களில் நீதி குறைவாக இருக்கிறது. மற்றவர்களுக்கு மரியாதை செய்வதில் உங்களில் குறை இருக்கிறது. உங்களுக்கு ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கிறது. நிதானம் குறைவாக இருக்கிறது. இதையெல்லாம் சொன்னால் உங்களுடைய பெருமை கொண்ட இருதயத்தில் கோபம் வந்துவிடுகின்றது. அதனால் என்ன பயன்? ஆண்டவருடைய கோபத்திலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காகத்தான் பெரியவர்களும் போதகர்களும் உங்களுக்கு ஆலோசனை தருகிறார்கள். நீங்கள் ஆண்டவருடைய கையில் அகப்பட்டு அழியக் கூடாது. அன்றைக்கு அந்த நாற்பத்திரண்டு வாலிபர்களும் அகப்பட்டு அழிந்து போனார்கள். அதனால் திருந்துங்கள், திருந்துகிறவர்கள் எப்போதும் நன்றாக இருப்பார்கள். ஸ்பர்ஜனுடைய வாழ்க்கை வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அவர் தன் பெற்றோர்களுக்கும், தாத்தாவிற்கும் மரியாதை கொடுத்து கீழ்ப்படிந்து வேதத்தைப் படித்து வளர்ந்து ஒரு முன்மாதிரியான மனிதனாக வாழ்ந்திருந்தார் என்பதை மறவாதீர்கள்.
இன்றைக்கு அநேகர் சுவிசேஷம் சொல்லவும், பிரசங்கம் பண்ணவும் மிகவும் ஆசையாயிருக்கிறார்கள். உங்கள் வாழ்க்கை ஒழுங்காக இல்லாமல் நீங்கள் எதைச் செய்ய ஆசைப்பட்டாலும் அதெல்லாம் வீண். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பேசுகிற பேச்சில், செய்கிற காரியங்களில் இருக்க வேண்டிய உண்மையும், ஒழுங்கும் இருந்தால்தான் நாம் சொல்லுகிற காரியங்களுக்கு மதிப்பு இருக்கும். வாழ்க்கையில் ஒழுங்கு இல்லாமல் இருந்தால் சுவிசேஷம் சொல்லாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் அது ஆபத்தைக் கொண்டுவந்து விடும். நம் நாட்டில் பிரசங்கம் மட்டும் மோசமில்லை, பிரசங்கிகளின் வாழ்க்கையே மோசமாக இருக்கிறது. அதனால் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைப்பதில்லை.
கடைசியாக, பெற்றோர்களுக்கு, உங்கள் பொறுப்பை உணர்ந்து கர்த்தருக்கு மதிப்புக் கொடுத்து உங்கள் பிள்ளைகளை ஆண்டவருடைய வழியில் வளர்த்துச் செல்லுங்கள்.
எபேசியர் 6:4 இல்
“பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என்று பவுல் சொல்லுகிறார்.
பிதாக்களே என்றால் தகப்பன்மார்கள் என்று அர்த்தம். பிள்ளைகளை நிதானத்தோடும் அன்போடும் அமைதியோடும் கவனத்தோடும் நீங்கள் வளர்க்க வேண்டும்.
கொலோசெயர் 3:21 இல்
“பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்” என்று பவுல் சொல்லுகிறார்.
பிள்ளைகளுக்கு உங்களை விட வயது குறைவு. நீங்கள் அவர்களுக்கு கோபமூட்டக்கூடாது, வெறுப்பை ஏற்படுத்தக்கூடாது. அவர்கள் உங்களைவிட பெலன் இல்லாதவர்களாக இருப்பதனால் பிள்ளை வளர்ப்பில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிள்ளைகளுக்கு இருதயம் கடினப்பட்டு கோபத்தோடு வளர்ந்து உங்களை மதிக்கமாட்டார்கள்.
பெற்றோர்களுக்கு எவ்வளவோ பெரிய பொறுப்பு இருக்கிறது, முக்கியமாகத் தகப்பன்மார்களுக்கு. எல்லா பொறுப்பையும் மனைவியிடம் விட்டுவிட்டு நீங்கள் பிள்ளைகளில் அக்கறை காட்டாமல் இருந்துவிடுவது சரியானதல்ல. தகப்பன்மார்களாக உங்களுக்கென்றும் பொறுப்பு இருக்கிறது. உங்கள் பிள்ளைகளை சரியாக வளர்த்தெடுக்க வேண்டிய பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை நீங்கள் செய்யாமல் விட்டு விடாதீர்கள். இந்த நாற்பத்திரண்டு பேருடைய கோரமான முடிவு உங்களோடு பேசட்டும்.
கர்த்தருடைய வார்த்தையை மீறுவது, அவருக்கு எதிராகச் செயல்படுவது ஆபத்தானது. தேவன் எந்தளவுக்கு அன்புள்ளவரோ அதே அளவுக்கு நீதியுள்ளவர் பரிசுத்தமானவர். அவர் பாவங்களைப் பொறுத்துக்கொள்ளமாட்டார், அவர் நம்மை நியாயந்தீர்ப்பார். அதை நிச்சயமாகச் செய்வார். இயேசு கிறிஸ்துவை நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் இன்றைக்கே மிகவும் தீவிரமாகச் சிந்தியுங்கள். கிறிஸ்துவிடம் வந்து அவர் இலவசமாகக் கொடுக்கின்ற இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.