2 இராஜாக்கள் 3:1-12 பழைய ஏற்பாடு ஒரு அருமையான வேத நூல். அது ஆண்டவரைப் பற்றி வரலாற்றின் மூலமாக அருமையான போதனைகளை நமக்குக் கொடுக்கிறது.
பழைய ஏற்பாட்டில் வரலாற்று நிகழ்ச்சிகளின் மூலம் அருமையான காட்சிகளை நாம் பார்க்கிறோம். அது மிகவும் மன எழுச்சியைக் கொடுக்கின்ற ஒரு நூலாக இருக்கிறது. பஞ்சவர்ணக்கிளியின் உடலில் பலவிதமான வர்ணங்கள் காணப்படுவதைப் போல பழைய ஏற்பாட்டில் ஆண்டவரின் செயல்களைப் பற்றியும், அவருடைய குணாதிசயங்களைப் பற்றியும், அவருடைய ஞானத்தைப் பற்றியும் நாம் அறிய முடிகிறது; அதிகமான நடைமுறைப் பயன்பாடுகளையும் அது நமக்குக் கற்றுக்கொடுக்கின்ற நூலாக இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இந்த 2 இராஜாக்கள் நூலில் இதுவரை பார்த்து வந்துள்ள வேதப் பகுதிகளைக் கவனிக்கின்றபோது அவை அருமையான வேத சத்தியங்களை உள்ளடக்கியதாக இருந்துள்ளதைக் கண்டிருக்கிறோம். இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 3:1-12 வரையுள்ள வசனங்களை நாம் ஆராய்ந்து பார்ப்போம்.
இந்தப் பகுதியை நாம் வாசிக்கின்றபோது அந்நாட்களில் இஸ்ரவேல் எந்தவிதமான நிலையிலிருந்தது என்பதை அவதானிக்க முடிகிறது. நாடு முழுவதும் மக்கள் ஆண்டவரை விட்டு விலகிப்போய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசர்கள் மிகவும் மோசமானவர்களாக இருந்து மக்களைத் தீய வழிகளில் வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தபோதும் நாட்டில் வார்த்தைப் பஞ்சம் முழுமையாக ஏற்பட்டுவிடாதபடிக்கு எலியாவையும், பிறகு எலிசாவையும் ஆண்டவர் அந்நாட்டுக்குக் கொடுத்திருந்தார். அரசர்களும், மக்களும் ஆண்டவருக்கு விரோதமாக எத்தனையோ காரியங்களைச் செய்தபோதும் அவர் இன்னும் அவர்களை முழுமையாகக் கைவிட்டுவிடாமல், எலிசாவின் மூலமாக, நான் உடன்படிக்கையின் தேவன் என்பதைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் அறிவித்து வருவதையும் இந்த நூலை வாசிக்கிறபோது அறிந்துகொள்ள முடிகிறது.
மோவாபியர் இஸ்ரவேலுக்கு எதிராகச் செய்த கலகம்
இந்தப் பகுதியில் மோவாபியர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கலகம் செய்ததைப் பற்றி அறிந்துகொள்கிறோம். 3, 4 வது வசனங்களில்,
“மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் செலுத்திவந்தான். ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான்” (2 இராஜாக்கள் 3:3-4) என்று நாம் வாசிக்கிறோம்.
- மோவாபியர்கள் ஏன் இவ்வாறு கலகம் பண்ணினார்கள்?
- அதற்குக் காரணமென்ன?
- இவர்கள் யார்?
என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலைக் கண்டுபிடிப்பது அவசியமாகிறது. இந்த மோவாபியர்கள் ஒரு காலத்தில் இஸ்ரவேலுக்குக் கீழாக இருந்து தொடர்ந்து இஸ்ரவேலால் ஆளப்பட்டு வந்தார்கள். இந்த மோவாபியர் இஸ்ரவேலின் ஆளுகைக்குக் கீழாக வந்ததற்குக் காரணம் இஸ்ரவேலின் வல்லமையல்ல, ஆண்டவரே மோவாபியர்களை இஸ்ரவேல் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதித்திருந்தார். மோவாபியர்கள் கலகம் செய்து சுதந்திர நாடாக இருப்பதற்குப் பல முறை முயற்சி செய்திருக்கிறார்கள். யோராமின் சகோதரன் அகசியாவைப் பற்றி நாம் ஏற்கனவே முந்திய ஆக்கங்களில் பார்த்திருக்கிறோம். அவனுடைய ஆட்சிக் காலத்திலும் இவர்கள் கலகம் செய்து பிரிந்து போக முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் அப்போது அவர்கள் தனித்துப் போவதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆகாப் இறந்த பிறகு மோவாபியர்கள் தாங்கள் இப்போது தனியாகப் பிரிந்து போய் சுதந்திரமாக வாழுவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று நினைத்து இப்போது அவர்கள் கலகம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆகாபைப் போல அவனுடைய மகன் பலம் வாய்ந்த அரசனல்ல என்று நினைத்து அவர்கள் அவ்வாறு செய்தார்கள்.
மோவாபியர்கள் கலகம் செய்ததைக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தண்டனையாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதை மோவாபியர்கள் சாதாரணமாகச் செய்த காரியமாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் அவ்வாறு செய்ததற்குக் காரணம் ஆண்டவர்தான். அதை இஸ்ரவேலின் இராஜாவின் வார்த்தைகளில் கவனிக்கிறோம்.
“அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.” (2 இராஜாக்கள் 3:10).
மோவாபியர்கள் கலகம் செய்து பிரிந்து போவதற்குக் காரணம் ஆண்டவர் அவர்கள் மூலம் நம்மைத் தண்டிக்கிறார் என்பதை யோராம் நன்கு அறிந்திருந்தான். ஏன் ஆண்டவர் இந்த மோவாபியர் மூலமாக இஸ்ரவேலைத் தண்டிக்க வேண்டும், என்கிற கேள்வி வருகிறது. அந்தக் கேள்விக்கான பதிலை இந்த அதிகாரத்தின் முதல் மூன்று வசனங்களில் பார்க்கிறோம்.
2 இராஜாக்கள் 3:1-3
யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான். என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.”
முதலாவது, யோராம் கர்த்தருக்கு முன்பாகக் கேட்டைச் செய்தான் என்று பார்க்கிறோம். அகசியா மிகவும் மோசமானவன் என்று ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். யோராமும் கூட அவனைவிட வித்தியாசமாக இருந்துவிடவில்லை. ஆண்டவரே யோராமின் மீது நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருகிறார் என்று பார்க்கிறோம். ஆனால், யோராம் எல்லாமே நலமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று எண்ணினான். அவன் பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம் செய்தான். இரண்டாவது வசனத்தில்
“கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல” (2 இராஜாக்கள் 3:2) என்று வாசிக்கிறோம்.
யோராம் தனக்குள்ளாகவே தான் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல என்று எண்ணினான். ஆகாப் மற்றும் யேசபேலைப் பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே. ஆகாப் கேடான மனிதர்களில் மிகவும் கேடானவனாக இருந்தான். அவனுடைய மனைவி யேசபேலும் மிகவும் மோசமானவளாக இருந்தாள். அவர்கள் இருவரும் கூட்டுச் சேர்ந்திருந்தால் எந்த நாட்டிற்கும் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களாக அவர்கள் இருவரும் இருந்தார்கள். அவர்களுக்கு மகனாகத்தான் யோராம் பிறந்தான். யோராம், தான் தன்னுடைய அப்பா அம்மாவைப் போல மோசமானவன் இல்லை என்று தனக்குள்ளே ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளுகிறான். யோராம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பை செய்தான், ஆனாலும் தன் தகப்பனைப் போலும் தாயைப் போலும் இல்லை என்று இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கிறோம்.
யோராம் ஏற்படுத்திக் கொண்ட சிறிய மாற்றம்
யோரோம் எப்படி தன் தகப்பனைப் போலும் தன் தாயைப் போலும் இல்லாமல் இருந்தான்? உண்மையிலேயே ஒரு சிறிய வித்தியாசம் இருந்தது. ஆனால் அது மிகவும் சிறிய வித்தியாசம் மட்டும்தான். இந்தச் சிறிய வித்தியாசத்தை யோராம் மிகவும் பெரிய வித்தியாசம் என்று எண்ணினான். இந்தச் சிறிய வித்தியாசம் யூதாவின் அரசனாகிய யோசபாத் இவனோடு கூட்டு சேருகிற அளவிற்குப் போயிருந்தது. யோசபாத் நல்ல அரசன்தான். யூதாவில் இருந்த எல்லா அரசர்களும் மோசமானவர்கள் அல்ல. ஆண்டவர் முதலில் இஸ்ரவேலைத் தண்டித்துப் பிறகுதான் யூதாவைத் தண்டித்தார். யோராமில் காணப்பட்ட இந்தச் சிறிய வித்தியாசம் யோசபாத் இவனோடு ஒத்துழைப்பதற்குக் காரணமாக இருந்தது.
அந்தச் சிறிய மாற்றம் என்ன என்பதை நாம் கவனிக்க வேண்டும். இரண்டாவது வசனத்தில்,
“கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்” (2 இராஜாக்கள் 3:2) என்று வாசிக்கிறோம்.
அநேகர் இதை வாசித்த உடனேயே இவன் எவ்வளவு நல்ல ராஜாவாக இருக்கிறான் என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். அது இந்த ஆக்கத்திற்கே மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் பார்த்த இந்த வசனம் தமிழ் வேதத்தில் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை. வேதத்தில் ஒரு வசனம் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லையென்றால் அந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ள பொருளையே அது மாற்றிவிடும். “தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான்” என்று தமிழில் இருக்கிறது. ஆனால் அது எப்படி மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டுமென்றால், “தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் புனிதத் தூணை இல்லாமல் ஆக்கிவிட்டான்” என்று இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் “The pillar of Baal” என்று இருக்கிறது. ஆனால் தமிழ் வேதத்தில், பாகாலின் சிலையை அகற்றிவிட்டான், அதாவது பாகாலையே இல்லாமல் ஆக்கிவிட்டான் என்று இருப்பது சரியான மொழிபெயர்ப்பு அல்ல. ஆகாப் பாகாலுக்கு புனிதத் தூணைச் செய்து வைத்திருந்தான். அதைத்தான் யோராம் இல்லாமல் ஆக்கிவிட்டான். மக்கள் பாகாலை ஆராதித்தது போல அந்தத் தூணையும் முக்கியத்துவம் கொடுத்து ஆராதித்து வந்தார்கள். மக்கள் முக்கியத்துவம் கொடுத்து ஆராதித்து வந்த அந்தத் தூணை அவன் அகற்றிவிட்டான். இதுதான் அவன் கொண்டுவந்த சிறிய சீர்த்திருத்தமாகவும் மாற்றமாகவும் இருக்கிறது. அவன் தகப்பனும் தாயும் செய்யாத ஒரு சிறிய மாற்றத்தை அவர்களுடைய மகனான யோராம் செய்திருக்கிறான் என்பதைக் கவனிக்கிறோம்.
உண்மையிலேயே யெரொபெயாம் கர்த்தருக்கெதிராக எத்தனை இழிவான செயலைச் செய்தான் என்பதை 1 இராஜாக்கள் 16 ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். ஆண்டவருக்கு விரோதமாக ஆண்டவருடைய பெயரைப் பயன்படுத்தித் தன்னுடைய சுயநலத்தினாலே அவருடைய ஆராதனையை மாற்றி அமைத்து, எல்லாவற்றையும் கர்த்தருக்காக செய்வதாகச் சொல்லி நாட்டு மக்கள் எல்லோரையும் ஏமாற்றித் தவறான வழியில் வழிநடத்தினவன் யெரொபெயாம் என்பதை அறிந்துகொள்கிறோம். யெரொபெயாம் மோசமான வழியில் போனான். அதுபோலத்தான் ஆகாபும் மிகவும் தீவிரமாகப் பாகால் வணக்கத்தில் மக்களை ஈடுபடுத்தினான் என்று நாம் பார்க்கிறோம். ஆனால் இங்கு யோராம் அந்த முறையில் இல்லாமல் ஒரு சிறிய மாற்றத்தை தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ளுகிறான் என்பதைக் காண்கிறோம். அவன் பாகாலை முழுமையாக அகற்றிவிடவில்லை என்றாலும் அதன் புனிதத் தூணை மட்டும் அகற்றிவிட்டான் என்பதை அறிகிறோம். இதிலிருந்து இன்னும் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய காரியங்கள் இருக்கின்றன. இவன் கொண்டுவந்த இந்த சிறிய மாற்றம் அல்லது சீர்திருத்தத்தால் யூதாவின் அரசனான யோசபாத்தே மனம்மாறி இவனோடு சேர்ந்து மோவாபியருக்கு எதிராகப் போவதற்குக் காரணமாக இருந்தது.
முதலாவதாக, யோராம் செய்த இந்த சிறிய மாற்றம் தனிப்பட்ட முறையில் அமைந்திருந்ததே தவிர தேசிய அளவில் நாடு முழுவதையும் தழுவியதாக இருக்கவில்லை. இது கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. மக்கள் மத விஷயங்களில் தங்களுடைய வழிகளில் போய்க்கொண்டிருந்ததை யோரோம் தடுக்கவில்லை. மூன்றாவது வசனத்தில்
“என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்” (2 இராஜாக்கள் 3:3) என்று நாம் வாசிக்கிறோம்.
யெரொபெயாம் ஏற்படுத்தின கன்றுக்குட்டி ஆராதனை முறையை இவன் மாற்றவில்லை. தாணிலும் பெத்தேலிலும் அவைகள் தொடர்ந்து இருந்தன. மக்கள் அவற்றைத் தொடர்ந்து ஆராதித்து வந்தனர். இவன் அவற்றையெல்லாம் தடை செய்யவில்லை. தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த அந்தக் கன்றுக்குட்டிகள் தொடர்ந்து இஸ்ரவேலில் இருந்து வந்தன. யோராம் அவற்றை அழிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நாட்டு மக்கள் ஆண்டவருக்கு எதிராக ஆராதனை செய்து அவருடைய கட்டளையெல்லாம் மீறி நடந்ததை இவன் எந்தவிதத்திலும் நிறுத்தவில்லை.
ஒரு அரசன் ஆண்டவருடைய வழியில் போக வேண்டும், அவருடைய வழிகளில் ஆராதனை செய்ய வேண்டும். ஆனால் யோராம் அதைச் செய்யவில்லை. தன்னுடைய கடமையிலிருந்தும், பொறுப்பிலிருந்தும் அவன் தவறிவிட்டான். இஸ்ரவேல் ஆத்மீக ரீதியில் என்னென்ன காரியங்களைச் செய்து கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி ஆராதனை செய்து வரவேண்டுமோ அதையெல்லாம் செய்வதற்கு இவன் எவ்விதத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவன் கொண்டுவந்த மாற்றம் ஒரு பெரிய மாற்றம் போல் கண்ணுக்குத் தெரிந்தாலும் அது வெறும் சிறு மாற்றம்தான். தனிப்பட்ட விதத்தில் மட்டும் அதைத் செய்து அவன் அதைப் பெரிய மாற்றமாக கர்வத்தோடு எண்ணிக் கொண்டிருந்தான். என் வாழ்க்கையிலும் மாற்றமுள்ளது, நான் என்னுடைய அப்பா அம்மா மாதிரி நடந்து கொள்ளவில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். அதுமட்டுமல்ல, அந்தத் தைரியத்தோடு அவன் யோசப்பாத்திடம் போனான் என்று பார்க்கிறோம். இவன் தன் வாழ்க்கையில் செய்துகொண்ட இந்த மிகச் சிறிய மாற்றம் மற்றவர்களும் இவனைப் பற்றி நல்லவிதமாக எண்ண வைத்தது.
இரண்டாவதாக, யோராம் செய்த இந்தச் சிறிய மாற்றம் அரசியல் லாபத்திற்காக செய்யப்பட்ட மாற்றமாகும். ஆகாப் மரித்த பின்பு யோராம் அரசியல் ரீதியாக கஷ்டமான சூழ்நிலையில் இருந்தான். ஆகாபைக் கண்டு அநேகர் பயந்திருந்தனர். ஆகாப் உயிரோடு இருந்தபோது மோவாபியர் எந்தப் பிரச்சனையும் கொடுக்கவில்லை. பலம்வாய்ந்த அரசனான ஆகாப் போய்விட்டான், பலமில்லாத யோராம் அந்த இடத்திற்கு வந்துவிட்டான் என்று மோவாபியர் அறிந்தவுடன் அவர்கள் அதிக பிரச்சனைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். யோராம் அதையெல்லாம் சிந்தித்துப்பார்த்து என்ன செய்யலாமென்று யோசித்தான். இப்போது அவனுக்கு யூதாவின் அரசனான யோசபாத்தின் உதவி மோவாபியருக்கெதிராகத் தேவையாக இருந்தது. ஆகவே அவனோடு ஒரு சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கான முயற்சிகளில் அவன் ஈடுபட்டான் என்பதைக் கவனிக்கிறோம். அதனால் அவன் பாகாலின் புனிதத் தூணை அகற்றிவிட்டு அரசியல் லாபத்திற்காக யோசபாத்தோடு உறவை ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்கிறான் என்பதைப் பார்க்கிறோம்.
2 இராஜாக்கள் 3:5-7
“ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினான். அக்காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் இலக்கம் பார்த்துப்போய்: மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு” என்று நாம் வாசிக்கிறோம்.
இந்த இடத்தில்தான் யோராமின் பச்சோந்தித்தனமான அரசியல் தந்திரத்தை நாம் கவனிக்கிறோம். தான் ஒரு மத சம்பந்தமான பெரிய மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்திக்கொண்டேன் என்று தன் உள்ளத்திலே எண்ணிக்கொண்டு, மற்றவர்களையும் அதை நம்ப வைத்து, அரசியல் லாபத்திற்காக யோசபாத்தையும் மாற்ற முயற்சி செய்கிறான் என்பதைப் பாருங்கள். இவ்வாறு அவன் செய்வதைப் பார்க்கும்போது மிகவும் புத்திசாலித்தனமாக அவன் நடந்துகொள்வதாக எண்ணத்தோன்றும். ஆனால் இதற்குப் பெயர் புத்திசாலித்தனமல்ல. அரசியல் லாபத்திற்காக அவன் போடும் நாடகந்தான் அது. யோசபாத்தும் அதை நம்பிவிட்டான் என்று 7 வது வசனத்தில் நாம் பார்க்கிறோம்.
“அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.” (2 இராஜாக்கள் 3:7).
யோரோமின் தந்திரத்தை எந்தளவுக்கு யோசபாத் நம்பி மோசம் போனான் என்பதை அவனுடைய வார்த்தைகளில் இருந்து அறிந்துகொள்கிறோம். ஆகவே இங்கு யோராமின் நாடகம் வெற்றி அடைந்தது.
மூன்றாவதாக, யோராமில் நடந்த இந்த மாற்றம் வெறும் வெளிப்புறமான மாற்றமே தவிர அவன் இருதயத்தில் ஏற்பட்ட உண்மையான மாற்றமல்ல. அதாவது பாகாலின் புனிதத் தூணை யோரோம் அகற்றியதை நாம் கவனித்த உடன் என்ன நினைப்போம்? சிலைகளையெல்லாம் அகற்றிவிட்டான், ஆகவே அவன் இதுவரை வணங்கி வந்த அந்த உருவ வழிபாட்டை நிறுத்திவிட்டான் என்றுதான் நாம் நினைப்போம். ஆனால் வெளிப்புறமாக மட்டும் யோரோம் அதைச் செய்ததற்குக் காரணமிருந்தது. அதை செய்கிறவர்களை நாம் பார்க்கிறபோது அவர்கள் அதை ஏன் செய்தார்கள் என்ற காரணத்தை நாம் அறிய முடியாது. அவர்களுடைய செயல்களை வைத்து அவர்கள் திருந்திவிட்டார்கள், அவர்கள் இனிமேல் உருவ வழிபாட்டில் ஈடுபடமாட்டார்கள் என்றுதான் நாம் நினைப்போம். சிலைகளை ஒருவன் தூக்கி எறிந்துவிட்டான் என்பதனால் அவன் கர்த்தரை வணங்க ஆம்பித்துவிட்டான் என்று அர்த்தமாகிவிடாது. யோராமில் காணப்பட்ட இந்த வெளிப்புறமான மாற்றம் அவன் இருதயத்திலிருந்து புறப்பட்ட உண்மையான மாற்றமல்ல. ஏனென்றால் பாகாலின் புனிதத் தூணை தூக்கியெறிந்தவன் நாட்டிலிருந்த பாகால் ஆராதனைகளை எந்த விதத்திலும் நிறுத்தவில்லை என்று நாம் கவனிக்கிறோம். அதை நாம் 3 வது வசனத்திலே பார்க்கிறோம்.
“என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான்.” (2 இராஜாக்கள் 3:3).
மற்றவர்களை ஏமாற்றுவதற்காகவும், தனக்குத்தானே சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், அரசியல் லாபத்திற்காவும் ஒரு சிறிய மாற்றத்தை அவன் வாழ்க்கையில் செய்தான். அவன் அதைத் தன் இருதயத்தில் உண்மையாக ஏற்பட்ட ஒரு ஆவிக்குரிய மாற்றத்தினால் செய்யவில்லை.
ஆண்டவர் மோவாபியரைப் பயன்படுத்தி இஸ்ரவேலுக்கு ஒரு தண்டனையைக் கொண்டுவந்தால் நிச்சயமாக அதற்குக் காரணம் இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். காரணமில்லாமல் ஆண்டவர் எவரையும் தண்டிக்கமாட்டார். ஒருவரின் வெளித்தோற்றத்தை மானிடர்களாகிய நாம் பார்க்கிறபோது அவருடைய இருதயத்தைக் காண முடியாது. ஆனால் தேவன் இருதயங்களைப் பார்க்கிறவர். அவரிடமிருந்து எந்தவிதமான இரகசியத்தையும் நாம் மறைக்க முடியாது. அவருடைய கண்களுக்குத் தப்பிப்போகிற எந்தக் காரியமும் இருக்கமுடியாது. யோராம் போடுகிற நாடகமெல்லாம் ஆண்டவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆண்டவருடைய வார்த்தை நம் கரத்தில் இருப்பதனால் யோராமின் செயல்களுக்கான காரணத்தை நாம் இப்போது வாசித்துத் தெரிந்துகொள்ளுகிறோம். ஆனால் அன்றைய காலகட்டத்தை யோசித்துப் பாருங்கள். இது எவருடைய கண்களுக்கும் புலனாகவில்லை. நாட்டிலிருந்த கொஞ்ச விசுவாசிகளுங்கூட இந்த அரசன் தன் அப்பா அம்மாவைப் போல இல்லாமல் நல்லவனாக இருக்கிறாரே என்று நினைத்திருப்பார்கள். யோசபாத் அரசனும் கூட இவனுடைய மாற்றத்தை நம்பிவிட்டான் இல்லையா? ஆண்டவர் நாம் வெளிப்புறமாக என்ன செய்கிறோம் அதை மட்டும் பார்ப்பதில்லை. அவருக்கு நம் இருதயத்தை பார்க்கத் தெரியும். எந்த நோக்கத்திற்காக நாம் வெளிப்புறமான காரியங்களைச் செய்கிறோம் என்பது ஆண்டவருக்கு நன்றாகத் தெரியும். ஆகவேதான் ஆண்டவர் மோவாபியரை இஸ்ரவேலுக்கு எதிராகக் கலகம் செய்ய அனுமதித்து இந்த ஆபத்தை உண்டுபண்ணுகிறார் என்று நாம் கவனிக்கிறோம்.
இங்கு சில பயன்பாடுகளைக் கவனிப்பது அவசியமாகிறது.
முதலாவதாக, எந்தவொரு மனிதனும் வெளிப்பார்வைக்கு மாறிவிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் அது மெய்யான ஆவிக்குரிய மாற்றமாக இருக்க முடியாது. அது எப்போதுமே சுய அழிவில்தான் போய் முடியும்.
யோராம் தன் வாழ்க்கையில் உண்மையிலேயே மாறவில்லை. அவன் இதுவரை செய்துவந்த பொல்லாங்குகளை எல்லாம் நிறுத்திக்கொள்ளவில்லை. கர்த்தரை வணங்காமல் கர்த்தருடைய ஆராதனையைத் தொடர்ந்து அவர் வழியில் செய்யாமல் இருந்ததை எல்லாம் அவன் நிறுத்திக்கொள்ளவில்லை. ஒரு சிறிய மாற்றத்தை மட்டுமே வாழ்வில் செய்தான். பாகாலின் புனிதத் தூணை அவன் அகற்றினான். பத்துப் பாவங்களில் முக்கியமானதொன்றை மட்டும் தூக்கி எறிந்துவிட்டான். அது நல்லதுதான், அதைப் பாராட்ட வேண்டும். ஆனால் அது உண்மையான மாற்றமா?
35 வருடங்களுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்லுகிறேன். எனக்கு ஒரு மாமா இருந்தார். அவர் ஒரு இந்து. பல தெய்வ வழிபாட்டை அவர் செய்து வந்தார். அவர் வீட்டில் ஒரு பெரிய பூஜை அறை இருந்தது. அந்த அறையில் ஒரு மூலையிருந்து சுற்றிவர விக்கிரக படங்களாக வைத்திருந்தார். என்னென்ன தெய்வங்கள் ஊரில் இருக்கிறதோ அத்தனை விக்கிரகங்களின் படங்களும் அந்தப் பூஜை அறையில் இருந்தன. அவர் அதிக பணத்தைக் கோயிலுக்குக் கொடுப்பார், எல்லாருக்கும் உதவி செய்வார், விக்கிர ஆராதனைக்கு அதிகமாக செலவழிப்பார். ஒவ்வொருநாளும் விக்கிரக ஆராதனை வீட்டில் நடந்துகொண்டிருக்கும். அந்தக் காலப்பகுதியில்தான் நான் ஆண்டவரை அறிந்து கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் நடந்த மாற்றத்தை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருநாள் அவர் என்னிடம் உன்னில் நடந்த மாற்றத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை, எனக்குப் புரியும்படித் தெளிவாகச் சொல்லு என்று கேட்டார். ஏனென்றால் உன் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது எனக்குத் தெரிகிறது, அது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, நானும் அவ்வாறு மாற ஆசைப்படுகிறேன் என்றார். நானும் அவருக்கு சுருக்கமாகவும் விளக்கமாகவும் சுவிசேஷத்தை சொன்னேன். அவரும் கேட்டார், அன்று இரவு முடிந்து காலையில் எழுந்து அவர் என் அறைக்கு வந்தார். நானும் கிறிஸ்தவனாக மாறிவிட்டேன் என்று சொன்னார். நானும் மிகவும் ஆச்சரியப்பட்டு அது எப்படி நடந்தது எனக்கு சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் என் கையைப் பிடித்து அவருடைய பூஜை அறைக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவர் என்ன செய்கிறார் என்று எனக்குப் புரியவில்லை, இருந்தபோதும் அவரோடு போய்ப் பார்த்தால், அவருடைய பூஜை அறையில் ஏற்கனவே இருந்த படங்களோடு இயேசு கிறிஸ்துவின் படத்தையும் வைத்திருந்தார். அவர் என்னை நோக்கி, அங்கு பார், நான் இப்போது இயேசுவையும் வணங்க ஆரம்பித்துவிட்டேன் என்று சொன்னார். அப்போது நான் அவரைப் பார்த்துச் சொன்னேன்: அது தவறு, ஒரு மனிதன் இந்தவிதத்தில் கிறிஸ்தவனாக மாற முடியாது. நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்துவை விசுவாசித்திருந்தால் இந்த அறையில் ஒரு படம் தவறாமல் அனைத்துப் படங்களும் காணாமல் போயிருக்கும் என்று சொன்னேன். அவர் அதற்குப் பிறகு எத்தனையோ சுவிசேஷ கூட்டங்களுக்கெல்லாம் சென்றிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் இன்று வரையும் அவரில் மனமாற்றமும், விசுவாசமும் நிகழவில்லை. ஆகவே மனிதன் எப்போதும் வெளிப்புறமான மாற்றங்களைச் செய்துகொள்ளுவதற்குத் தயாராக இருப்பான்; உட்புறத்தில் ஆவிக்குரியவிதத்தில் ஒன்றுமே நிகழ்ந்திருக்காது. வேதத்தில் அது போன்று அநேக உதாரணங்களை நாம் பார்க்கிறோம்.
ஒரு பணக்கார இளம் வாலிபன் இயேசுவினிடத்தில் வந்தான் என்று சுவிசேஷ நூல்களில் நாம் வாசிக்கிறோம் (லூக்கா 18). அவனுக்கு நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் அதிகமாக இருந்தது. அதைப்பற்றிக் கேட்பதற்காகத்தான் இயேசுவிடம் அவன் வந்தான். அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பது ஆண்டவருக்கும் நன்றாகத் தெரிந்திருந்தது. அப்போது ஆண்டவர் அவனைப் பார்த்து உன் வாழ்க்கையில் பத்துக் கட்டளைகளை ஒன்றுவிடாமல் பின்பற்று என்று சொன்னார். அதற்கு அவன், அவற்றை சிறுவயது முதல் கடைப்பிடித்து வருகிறேன் என்று சொன்னான். அவன் சொன்னதில் ஓரளவுக்கு மட்டும் உண்மையிருந்தது; முழு உண்மையும் இல்லை. ஏனென்றால் வெளிப்புறமாகப் பரிசேயர்கள் செய்ததுபோல பத்துக் கட்டளைகளை வாழ்க்கையில் செய்வதற்கு அவன் முயற்சி செய்து வந்திருக்கிறான். அப்போது ஆண்டவர் அவனிடம், உன்னிடத்தில் இருப்பதை எல்லாம் இல்லாதவர்களுக்குக் கொடுத்துவிடு என்று சொன்னார். அவனால் அதைச் செய்யமுடியவில்லை, அவன் துக்கத்தோடு திரும்பிப் போனான் என்று வாசிக்கிறோம். ஏனென்றால் இருதய மாற்றத்தை நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ள முடியாது. அவனுடைய இருதயம் பாவத்தில் இருந்தது, பாவம் எந்த வழியில் செல்லுமோ அதே வழியில்தான் அவனுடைய இருதயமும் சென்று கொண்டிருந்தது. அவனைப் பொறுத்தளவில் தன் சொத்துக்களை அவன் இழக்க விரும்பவில்லை. அவையே அவனுக்குக் கடவுளாக இருந்தது. அதுவே அவனுடைய உருவ வழிபாடு. அதை அவனால் விடமுடியவில்லை. இருதயத்தில் சுயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள எந்தவொரு மனிதனாலும் முடியாது. யோராம் செய்ததுபோல ஒரு தூணைத் தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் இருதயத்தை உங்களால் மாற்றிக்கொள்ள முடியாது.
அநேக சபைகளில் ஆண்டவரைப் பற்றிச் சொல்லிவிட்டு, உடனடியாக ஞானஸ்நானம் எடுத்துக்கொள்ளுகிறீர்களா என்று கேட்டு அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிடுவார்கள். உண்மையில் இதற்கு அநேகர் ஒப்புக்கொள்ளுவார்கள். ஏனென்றால் வாழ்க்கையில் வெளிப்புறமானதொரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளுவதில் மனிதனுக்குப் பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை. அதனால்தான் அவனுக்கு சில தடவைகள் கோயிலுக்குப் போவது ஒரு பிரச்சனை இல்லை. இந்தியாவில் ஒரு நாளைக்கு அநேக தடவை இந்துக்கள் கோயிலுக்குப் போகிறார்கள். நமக்கு இரண்டு முறை ஆராதனைக்கு போவதே கஷ்டமாக இருக்கிறதில்லையா? காலையில் வருகிற எல்லாருமே மாலை ஆராதனைக்கு வந்துவிடுகிறார்களா? வருவதில்லை. போதகர்கள் அவர்களை விசாரிக்க வேண்டும். ஆண்டவர் முழுநாளையும் ஆராதனைக்குக் கொடுக்கும்படியாகக் கேட்டிருக்க, நீங்கள் ஒரு நேரம் மட்டும் ஆராதனைக்கு வருவதற்குக் காரணமென்ன என்று கேட்கவேண்டும். எதுவும் இருதயத்தில் இருந்துதான் எழமுடியும். ஆனால் ஒரு இந்துவோ அல்லது இஸ்லாமியனோ பல தடவைகள் கோயிலுக்கோ மசூதிக்கோ போய்விடுகிறான். வெளிப்புறமான காரியங்களைச் செய்வது அவனுக்குச் சுலபம். இதே போலத்தான் செல்வந்தனான வாலிபனும் செய்தான், இதேபோலத்தான் யோராமும் செய்தான். வெளிப்புறமான காரியங்களை அவர்களால் செய்ய முடிந்தது, ஆனால் உள்ளான நிலையில் இருதயத்தில் மாற்றத்தை அவர்களால் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. இருதய மாற்றத்தைக் கொண்டுவருவது ஆண்டவர் மட்டும்தான். மனிதனால் சுயமாகத் தன்னுடைய இருதயத்தை மாற்றிக்கொள்ள முடியாது. வெளிப்புறமான காரியங்களை மட்டும் வைத்து ஒருவன் கர்த்தரை ஆராதிக்கிற மனிதன் என்ற ஆவிக்குரிய தீர்மானத்திற்கும் வந்துவிட முடியாது. புறத்தில் காணப்படும் மாற்றத்திற்கு ஆதாரமாக இருதயத்தில் உண்டாகியிருக்கும் மாற்றத்தை நாம் கவனிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆகவே யோராமின் மாற்றம் உண்மையான மனமாற்றமல்ல. அது பாகாலின் புனிதத் தூணைத் தூக்கி எறிவதில் மட்டுமே முடிந்திருந்ததே தவிர வேறெந்தவிதமான ஆவிக்குரிய மாற்றமும் அவனில் ஏற்படவில்லை.
இரண்டாவதாக, வாழ்க்கையில் வெளிப்புறமாக ஏற்படுத்திக்கொள்ளும் சீர்திருத்தம் கவர்ச்சிகரமாக இருக்கலாம்.
யோராம் அதையே செய்தான். ஏனென்றால் ஆகாப் செய்யாததை மகன் செய்திருக்கிறானே, அகசியா செய்யாததை யோராம் செய்திருக்கிறானே. அவர்கள் இருவரும் புனிதத் தூணைத் தூக்கி எறியவில்லையே. ஆனால் யோராம் அதைச் செய்திருக்கிறான். அப்பாவைவிட இவன் நன்றாக இருக்கிறான் என்று அநேகர் அதைப் பாராட்டி இருப்பார்கள். ‘தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல’ என்று வசனமும் சொல்லுகிறதல்லவா! ஆகவே அவன் செய்த காரியம் கவர்ச்சிகரமாக இருந்திருக்கிறது. அது கவர்ச்சிகரமாக இருந்திருந்தாலும் இந்த மாதிரியான செயல்கள் ஒரு மனிதனில் ஆவிக்குரிய மாற்றங்களுக்கு அடையாளமல்ல.
பிரபல பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் ஒருமுறை சொல்லியிருக்கிறார், கர்த்தரைத் தேடுவது என்பது ஒரு மனிதனில் எந்தளவில் இருந்தாலும் அது நன்மையில்தான் போய் முடியும் என்கிற நம்பிக்கையை நமக்குத் தரலாம். ஆனால் அது உண்மையானதல்ல. அப்படியான அந்தத் தேடுதல் மெய்யான இரட்சிப்பில் போய் முடியவேண்டும் என்கிறார் ஸ்பர்ஜன். சிலர் அதிகமாகக் கர்த்தரைத் தேடுகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு அவரில் நம்பிக்கை இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது உண்மையானதல்ல. அந்தத் தேடுதல் இரட்சிப்பில் போய் முடியாதவரை அதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆகவே வெளிப்புற மாற்றங்கள் சில நேரங்களில் நல்லதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் காணப்பட்டாலும் அது உண்மையான மனமாற்றத்திற்கு ஆதாரமில்லை. அப்படியாக வெளிப்புறம் மட்டும் பரிசேயர்களைப் போல வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் சட்டவாதிகளாக (legalist) மாறிவிடுகிறார்கள். அவ்வாறு செய்வதுதான் அவர்களுக்கு ஆத்மீகக் காரியங்களாகத் தெரிகிறதே தவிர மெய்யான இருதய மாற்றத்தில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
நம்முடைய பிள்ளைகளுக்கு வேதத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். அதை வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், ஜெபிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வீட்டில் நேரத்தை வீணடிக்காமல் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் பெற்றோர்கள் கட்டாயம் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதில் நிச்சயமாக பிரயோஜனம் இருக்கிறது. இருந்தபோதும் ஒருவர் தன்னுடைய பிள்ளைகள் வேதத்தை வாசித்தும், ஜெபித்தும், ஆலயத்துக்கும் போய்வருகிறார்கள் என்பதால் அவர்கள் ஆண்டவரிடத்தில் வந்துவிட்டார்கள் என்று நினைக்கக்கூடாது. ஆண்டவர் அந்தக் கருவிகளைப் பயன்படுத்தி பிள்ளைகளில் இருதய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு நாம் கர்த்தரிடத்தில் அன்றாடம் முழங்கால் படியிட்டு ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் அது தேவன் மட்டுமே செய்யக்கூடிய காரியமாகும். அதை நாம் செய்துவிட முடியாது. வேதம் வாசிப்பதாலோ ஜெபிப்பதாலோ பிள்ளைகள் கிறிஸ்தவர்களாக ஆகிவிட்டனர் என்று நினைக்கக்கூடாது. அந்த செல்வந்தனான வாலிபன் அதையெல்லாம் செய்திருந்தும் கர்த்தரிடம் வரவில்லையே. ஆனால் அது நல்லது, அத்தகைய ஆவிக்குரிய செயல்கள் அவர்களை அதிகமான பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் தள்ளிவைக்கும். அதில் அதிக பயன்கள் இல்லாமல் இல்லை. இருப்பினும் அவர்களின் இருதய மாற்றத்திற்கு ஆண்டவரிடத்தில்தான் நாம் போக வேண்டும். அவர் மட்டுமே அந்தக் கிரியையைச் செய்கிறவர். ஏனென்றால் இரட்சிப்பு அவரிடத்திலிருந்து வருகிறது. எதுவும் இரட்சிப்புக்கு ஈடாகாது. எவ்வளவோ நல்ல காரியங்கள் ஒருவனில் இருந்தபோதும் அவனுக்கு இரட்சிப்பு கிடைப்பதற்கான சுவிசேஷத்தைத் தொடர்ந்து சொல்ல வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே வெளிப்புற காரியங்களில் மட்டும் நாம் கவனத்தைச் செலுத்திவிடக்கூடாது. உட்புறமாக இருதய மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த இருதய மாற்றம் சுவிசேஷத்தின் மூலமாக பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனில் செய்கிற காரியமாகும். யோராமின் இருதயத்தில் அது இல்லாமல் இருந்தது. உங்கள் நிலை எப்படி என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். யோராம் ஒரு சின்ன சீர்திருத்தத்தைத் தன் வாழ்க்கையில் செய்து கொண்டான். அதைப் பெருமையாக எண்ணினான். அதைப் பயன்படுத்தி யோசபாத் நம்புகிற அளவிற்கு நாடகமாடினான். அதனால் என்ன பிரயோஜனம்? அவன் வாழ்க்கை மாறவே இல்லை.
இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். யோசபாத் விட்ட பெரிய தவறு அது. யோசபாத் இந்த வெளிப்புற மாற்றத்தை உண்மையென்று நம்பியது மிகவும் தவறு. ஆகவேதான் போதகர்களும், கிறிஸ்தவர்களும் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அநேக மக்கள் இவ்வாறு நம்மை ஏமாற்றிவிடலாம். நிதானத்தோடு ஒருவரின் விசுவாசத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம். உணர்ச்சிவசப்பட்டு அவர்கள் செய்வதெல்லாம் உண்மையென்று நம்பிவிடக்கூடாது. இந்தளவுக்கு வெளிப்புறமான மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு முழு சபையையும் கூட ஏமாற்றிவிடலாம் என்பதற்கு யோராம் ஒரு உதாரணமில்லையா?
மூன்றாவதாக, உண்மையான இருதய மாற்றத்தைக் கொண்டுவரக் கூடியவர் பரிசுத்த ஆவியானவர் மட்டுமே.
பரிசுத்த ஆவியானவர்தான் தேவனுடைய வார்த்தையான சுவிசேஷத்தைப் பயன்படுத்தி இருதயங்களில் மாற்றத்தைக் கொண்டு வருகிறார் என்பதை இயேசு கிறிஸ்து அருமையாக யோவான் மூன்றாம் அதிகாரத்தில் நிக்கொதேமுவுக்கு போதித்தார். நிக்கொதேமுவும் அந்த செல்வந்தனான வாலிபனைப் போல பத்துக் கட்டளைகளை அன்றாடம் கடைப்பிடிக்க முயற்சி செய்து தன்னை கர்த்தருடைய மனிதனாக நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு இருதய மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆகவேதான் ஆண்டவர், ஒருவன் பத்துக் கட்டளைகளை வாழ்க்கையில் நடைமுறையில் பின்பற்றி கிறிஸ்தவனாக முடியாது என்று விளக்கியிருக்கிறார். இருதய மாற்றம் ஆவியானவர் செய்கிற காரியம். ஆவியானவர் செய்கிற கிரியை காற்று வீசுவதைப் போல இருக்கிறது. ஏனென்றால் காற்றை இங்கே போ அங்கே போவென்று யாரும் சொல்ல முடியாது. அது எங்கிருந்து வருகிறது எங்கே போகிறது என்று கூட நமக்குத்தெரியாது. அதேபோல் ஆவியானவரும் தன்னுடைய சித்தத்தின்படி கிரியை செய்கிறவராக இருக்கிறார். அவர் வார்த்தையைப் பயன்படுத்தித் தன் சித்தத்தின்படி கிரியை செய்கிறபோது, அது நம்மில் நிகழும்போது அதனுடைய மாற்றங்களை அறிந்து கொள்ளுகிறோம், உணருகிறோம். ஆகவே அதை அவர் மட்டுமே செய்ய முடியும்.
உண்மையிலேயே யோராமின் வாழ்க்கையில் ஆவியானவரின் கிரியை நிகழ்ந்திருந்தால் அவன் என்ன செய்திருப்பான் என்று நினைக்கிறீர்கள்? அவன் பாகாலின் புனிதத் தூணை மட்டுமல்ல அந்த நாடு முழுவதும் இருந்த அத்தனைப் பாகால் வணக்கங்களையும் இல்லாமல் ஆக்கியிருப்பான். வேதத்தில் யோசியா என்கிற அரசன் அவ்விதம் செய்திருக்கிறான். 2 நாளாகமம் 34 ஆம் அதிகாரத்தில் அதை நாம் வாசிக்கிறோம். ஆண்டவர் ஆவியானவர் மூலம் இருதய மாற்றத்தை நிகழ்த்துகிறபோதுதான் ஒரு மனிதன் எல்லாவிதமான உருவ வழிபாட்டிற்கும் முடிவுகட்டி அந்தவிதமான சிந்தனைகள் எல்லாம் தொடர்ந்து இல்லாதபடி ஒரு புதிய மனமாற்றத்தை அடைந்து ஒரு புதிய ஜீவனாகிறான் என்று வேதம் சொல்லுகிறது. ஆவியானவர் இரட்சிப்பை இலவசமாகக் கொடுக்கிறார். அது ஆண்டவரிடத்திலிருந்து வருகிறது. ஆவியானவர் அப்படியான மாற்றத்தைக் கொண்டுவருகிறபோது இருதயத்தில் நம் சிந்தனைகள் எல்லாமே முழுமாற்றம் அடையும். அது அரைகுறை மாற்றமாக இருக்காது. அது உண்மையான மாற்றமாக இருக்கும்.
ஆண்டவர் பிறவிக் குருடனாக இருந்தவனுக்கு பார்வை அளித்தபோது அவன் என்ன சொன்னான்? இதுவரை நான் குருடனாக இருந்தேன், இப்போது எனக்குப் பார்வை கிடைத்திருக்கிறது என்று எந்தவித பயமுமில்லாமல் தைரியத்தோடு எல்லோரும் அதைக் கேட்கும்படி சொன்னான். எந்த பயமும் இல்லாமல் அவன் சொன்னதற்குக் காரணம் ஆவியானவர் அவனுடைய இருதயத்தில் நிகழ்த்திய மாற்றத்தினால்தான். பிலிப்பு நாட்டில் பவுல் ஆற்றங்கரையில் சென்று பிரசங்கம் செய்தபோது லீதியாளுக்கும் அப்படியான மாற்றம் நிகழ்ந்தது. வார்த்தையின் மூலமாக அவளுடைய இருதயம் மாற்றமடைந்தது. இன்னொருவனான கெட்டகுமாரனைப்பற்றி வாசிக்கும் போதும் அதைத்தான் பார்க்கிறோம். அவனுக்குப் ‘புத்தி தெளிந்தபோது’ என்று நாம் வாசிக்கிறோம். புத்தி தெளியாத ஒரு காலமும் வாழ்க்கையும் அவனில் இருந்தது. புத்தி தெளிந்தது என்கிற வார்த்தைப் பிரயோகம் எதைக் குறிக்கிறது? தேவனுடைய ஆவியானவர் அவனுடைய இருதயத்தில் நிகழ்த்தியிருந்த காரியத்தைக் காண்பிக்கிறது. அதனால்தான் அந்த இடத்தில் அவன் தொடர்ந்து இருக்காமல் எழுந்து தன்னுடைய தகப்பனிடத்தில் போய் என்னென்ன சொல்லத் தீர்மானித்திருந்தானோ அனைத்தையும் சொன்னான் என்று நாம் பார்க்கிறோம். ஆகவே உள்ளத்தில் மாற்றத்தைக் கொடுப்பது பரிசுத்த ஆவியானவர் என்பதை நாம் உணரவேண்டும். அது யோராமின் வாழ்க்கையில் நடக்கவில்லை.
கடைசியாக, நீங்கள் உங்கள் இரட்சிப்பிற்கும், நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவதற்கும் இயேசு கிறிஸ்துவை இரட்சகராகவும் தேவனாகவும் விசுவாசிக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் உங்களுடைய வாழ்க்கை ஒருநாளும் மாற்றமடையாது. அநேகர் சுவிசேஷத்தைக் கேட்கும்படியாக சபைக்கு வருவார்கள், அப்படி வருகிறவர்களுக்கு பலவிதமான ஏக்கங்கள், கவலைகள், தொல்லைகள், பிரச்சனைகள் இருக்கும். இந்த உலகத்தில் தேவைகள் இல்லாத மனிதன் இல்லையென்று ஒருவரும் இல்லை. அப்படியான சூழ்நிலையில் இதிலிருந்து விடுவிக்கிறேன் என்று ஆண்டவர் சொல்லுவதால் ஒருவருக்கு கிறிஸ்தவராக வருவதற்கு விருப்பம் இருக்கும். அதிலொன்றும் தவறில்லை. நம் ஆண்டவர் தேவைகளைத் தீர்க்கிற ஆண்டவர்தான். ஆனால் அவர் ஆத்மீக தேவைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஆகவே அவர்கள் சில நேரம் தொடர்ந்து கூட்டத்திற்கு வருகிறோம் என்று சொல்லலாம், வேதத்தை வாசிக்கிறோம் என்று சொல்லலாம், இன்னும் என்னென்னவோ செய்யலாம். அதெல்லாம் நல்லவையே, அவைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும், நிறுத்தக் கூடாது. ஆனால் அவர்கள் ஒரு சின்ன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இல்லாமல் இயேசு கிறிஸ்துவே ஜீவனுள்ள தேவன், அவர் மட்டுமே சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்து எல்லாருடைய பாவங்களையும் இல்லாமல் ஆக்குவதற்காகத் தானே ஒரே பலியாக மரித்தார், அவர் தேவனுடைய ஒரே குமாரனான இயேசு என்று அவர்கள் விசுவாசிக்க வேண்டும். தங்களைப் பிடித்திருக்கிற பாவம், தங்களுக்குள்ளே இருக்கிற பாவம் போக இயேசு தேவை என்பதை அவர்கள் உணர வேண்டும். பாவத்தில் இருப்பதால்தான் கண்ட கண்ட தெய்வங்களை வணங்கிக் கொண்டிருக்கிறேன், என்னை விட்டு முதலில் பாவம் நீங்க வேண்டும், அது நீங்காதவரை நான் நல்லவனாக வாழ முடியாது, பாவம் இருக்கிறவரை மெய்யான ஆண்டவரை வணங்க முடியாது என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட வேண்டும். அப்படியான பாவ உணர்வைக் கொடுக்கிறவரே பரிசுத்த ஆவியானவர்தான். அவர் இல்லாமல் ஒருவரும் பாவத்தைப் பற்றி நினைக்க முடியாது.
பாவத்தைப் பற்றி ஒருவன் பேச ஆரம்பித்துவிட்டாலே அவன் நல்ல வழியில் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான் என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கு யாருமே பாவத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆண்டவருக்கு முன்பாக நாம் அனைவரும் நல்லவர்களாக அல்ல, பாவிகளாக நிற்கிறோம். அவர் நம்மைப் பார்க்கிறபோது அவருக்கு நாம் நன்மையானவர்களாகத் தெரியவில்லை, அநீதியுள்ளவர்களாகத் தெரிகிறோம். அதற்குக் காரணம் நம்முடைய பாவம்தான். அந்தப் பாவம் இல்லாதிருந்தால் பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பியிருக்கவே மாட்டார். நம்மைப் பிடித்திருக்கிற பாவத்தை நீக்குவதற்கு வேறுயாருமே இல்லை. ஆகவேதான் அந்த ஜீவனுள்ள தேவன் நம்முடைய பாவங்களுக்காக தன்னை பலியாகக் கொடுக்க வந்தார். அந்தப் பாவம் உங்களைப் பிடித்திருக்கிறது என்பதை உணருகிறீர்களா? அந்தப் பாவத்தைப் போக்குகிறவர் இயேசு கிறிஸ்து மட்டுமே என்பதை விசுவாசிக்கிறீர்களா? அந்தப் பாவத்தைப் போக்குவதற்காக இயேசு தன் இரத்தத்தை சிந்தினார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அந்தப் பாவம் போவதற்காக, அதிலிருந்து விடுதலை கிடைப்பதற்காக, ஆண்டவருடைய சமாதானத்தை அடைவதற்காக, அந்த இயேசுவை இரட்சகராகவும், ஆத்தும விடுதலை கொடுக்கிறவராகவும், அவரே ஜீவனுள்ள தேவனாகவும், ஆண்டவராகவும் நீங்கள் விசுவாசிக்க ஆரம்பித்தால் நீங்களும் யோசியா அரசனைப் போல வரலாம். எத்தனையோபேர் ஆண்டவரிடம் வந்து பாவத்தை உணர்ந்து, அந்தப் பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டு, வரப்போகிற நியாயத்தீர்ப்பிலிருந்து தப்புவதற்காக ஆண்டவரை விசுவாசித்திருக்கிறார்கள். அதை ஏன் நீங்கள் செய்யக்கூடாது? யோராம், அகசியா போல தன் வாழ்க்கையில் கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்களை வீணாக்கிக் கொண்டார்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஆண்டவர் உங்களுக்கும்கூட எத்தனையோ சந்தர்ப்பங்களைக் கொடுத்திருக்கிறார் அல்லவா! அந்த சந்தர்ப்பங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுகிறீர்களா? ஏன் நீங்கள் இன்னும் இயேசுவை விட்டு தள்ளி நிற்கிறீர்கள்? அவரை விசுவாசிப்பதற்கு உங்கள் இருதயம் இன்னும் ஏன் இடம் கொடுக்காமல் இருக்கிறது? ஆண்டவர் இலவசமாகத் தருகிறேன் என்று சொல்லுகிற நித்திய ஜீவனை நீங்கள் ஏன் இயேசுவினிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடாது? யோராம் ஒரு சிறு மாற்றத்தை தன் வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொண்டு ஒரு ஆத்தும நாடகத்தை ஆடினானே தவிர உண்மையான விசுவாசியாக முடியவில்லை. உங்கள் நிலைமை எப்படி? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதைத்தான் இன்றைக்கு இயேசு உங்களிடம் கேட்கிறார்.