2 இராஜாக்கள் 1:1-18 இந்த ஆக்கத்தில் இரண்டு இராஜாக்கள் முதலாவது அதிகாரத்தை நாம் ஆராயப் போகிறோம். தமிழ் வேதத்தில், பழைய ஏற்பாட்டில், முதலாவது இராஜாக்கள், இரண்டாவது இராஜாக்கள் என்று பிரித்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் மூல மொழியான எபிரெய வேதத்தில் இது ஒரே நூலாகத்தான் காணப்படுகிறது. சில நடைமுறை காரணங்களுக்காக பிற்காலங்களில் அதை இரண்டு பிரிவுகளாகப் பிரித்திருக்கலாம். இரண்டு இராஜாக்கள் முதலாவது அதிகாரத்தைப் பார்க்கிறபொழுது எலியா தீர்க்கதரிசியினுடைய ஊழியத்தின் கடைசிக் காலப் பகுதியை அதில் வாசிக்கிறோம். இதன் மூலம் முதலாவது இராஜாக்கள் நூல் இரண்டு இராஜாக்களில் தொடருகிறதைத்தான் இதில் நாம் கவனிக்கிறோம்.
முதலாவது வசனத்தில், “ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.” (2 இராஜாக்கள் 1:1) என்று எழுதப்பட்டிருக்கின்றது. இந்த மோவாபியர் தாவீதின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரவேலுக்குக் கீழாகக் கொண்டுவரப்பட்டவர்கள். அவ்வாறு கொண்டுவரப்பட இவர்கள் இவ்வளவு காலம் வரைக்கும் எந்தவிதக் குழப்பமும் இல்லாமல் ஒன்றாக இருந்தார்கள். அவர்கள் ஒரு தனி நாடாகப் பிரிவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. ஆனால், இப்போது அவர்களுக்கு அத்தகைய ஒரு வாய்ப்பு ஏற்பட்டு இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கலகம் பண்ணிப் பிரிந்து போனார்கள். அவர்கள் அவ்வாறு பிரிந்து போனதற்குக் காரணம் என்ன? முதலாவது வசனம் அதிரடியாக அதை நமக்கு விளக்குகிறது, “ஆகாப் மரணமடைந்தான்.” இது ஒரு தினப்பத்திரிக்கையில் கொட்டை எழுத்தில் தலைப்பு வருகிற மாதிரியான ஒரு செய்தியாகும். அந்தக் காலத்தில் இஸ்ரவேலில் உள்ளவர்களுக்கும், தேவனுடைய மக்களுக்கும் இது ஒரு பெரிய சமாதானத்தைக் கொடுத்திருக்கும். ஏனெனில் ஆகாப் ஒரு சாதாரணமான மனிதனல்ல. அவனைப் பற்றி 1 இராஜாக்கள் புத்தகத்தில் வாசித்துப் பார்த்தால்தான் எத்தனை மோசமானவன் என்பது உங்களுக்கே தெரியவரும்.
ஐரோப்பாவில் இரண்டாவது உலகப்போர்க் காலப் பகுதியில் ஜெர்மனியை ஆண்டு வந்தவன் ஹிட்லர். அந்த உலகப்போர் முடிவுக்கு வந்தபோது ஹிட்லர் மரணமடைந்தான் என்ற ஒரு செய்தி ஐரோப்பாவில் இருந்த மக்களுக்கு எந்தவிதமான சமாதானத்தைக் கொண்டு வந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். அவர்கள் விடிய விடிய ஒரு விருந்து வைத்துக் கொண்டாடி இருந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஏனென்றால் ஹிட்லர் அந்த அளவுக்கு ஒரு கொடுமைக்காரனாக இருந்தான். இங்கு ஹிட்லருடைய பெயரை நான் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காலத்தில் ஆகாப் இஸ்ரவேலில் அப்படிப்பட்ட ஒரு கொடுமைக்கார அரசனாக இருந்திருக்கிறான். அவனுடைய அரண்மனைக்குப் பக்கத்தில் நாபோத்துக்குச் சொந்தமான ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அதை அவனிடமிருந்து அபகரிப்பதற்காக இவன் செய்த அநியாயத்தையெல்லாம் 1 இராஜாக்கள் புத்தகத்தில் வாசிக்கலாம். ஆகாபின் மனைவி யேசபேல் மிகவும் மோசமானவள். யேசபேல் என்ற பெயருக்கான பொருளை அகராதியில் நீங்கள் பார்த்தால் ஒழுக்கங்கெட்டவள் என்பதைக் காண முடியும். அவள் மோசமான ஒரு நபருக்கு இலக்கணமாக இருந்தாள். அத்தனை மோசமானவளைத் தன் மனைவியாகக் கொண்டு ஆகாப் இஸ்ரவேலை ஆண்டு நாட்டை அழிவுப் பாதையில் வழி நடத்தினான். அவன் மிகவும் கொடுமைக்காரனும் சுயநலமானவனுமாக இருந்தான். அவனைப் பற்றி 1 இராஜாக்கள் 16:29-34 நீங்கள் வாசித்துப் பார்த்தால் எந்தளவுக்கு பாகாலுக்கு ஆராதனை செய்கிற வழக்கத்தை நாட்டில் தீவிரமாகவும் அதிரடியாகவும் பரப்பினான் என்பதை வாசிக்க முடியும். அதுமட்டுமல்ல 1 இராஜாக்கள் 21 வது அதிகாரத்தை வாசித்துப் பார்த்தால் நாட்டில் அநியாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தான் என்பதைக் கவனிக்க முடியும். 1 இராஜாக்கள் 22ல், அவன் வேதத்திற்கு எந்தவித மதிப்பும் கொடுக்காமல் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்த ஒரு அரசனாக இருந்தான் என்பதைப் பார்க்க முடியும். இவ்வித சூழ்நிலையில் ஆகாப் மரணமடைந்தான் என்ற செய்தி வருகிறபோது அது தேவனுடைய மக்களுக்கு எத்தனை பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
வேதம் இந்தவிதமான முக்கியமான காரியத்தை அறிவிக்கும் விதமே விநோதமானது. ஆகாப் மரணமடைந்தான் என்ற நல்ல செய்தி அறிவிக்கப்பட்டது. ஆனால் உடனடியாக ஒரு கெட்ட செய்தியும் வருகிறது. இரண்டாவது வசனத்தில், ஆகாப்பின் மகனான அகசியாவின் பெயரை வாசிக்கிறோம். ஆகாப் போய்விட்டான் என்பதை அறிந்து ஆனந்தப்படுவதற்குள் அவனுடைய மகனுடைய பெயர் வருகிறது. நாம் வழக்குச் சொல்லாகப் பயன்படுத்துகின்ற, “தகப்பனைப் போலப் பிள்ளை” என்ற வார்த்தைப் பிரயோகத்திற்கு மிகவும் பொருத்தமானவன் இந்த அகசியா. ஆகாப் எப்படி இருந்தானோ அப்படியே இந்த அகசியாவும் இருந்தான். ஆகவே ஆகாப் போய்விட்டான் என்று மக்களால் சிறிது நேரம் கொண்டாடக் கூட முடியவில்லை. அகசியாவை “ஜூனியர் ஆகாப்” அல்லது “சின்ன ஆகாப்” என்று நாம் அழைத்தாலும் அது மிகையாகாது. அந்தவிதமாகத் தகப்பனைப் போலக் கொடுமைக்காரனாக இருந்தவன்தான் இந்த அகசியா. இவன் ஆகாபிற்குப் பின் இஸ்ரவேலின் அரசனாக வந்துவிட்டான். இது கி.மு. 852 ஆம் வருடம் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வைத்தான் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த 2 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மிகவும் அருமையான ஆச்சரியமான அதிகாரமாக இருக்கிறது. 1 இராஜாக்கள் புத்தகத்தில் எலியாவின் ஊழியம் எவ்வாறு அதிரடியாக ஆரம்பித்ததோ அதேவிதமாக அந்த ஊழியம் அதிரடியாக முடிவடைவதை இந்த முதலாம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம். எலியாவின் ஊழியத்தின் முடிவும் மிகவும் அசாதாரணமாகத்தான் (Extraordinary) இருக்கிறது.
இந்த அதிகாரத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம்.
- 1-8 வசனங்கள் ஒரு பிரிவாகவும்,
- 9-12 வசனங்கள் ஒரு பிரிவாகவும்,
- 13-18 வசனங்கள் இன்னொரு பிரிவாகவும் பிரிக்கலாம்.
இந்த மூன்று பிரிவுகளையும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
முதலாவதாக 1-8 வசனங்கள்: சிலை வழிப்பாட்டிற்கு எதிரான கர்த்தரின் உக்கிரமான கோபம்
இந்த முதலாவது அதிகாரம் ஆகாபின் மரணத்தை அறிவித்துவிட்டு அவனுடைய மகன் அரசனாக வந்ததை விவரிக்கிறது. ஆனால் முதல் எட்டு வசனங்களை வாசிக்கிறபோது அகசியா ராஜாவாக வந்தவுடனே அவனுடைய வாழ்க்கையில் பயங்கரமான பிரச்சனையைச் சந்திப்பதை நாம் பார்க்கிறோம். அது எவ்வாறு நடந்தது என்பதை வேதம் நமக்கு விளக்கவில்லை. இரண்டாவது வசனத்தில்,
“அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு” (1 இராஜாக்கள் 2:1) என்று நமக்குச் சொல்லுகிறது.
இது அவனுடைய ஆட்சியும் வாழ்நாளும் அதிக நாட்களுக்கு இருக்கப் போவதில்லை என்பதைக் காண்பிக்கிறது. அகசியா அரண்மனையின் இரண்டாவது மாடியிலிருந்து கிராதியின் வழியாக, அதாவது மாடியில் தடுப்பைப் போலக் காணப்பட்ட பகுதியில் சாய்ந்து கொண்டிருந்தானோ அல்லது அது பழுதடைந்திருந்ததோ நமக்குத் தெரியவில்லை, அதிலிருந்து அவன் கீழே விழுந்துவிட்டான். அவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தால் அது சாதாரணமான அடியாக இருக்காது. அவன் அடிபட்டு உயிர் போகிற நிலையில் படுக்கையில் கிடக்கிறான். அதை அவனே, “இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா” என்று சொல்லுகிறான். நமக்கு சாதாரணமான ஒரு காய்ச்சல் வந்தால் நாம் அது குணமாகிப் பிழைப்போமா என்றளவுக்கு யோசிக்க மாட்டோம். ஆனால் அதுவே கொரோனா வைரஸினால் ஏற்படும் காய்ச்சலாக இருந்தால் நிச்சயம் யோசிப்போம், ஏனென்றால் அது அநேகரை மரணத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. அதுபோல இவன் மாடியிலிருந்து விழுந்ததனால் தான் பிழைக்கப்போகிறேனா அல்லது இறந்துவிடுவேனா என்கிற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது. அதைத்தான் இரண்டாவது வசனம் சொல்லுகிறது.
அகசியா இங்கு ஒரு பெரிய தவற்றைச் செய்கிறான். 72 கி.மீ தொலைவிலுள்ள பெலிஸ்தியாவிலுள்ள எக்ரோன் என்கிற இடத்தில் பாகாலுக்கு சிலை வழிபாடு நடைபெற்றது. புறஜாதியார் வழிபட்டு வந்த அந்த சிலைக்குப் பெயர் பாகால்சேபூ ஆகும். இவன் தகப்பன் அதிகமாக வழிபட்டு வந்த அந்த சிலையினிடம் தான் பிழைப்பேனோ என்று கேட்டு வரும்படியாகத் தன் ஆட்களை அனுப்புகிறான். உயிர்போகும் நிலையில் இருக்கும் அந்த நேரத்திலேயும் கூட அவன் தன் சிலை வழிபாட்டை விடவில்லை. அவன் தகப்பன் ஆகாப் நாட்டிலுள்ள எல்லோரையும் அந்த சிலையை ஆராதிக்கும்படியாகப் பழக்கி வைத்திருந்தான். அந்தப் பழக்கம் இவனை விட்டும் போகவில்லை. ஆகவே இந்த அகசியா இவ்வாறு செய்ததைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை. 1 இராஜாக்கள் 16:29-34 வாசித்துப் பார்க்கிறபோது யெரொபெயாம் தானும் பாவம் செய்து இஸ்ரவேலையும் எப்படிப் பாவத்தில் வழிநடத்தினானோ அதேபோல் ஆகாபும் நடந்தான் என்பதைப் பார்க்கிறோம். யெரொபெயாம் தாணிலும் பெத்தேலிலும் கோயில் கட்டி மக்கள் எருசலேம் சென்று ஆராதிக்க முடியாதபடி செய்து பாகால் வணக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியிருந்தான். அவனுடைய வழியை அப்படியே பின்பற்றி வந்தவன்தான் இந்த ஆகாப். ஆகாபின் வழியில் ஊறித் திளைத்து ஆட்சிக்கு வந்தவன்தான் அவனுடைய மகன் அகசியா.
அன்பான வாசகர்களே! நீங்கள் ஆண்டவரை வணங்காமல் புறஜாதி தெய்வங்களையும் விக்கிரகங்களையும் வணங்கி வந்தீர்களானால் அது உங்கள் சந்ததியைப் பாதிக்கும். ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் அதிரடியாக இடைப்படாத வரை, உங்களைப் போலவே உங்களை பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் தவறான வழிகளில் நடந்து கேடானவர்களாகத்தான் வாழ்ந்து வருவார்கள். ஆகவே சிலை வணக்கத்தையும் புறஜாதி பழக்க வழக்கங்களையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது ஏதோ சாதாரணமாக புறத்தில் வழிபடுகிற வாழிபாடு மட்டுமல்ல, அதோடு சேர்ந்து வருகிற அநேக பாவங்கள் உள்ளன. அது நம் இருதயத்தையும் மனத்தையும் பாதித்து நமது வாழ்க்கையைத் தவறான வழியில் கொண்டு போய்விடும். ஆகவேதான் இந்த அகசியாவின் வாழ்க்கையில் சாகிற நேரத்திலும் அவனுக்குப் புத்தி சரியாக இருக்கவில்லை. அவன் பாகால்சேபூவினிடத்தில் சென்று தான் பிழைப்பானா என்று விசாரித்து வரும்படித் தனது ஆட்களை அனுப்பினான்.
இஸ்ரவேலை உருவாக்கின தேவன் இதைப் பார்த்தும் குருடனைப்போல் இருப்பாரா? எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியும்? அவர் இஸ்ரவேலை உருவாக்கியதற்குக் காரணமே அந்த நாட்டின் மூலமாகத் தனது மீட்பின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகத்தான். முழு உலகத்திற்கும் சுவிசேஷம் சென்றடைவதற்காக அதை ஏற்படுத்தின தேவன் எப்படி அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பார்? அவர்தானே நாடுகளுக்கும் உலகத்திற்கும் தேவனாக இருக்கிறார். தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காக உருவாக்கின ஒரு நாட்டினுடைய அரசன் இப்படி நடந்துகொள்ளுவது அவரை மிகவும் கோபப்பட வைத்தது. எந்நேரத்தில் அகசியா தனது ஆட்களை விசாரித்து வரும்படி அனுப்பினானோ அதே நேரத்தில் திஸ்பியனாகிய எலியாவினிடத்தில் ஆண்டவர் பேசுகிறார்.
“கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?” (2 இராஜாக்கள் 1:3) என்று கேட்கும்படிச் சொன்னார்.
இந்த வசனத்தில் “இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா” என்ற வார்த்தையை நன்றாகக் கவனியுங்கள். ஆண்டவர் மிகவும் கோபமாக, ஜீவனுள்ள தேவனாக நான் இருக்கிறேன், என்னுடைய நாடாக இஸ்ரவேல் இருக்கிறது, இந்நாட்டின் மூலமாக என்னுடைய திட்டங்களையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறேன், அப்படியிருந்தும் இந்த இஸ்ரவேலில் நான் இல்லையென்று நினைத்துக் கொண்டு, எந்தவிதத்திலும் எனக்கு மதிப்புக் கொடுக்காமல், என்னை உதாசீனப்படுத்தி எப்படி நீ இதைச் செய்யலாம் என்று கேட்கிறார். மேலும் நான்காவது வசனத்தில்,
“இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.” (2 இராஜாக்கள் 1:3) என்றிருக்கிறது.
ஆண்டவரை மீறி நாம் நடப்பது எந்தவிதத்திலும் நமக்குப் பலனளிக்காது.
கிறிஸ்தவர்களுக்கு இதிலொரு பாடமிருக்கிறது, சிலர் மாமிச பெலவீனங்களுக்கு இடங்கொடுத்து ஆண்டவருடைய வார்த்தையை மீறிச் செயல்படுவார்கள். உங்களைப் புறஜாதி மதத்திலிருந்து வெளியே கொண்டுவந்து மிக அருமையான இரட்சிப்பைக் கொடுத்து, அருமையான சபையைக் கொடுத்து, நல்ல போதனைகளை ஆண்டவர் கொடுத்திருக்கலாம். ஆனால் மனித பெலவீனத்தினாலே கோபப்பட்டுக் கொண்டு சபையைவிட்டுப் போவது என்பது அசிங்கமான செயலாகும். (இங்கு வேதப்படி நடந்துவருகின்ற சபைகளைக் குறித்து மட்டுமே சொல்லுகிறேன்) ஆண்டவர் இத்தனை நாட்களும் அழகாக நடத்தி வந்து உங்கள் வாழ்க்கையில் செய்த அற்புதங்களையெல்லாம் சிறிதும் இருதயத்தில் சிந்தித்துப் பார்க்காமல் அவ்வாறு சபையைவிட்டுப் போவதென்பது, இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள் என்று ஆண்டவர் கேட்கும்படிச் செய்யும். ஆண்டவர் நம் வாழ்க்கையில் சில நேரங்களில் பிரச்சனைகளை அனுமதிக்கலாம், தொழிலில் நஷ்டத்தை அனுமதிக்கலாம், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இவையெல்லாம் நம் வாழ்க்கையில் ஏற்படாது என்று ஆண்டவர் சொல்லவில்லையே. அதையெல்லாம் சரி செய்து கொள்ளுவதற்கு ஆண்டவர் வெளிப்படுத்திக் காட்டியிருக்கிற வழிகளுக்கு இடங்கொடுக்காமல் இருதயம் கடினப்பட்டுப் போய் சபைக்குப் போகாமல் வீட்டிலிலேயே இருந்து விடுவதையும், போதகரை உதாசீனப்படுத்துவதையும் பார்த்து ஆண்டவர் உங்களை சும்மா விட்டுவிடுவார் என்று நினைக்கிறீர்களா? இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா என்று ஆண்டவர் சொன்னது போல அந்த இரட்சிப்பைக் கொடுத்த தேவன் நம்மை சிட்சை செய்யாமல் இருக்கப் போவதில்லை. அவர் கண்ணை மூடிக்கொண்டு, பேச முடியாமல், இருதயம் இல்லாமல் கல்லாக இருக்கிற வெறும் சிலை அல்ல. அவர் கடவுள். அவர் ஜீவனுள்ள தேவன் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே ஆண்டவர் இங்கு அகசியா அரசனைக் குறித்து நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று சொல்லுகிறார்.
மூன்றாவது வசனத்தில் கர்த்தருடைய தூதன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கில வேதத்தில் இதை “The angel of the LORD” என்று வாசிக்கிறோம். இது ஒரு முக்கியமான வார்த்தைப் பிரயோகமாகும். இது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனித உருவில் பிறப்பதற்கு முன்பு அவரைக் குறித்து பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைப் பிரயோகம். இந்த இடத்தில் வந்தது யாரென்றால், Preincarnate Son of God. அதாவது இயேசு இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்பாக ஜீவனுள்ள தேவனாக இருந்து நடமாடியவர்தான் கர்த்தருடைய தூதன் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நாம் அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு இல்லையென்று சிலர் வேதம் தெரியாமல் முட்டாள்தனமாகப் பேசி வருகிறார்கள். பழைய ஏற்பாட்டின் கர்த்தர்தான் புதிய ஏற்பாட்டின் தேவனாக இருக்கிறார். இப்போது நாம் ஆராதிக்கிற ஆண்டவர்தான் பழைய ஏற்பாட்டிலும் இருந்திருக்கிறார்.
அகசியா இங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தான். அவனுக்கே தான் பிழைப்பேன் என்கிற நம்பிக்கை இல்லை. இவ்வளவு மோசமாக இருந்தபொழுதும் தெய்வமாக இல்லாத ஒரு கல்லினிடம் ஆட்களை அனுப்புகிறான். அந்த ஆட்களிடம் கர்த்தர் சொன்னதை எலியா சொல்லுகிறான். அவர்கள் திரும்பி அகசியாவிடம் போகிறார்கள். ராஜாவின் ஆட்களிடம் எலியா பேசின காரியத்தை விவரமாக வேதம் நமக்குச் சொல்லவில்லை. அந்த ஆட்கள் திரும்பி வந்தவுடன் அகசியா, தான் சொன்ன வேலையை அவர்கள் செய்து முடிக்கவில்லை என்று அறிந்து கொண்டான். ஐந்தாவது வசனத்தில்
“அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்.” (2 இராஜாக்கள் 1:5) என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சொன்ன காரியத்தைச் செய்யாமல் ஏன் இப்படி திரும்பி வந்தீர்கள்? உங்களைத் தடை செய்தது யார்? என்று காரணத்தை அறிந்துகொள்ள கேட்கிறான். அந்த ஆட்கள் ஆறாவது வசனத்தில்
“ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான்” (2 இராஜாக்கள் 1:6) என்று சொன்னார்கள்.
இப்படி அவர்கள் சொன்ன பிறகு, அகசியா அந்த ஆட்களிடம் அவன் எப்படிப்பட்டவன் என்று கேட்கிறான். அதாவது அவன் உருவம் எப்படி இருந்தது என்று கேட்கிறான்.
“அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்” (2 இராஜாக்கள் 1:8).
இவ்வாறு அவர்கள் சொன்னவுடன் அவனுக்குள் இருந்த சந்தேகம் தீர்ந்து, அது யாரென்று அறிந்து கொண்டான். ஏனென்றால் எலியா அந்நாட்களில் மிகவும் பிரபலமான தீர்க்கதரிசியாக இருந்தார். இதைக் கேட்டவுடனே அகசியா மிகவும் கோபமடைந்திருப்பான். இருந்தாலும் அவனால் எந்தவித சாக்குப்போக்கும் சொல்ல முடியாதபடி அவனுடைய செயல் இருந்தது. சாகும் நிலையில் இருக்கிறபோது வெறுங் கல்லை அணுகி உதவி கேட்கப் போகவேண்டுமா? அவனுடைய தகப்பன் அதை வணங்கியிருந்தாலும் தானே அதை வழிபட்டு வந்தாலும் அவனால் எவ்வித சாக்குப்போக்கும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதுபோன்ற போலித் தெய்வங்களை வழிபட்டு வருவதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை 1 இராஜாக்கள் புத்தகம் தெளிவாகச் சொல்லுகிறது.
தன் தகப்பனுடைய காலத்தில் நடந்த நிகழ்வையெல்லாம் அகசியா மறந்திருக்க முடியாது. கர்மேல் மலையின்மேல் நடந்த சம்பவத்தை அவன் எப்படி மறந்திருக்க முடியும்? அங்கு ஆண்டவர் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி பாகால் ஆராதனையை அடியோடு அழித்தார். இதை அவன் மறந்திருக்க முடியுமா? ஆகவே ஒரு ஜீவனுள்ள தேவன் இருப்பதையே உதாசீனப்படுத்தி மறுபடியும் பாகால்சேபூவிடம் போவது எவ்வளவு கொடுமையான காரியம். இறையாண்மையுள்ள தேவன் இதைப் பொறுத்துக் கொண்டிருப்பாரா? ஆண்டவருக்கு நீடிய பொறுமை இருக்கிறது. ஆனால் நம்முடைய சிந்தனைகளாலும், செயல்களாலும் அந்தப் பொறுமையை நாம் சோதிக்கக் கூடாது. இங்கு அகசியா அவருடைய இறையாண்மையை சோதிக்கிறான். அப்பாவைப்போல சிலை வழிபாட்டை அழிக்காமல் அதைத் தொடருகிற இருதயத்தைக் கொண்டிருக்கிறான். கர்த்தரை நம்பாமலும் மனந்திரும்பாமலும் தொடர்ந்து அவன் தகப்பனின் வழியில் போகிறதை நாம் இங்கு பார்க்கிறோம். சாகிற நேரத்திலாவது புத்தி வரதா என்று நம்மவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் அது வராது. இவனிடம் அதைப் பார்க்க முடியவில்லையே. உயிர் போயிடுமா என்கிற சந்தேகம் அவனுக்கிருந்தது. ஆனால் அவனுக்குப் புத்தி வரவில்லை. அது எல்லோருக்கும் வந்துவிடாது. ஏன் தெரியுமா? மனிதன் தன் வாழ்க்கையில் எது நடந்தாலும் சுயமாக இருதயத்திலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளவே மாட்டான். அதற்குக் காரணம் அவனைப் பிடித்திருக்கிற பாவம். அதை அவனால் மாற்றிக்கொள்ள முடியாது. பாவத்தின் இயல்பே அது தன் வழியில் தொடர்ந்து போவதுதான். ஆகவே நாம் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் கொடுமையான சம்பவம் நடந்தால் அவன் சுலபமாக மனந்திரும்பி விடுவான் என்று நினைக்கக்கூடாது. ஒரு மனிதன் மனந்திரும்புகிறான் என்றால் அது அவனுடைய சுயத்தினால் நடைபெறுவதல்ல, பரிசுத்த ஆவியினால் நடைபெறுவதாகும். ஆண்டவர் ஒரு மனிதனை மாற்றினால் தவிர அவன் தன்னை மாற்றிக்கொள்ள முடியாது. வேறெந்த மனிதனும் அவன் மாறுவதற்கு உதவி செய்யவும் முடியாது.
அகசியாவின் இருதயம் பாவத்தினால் நிறைந்திருந்தது. ஆகவேதான் அவன் மரண நிலையிலும்கூட மனந்திரும்பவில்லை. அவன் பாகால்சேபூவின் உதவியை நாடிப் போகிறான். ஆண்டவர் அதைப் பார்த்து பொறுமையாக இருப்பாரா? அவர் நீடிய பொறுமையும், அன்பும், கிருபையும் கொண்டவராக இருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. அது உண்மைதான் என்றாலும் அவருடைய முழுமையான தன்மையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர் எந்தளவுக்குக் கிருபையுள்ளவராக இருக்கிறாரோ அந்தளவுக்கு அவர் பாவத்தைப் பொறுத்துக்கொள்ளாத தேவனாகவும் இருக்கிறார். சத்தியத்திலிருந்து விலகி ஓடுவதை அவர் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார். அவர் இருப்பதை இல்லையென்று மறுப்பதை அவர் சகித்துக்கொள்ள மாட்டார். தான் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறபோது இல்லாத ஒன்றுக்கு இருதயத்தில் இடங்கொடுப்பதை அவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். தன்னுடைய நாடான இஸ்ரவேல் போலி தெய்வமான பாகால்சேபூ வழியில் போவதை எப்படிப் பொறுத்துக்கொள்ளுவார்? இங்கு அகசியா மிகப் பெரிய தவற்றைச் செய்கிறான். இதனை நாம் சாதாரணத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சில கொடுமைக்காரர்கள் சாகிற நிலையிலும் ஏதாவது தீங்கைச் செய்துவிட்டுப் போய்விடலாம் என்று எண்ணுவார்கள். அதுபோலவே இவனும் நடந்துகொள்ளுகிறான். ஆனால் ஆண்டவர் அவனை விட்டுவிடவில்லை. “இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய்” என்று சொன்னார். அதாவது உனக்கு நடந்த இந்தக் காரியத்திலிருந்து நீ மீளவே முடியாது என்று சொன்னார்.
இதை வாசிக்கிற நேரம் கர்த்தர் இப்படியெல்லாம் செய்யலாமா என்று நாம் யோசிப்போம். இதெல்லாம் மிகவும் மோசமான காரியமாக இருக்கிறதே, கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறதே என்று சிந்திக்கலாம். ஆனால் இந்த உலகத்து மக்கள் அப்படித்தான் ஆண்டவரைப் பற்றி சிந்திப்பார்கள். அன்புள்ள ஆண்டவர் எப்படி இவ்வாறு நடந்துகொள்ளலாம் என்றுதான் நினைப்பார்கள். ஏனென்றால் உலகத்துக்கு எப்படிப்பட்ட ஆண்டவர் தேவையாக இருக்கிறார்? அவர்களுடைய தேவைகளையெல்லாம் சந்தித்து, கேட்கிற நேரமெல்லாம் வேலைக்காரனைப் போல அவர்களுக்குப் பணி செய்தால் அவர்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். இப்படியெல்லாம் ஜீவனுள்ள ஆண்டவரை நாம் துளியும் நினைத்துப் பார்க்கக்கூடாது. இங்கு நாம் யாரைக் குறித்துப் படிக்கிறோம்? இஸ்ரவேலின் தேவன், ஜீவனுள்ள, அன்புள்ள, மகா கிருபையுள்ள, நீடிய பொறுமையுள்ள, பரிசுத்தமான தேவனாக அவர் இருக்கிறார். இருந்தபோதும் தன்னை நிராகரித்து உதாசீனப்படுத்தி பாவ வழிகளில் போவதை பார்த்துக்கொண்டிராத தேவனாகவும் அவர் இருக்கிறார். எரிச்சலுள்ள தேவன் என்று வேதம் அவரைக் குறித்து பழைய ஏற்பாட்டில் சொல்லியிருக்கிறது. அவர் பாவத்தை வெறுப்பது மட்டுமல்ல, அந்த பாவத்தின் வழியில் தொடர்ந்து போகிற பாவிகளையும் வெறுக்கிறார் அழிக்கிறார் என்றும் வேதம் சொல்லுகிறது. இங்கு அகசியா தேவனுக்கு எதிராக பாகால்சேபூவைப் பின்பற்றி பாவம் செய்தான்.
அகசியா இங்கு பத்துக்கட்டளைகளில் முதலாவது கட்டளையை அடியோடு மீறி எதிர்த்து நிற்கிறான்.
“என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.” (யாத்திராகமம் 20:3).
நான் மட்டுமே ஒரே ஜீவனுள்ள தேவனாக இருப்பதனாலே என்னைவிட்டு இன்னொரு தெய்வத்தின் வழியிலே போகாதீர்கள் என்கிறார். நான் சொல்லுகிறபடி என்னை வழிபட்டு எனக்காக நீங்கள் வாழவேண்டும், அந்த இடத்திலே நீங்கள் யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்று சொல்லுகிறார். உங்கள் வாழ்நாள் முழுவதும் என்னை மட்டுமே ஆராதித்து எனக்கே சிறப்புரிமையைக் கொடுக்க வேண்டும் என்று முதலாவது கட்டளையில் சொல்லுகிறார். அதை அகசியா ராஜா முற்றிலும் மீறியதால் அப்படியான தண்டனையைக் கொடுத்தார். பழைய ஏற்பாட்டின் ஆண்டவர்தான் எல்லாரையும் தண்டிப்பார், புதிய ஏற்பாட்டின் ஆண்டவர் நாம் என்ன செய்தாலும் அன்பாகவே இருப்பார், எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளுவார் என்று மிகவும் தவறாகப் பலர் எண்ணுகிறார்கள். மாற்கு எழுதின சுவிசேஷத்தில் ஒருவன் ஆண்டவரிடத்தில் வந்து இரட்சிப்படைய என்ன வழி என்று கேட்டான்.
“இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான்.” (மாற்கு 10:21-22) என்று வேதம் நமக்குச் சொல்லுகிறது.
இங்கு ஆண்டவரிடம் வந்தவனுக்கு ஆண்டவரையே நம்பி அவரையே விசுவாசித்து அவருக்காகவே வாழவேண்டும் என்கிற ஆசை இருந்தது. ஆகவேதான் அவன் ஆண்டவரித்தில் ஒடி வருகிறான். ஆனால் ஆண்டவர் அவனைப் பார்த்து உன்னிடத்தில் ஒரு குறை இருக்கிறது, நான் இருக்க வேண்டிய இருதயத்தில் வேறொன்று உன்னில் இருக்கிறது. அதாவது உன் ஆஸ்திமேல் உன் ஆசை அதிகமாக இருக்கிறது, அதை நீ மாற்றிக்கொள் என்றார்.
ஆண்டவர் வழியில் போக வேண்டிய அவன், தன் வாழ்க்கையில் இன்னொரு தேவனுக்கு இடங்கொடுத்து வாழ்ந்திருக்கிறான். பொருளின் மீதும், பொக்கிஷத்தின் மீதும் ஆசை வைத்து தொடர்ந்து அவற்றை அவன் தெய்வமாக நினைத்து வழிபட்டு வந்ததனால் ஆண்டவருக்கு உண்மையிலே அவனுடைய இருதயத்தில் இடம் இருக்க முடியாது. பணம் உங்களிடத்தில் இருக்கிறதா? அதில் தவறொன்றுமில்லை, ஆனால் அதுவே தெய்வமாக உங்களுக்கு இருந்தால் ஆபத்துதான். இங்கு ஆண்டவரிடத்தில் வந்தவனுக்குப் பணம் தெய்வமாக இருந்தது, அவன் பணத்திற்காக வாழ்ந்தான், அதைப் பெருக்கிக் கொள்ளுவதில் தான் நோக்கமாக இருந்தான். ஆண்டவர் அவன் இருதயத்தை அறிந்துதான் அவனிடத்தில் அப்படியாகப் பேசினார். சில நேரம் நமக்கு நம்முடைய பெலவீனம் தெரியாமல் இருக்கலாம். ஆகவேதான் ஆண்டவர் நம்மைச் சுய பரிசோதனை செய்துகொள்ளும்படிச் சொல்லுகிறார். பண ஆசை மிகவும் மோசமானது, அதனால் நாம் அநேக காரியங்களில் பாதிக்கப்படலாம். பணத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமென்கிற நோக்கம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக்கலாம், சபைக்குப் போவது அதனால் தடைபடலாம், ஆண்டவருக்கென்று சேவை செய்வதற்கு நேரத்தைக் கொடுக்காமல் இருக்கலாம், இப்படி எத்தனையோ விதத்தில் அது நம்மைப் பாதிக்கும். ஆண்டவருக்கு எதிராக நாம் இன்னொன்றுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலே வாழ்ந்து கொண்டிருக்கலாம். அப்படித்தான் இந்த சம்பவத்தில் பார்க்கிற மனிதனும் இருந்தான். ஆண்டவர் அதைச் சுட்டிக் காட்டினார். ஆனால் அவன் மனமுடைந்து துக்கத்தோடு போய்விட்டான் என்று நாம் அந்தப் பகுதியில் வாசிக்கிறோம். நித்திய ஜீவன் வேண்டுமென்று ஆண்டவரிடம் வந்து அவன் கேட்டான், ஆனால் அவன் வாழ்க்கையில் வேறொன்று அவனுக்குத் தெய்வமாக இருந்தது. அதை அவனால் விட்டுவிட முடியவில்லை. பணத்தைக் கொடுப்பவரே ஆண்டவர்தான் என்கிற எண்ணமே அவனுக்கு இல்லை. அவரோடு இருந்தால் தனக்கு எந்தத் தேவையும் இல்லாத அளவிற்கு அவர் பார்த்துக் கொள்ளுவார் என்கிற நம்பிக்கையும் இல்லை. உங்கள் வாழ்க்கையை நீங்கள் யோசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் உங்களை அறியாமலே வேறொன்றை நீங்கள் தெய்வமாகக் கொண்டிருக்கலாம். சிலை வணக்கம் பல்வேறு விதங்களில் உங்களில் காணப்படலாம். ஒரு விக்கிரகத்தை வைத்து நீங்கள் வணங்காமல் இருந்திருக்கலாம், ஆனால் ஆண்டவருக்கு முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும் ஆராதனை செய்யாமல் வேறு எதற்காவது நீங்கள் இருதயத்தில் இடம் கொடுத்திருக்கலாம். அது எதுவாகவும் இருக்கலாம். ஜீவனுள்ள தேவனாகிய அவரை வணங்கி அவருடைய வழிகளின்படி எல்லாவற்றையும் செய்யவேண்டுமென்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார்.
ஆண்டவர் இங்கு அகசியாவிற்கு மனந்திரும்பும்படியாக ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறார். ஆண்டவர் இதை அவனிடத்தில் சொன்ன பிறகு உடனே அவனைக் கொன்றிருக்கலாம். ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் நீ சாகவே சாவாய் என்று ஏன் சொல்லி அனுப்பிவிட வேண்டும்? அவன் மனதிரும்பும்படிக் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் அவனுக்குக் கொடுக்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவன், ஆண்டவரே நான் செய்ததது பாவந்தான், ஜீவனுள்ள தேவனாகிய உம்மை உதாசீனப்படுத்தி இந்த நிலைக்கு வந்து விட்டேன் என்று மனந்திரும்பி இருக்கலாம் அல்லவா! நினிவேக்கு ஆண்டவர் யோனாவை அனுப்பி நீங்கள் மனந்திரும்பவில்லையானால் உங்களை நிர்மூலமாக்கிவிடுவேன் என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் மனந்திரும்பி யோனாவையே ஆச்சரியப்பட வைத்தார்கள். ஆண்டவர் நினிவேவை அழிப்பேன் என்று சொன்னது உண்மைதான், ஆனால் மனந்திரும்புகிறவர்களை அழிப்பேன் என்று அவர் சொல்லவில்லை. அவர்கள் மனந்திரும்பினதாலேயே அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார். அகசியாவும் அதுபோலக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மனந்திரும்பி இருக்கலாமே! ஆனால் அவன் இருதயம் அதற்கு இடங்கொடுக்கவில்லை. கிடைத்த கடைசி வாய்ப்பையும் தவறவிட்டான். இங்கு ஆண்டவரிடத்தில் அன்பு இல்லையென்று எப்படிச் சொல்ல முடியும்? அவனுக்கு அவர் வாய்ப்புக் கொடுக்காமல் இருந்தாரா? அப்படி ஒருவேளை வாய்ப்பே கொடுக்காமல் அவனைக் கொன்றிருந்தாலும் அவர் நீதியுள்ளவராகத்தான் இருந்திருப்பார். ஆனாலும் அவர் அவனுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார், அதை அவன் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சிலை வணக்கத்தை நீங்கள் சாதாரணமாக நினைக்கக் கூடாது. சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் முதலாவது கட்டளையை சரியாகப் படிக்காமல், தாங்கள் விசுவாசிகள் என்று சொல்லிக்கொண்டு வீட்டில் பெரிய இயேசு படத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள். பெரிய தாடி வைத்து, அவர் எதோ பஞ்சத்தில் இருத்தவர்போல மிக மோசமான நிலையில் இருப்பதைப் போலக் கற்பனையான படத்தை வைத்துக் கொள்ளுகிறார்கள். அப்படியான மோசமான நிலையிலிருந்தால் அவர் சமாரியா மற்றும் பல பகுதிகளுக்கு நடந்து சென்றிருக்க முடியுமா? நாம் ஒரு நாளைக்கு 4 கி.மீ. நடந்தாலே முடியாமல் போகிறது. அவர் மிகவும் பெலமுள்ளவராக இருந்திருக்கிறார், இல்லாவிட்டால் அவர் தச்சராக அப்பாவோடு இருந்து வேலை செய்திருக்க முடியாது. இதுமாதிரி படத்தை எல்லாம் வைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஏனென்றால் அது முதலாவது கட்டளையை மீறுவதற்கு வழிவகுக்கும். படத்தில் ஒன்றுமே இல்லை. ஆண்டவர் நம் இருதயத்தில் இருக்கிறார், அவர் சிலுவையிலோ அல்லது வேறோன்றிலோ இருப்பதில்லை. சிலுவையைக் கழுத்தில் போட்டுக் கொள்வதாலோ, தலையணைக்கு அடியில் வைத்திருப்பதாலோ ஒரு பிரயோஜனமும் இல்லை. அவ்வாறு செய்வதால் நீங்கள் என்ன செய்கிறீர்களென்றால் ஜீவனுள்ள தேவனை வணங்க வேண்டிய விதத்தில் வணங்காமல் நீங்களே வேறொன்றை உருவாக்கிக் கொண்டு அதன்மேல் உங்கள் விசுவாசத்தை வைக்கிறீர்கள்.
சிலை வணக்கம் கோரமானது. அதுவும் இந்த அகசியாவின் சிலை வணக்கம் அவனுடைய தகப்பனுடையதைப் போல மிகவும் தீவிரமான சிலை வணக்கமாகும். ஏன் இந்த சிலை வணக்கம் மோசமானது என்பதை 1 இராஜாக்கள் 22 ஆம் அதிகாரத்தில் பார்க்கலாம்.
“ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து, பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.” (1 இராஜாக்கள் 22:51-53).
சிலை வழிபாட்டை ஆண்டவர் பொறுத்துக்கொள்ள மாட்டார். அகசியாவின் இந்த நிலைமைக்குக் காரணம் அவனுடைய தீவிர உருவ வழிபாடே. முதலாவது கட்டளையை அவன் அவமதித்து உதாசீனப்படுத்தினான். அகசியா தான் எதை நம்பினானோ அதன் அடிப்படையிலே தொடர்ந்து நடந்தான் என்பதையே நாம் இங்கு பார்க்கிறோம். அவன் பாகால்சேபூவுக்கு ஆட்களை அனுப்பியது ஏதோ சாகப்போகிற நேரத்தில் இந்த சாமியாவது நமக்கு உதவி செய்யுமா என்று கேட்டுப் பார்க்க அவன் இப்படிச் செய்யவில்லை. எந்த வழியில் அவன் வளர்ந்து எதைத் தன் வாழ்நாள் முழுவதும் செய்துவந்தானோ அதையே அவன் தொடர்ந்தான் என்று நாம் பார்க்கிறோம். 2 இராஜாக்கள் புத்தகத்திற்கு விரிவுரை எழுதின ஒருவர் இந்த அகசியாவின் செயலைப் பற்றி சொல்லுகிறபோது, “இதை அவன் அறியாமையினாலோ தனக்குள் இருந்த பெலவீனத்தாலோ செய்யவில்லை. அதுவே அவனுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது” என்று சொல்லுகிறார். இது மிகவும் முட்டாள்த்தனமான சிலை வணக்கமாகும். ஏனென்றால் சாகக் கிடக்கும் நேரத்தில் இப்படியா செய்ய வேண்டும்? அவனுக்கே நன்றாகத் தெரியும், தான் பிழைக்க முடியாதபடி இருக்கிறேன் என்று. இந்த நேரத்தில் உதவியைத் தேடி தவறான ஒரு வழியில் போகக் கூடாது. இவ்விதமான கடினமான நேரத்தில் இஸ்ரவேலின் தேவனிடம் அவன் போயிருக்க வேண்டும்.
எலியா நாட்டில் இருந்தார், அவர் எங்கே இருந்தாரோ அங்கே ஆண்டவர் இருந்தார். எலியாவின் மூலம் ஆண்டவர் செய்த அற்புதங்கள் எல்லாம் அகசியாவுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும்கூட அவன் இருதயம் கடினப்பட்டுப்போய் முட்டாள்த்தனமாக பாகால்சேபூ வழியிலேயே போனான். அதனால் ஆண்டவர் மிகவும் கோபமடைந்தார். ஆண்டவர் அவன் தொடர்ந்து தவறான வழியில் சென்றதைத் தொடர்ந்து பொறுத்துக்கொள்ளவே மாட்டார். ஆகவேதான்
“இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ இதை செய்கிறாய்” என்று கேட்டார். ஆகவே ஆண்டவர் இப்படியான நேரத்தில் கொடுக்கிற நியாயத்தீர்ப்பு மிகவும் கடுமையாகத்தான் இருக்கும். எந்தவிதக் கருணையும் இல்லாத விதத்தில்தான் அந்த நியாயத்தீர்ப்பு இருக்கும். அப்படியான ஒரு நியாயத்தீர்ப்பைத்தான் அவர் அகசியாவிற்கு அளித்தார். “இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய்” (2 இராஜாக்கள் 1:4) என்று ஆண்டவர் சொன்னார்.
ஆண்டவருடைய கோபம் எந்தளவுக்கு அகசியா மீது இருந்தது என்பதை “நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய்” என்று சொன்னதிலிருந்து விளங்குகிறது. அது இந்த அதிகாரத்தில் 3, 6, 16 வது வசனங்கள் என்று மூன்று தடவை வருகிறது. ஆண்டவர் சொன்ன இந்தத் தீர்ப்பு எலியாவின் மூலமாக அகசியாவிற்கு வந்து சேர்ந்தது.
எலியாவோடு கர்த்தருடைய தூதன் பேசுகிறார்.
“கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்” (2 இராஜாக்கள் 1:4).
இதைத்தான் 1 இராஜாக்கள் 21:17-18 வசனங்களிலும் வாசிக்கிறோம்.
“கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ” (1 இராஜாக்கள் 21:17-18).
கர்த்தருடைய தூதன் ஆகாபோடும் அகசியாவோடும் பேசும்படியாக எலியாவிடம் ஒரேவிதமாகத்தான் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் இவர்கள் இருவருமே மிகவும் கொடுமையான காரியங்களைச் செய்வதற்குக் திட்டமிட்டார்கள். அதை ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தர் அறிந்து அதைத் தடுக்கும்படியாக, அவர்கள் செய்ய நினைத்த அந்தக் காரியங்களை அந்த நேரமே நிறுத்தும்படியாக எலியாவை எழுந்து போகச் சொல்லுகிறார். கிருபையுள்ள, அன்புள்ள, மிகுந்த பரிசுத்தமுள்ள தேவன் அநியாயத்தைப் பொறுத்துக் கொண்டு பாவத்தைச் சகித்துக் கொள்ளுகிற தேவனல்ல. மனந்திரும்புகிறவர்களுக்கு அவர் விசுவாசத்தைக் கொடுக்கிறார், மனந்திரும்ப மாட்டோம் என்று இருதயத்தைக் கடினப்படுத்திக் கொள்கிறவர்களுக்கு அவர் நியாயத்தீர்ப்பைத்தான் கொண்டுவருவார் என்பதை இங்கு பார்க்கிறோம். சந்ததி சந்ததியாக தொடர்ந்து முதலாவது கட்டளையை மீறினதாலேயே அகசியாவின் மீது ஆண்டவருடைய உக்கிரமான கோபம் வந்தது.
இரண்டாவதாக, (2 இராஜாக்கள் 1:9-12): கர்த்தர் தன் ஊழியக்காரனைப் பாதுகாக்கிறார்
எலியாதான் இதைச் செய்தான் என்பதை அறிந்தவுடனே அகசியா என்ன செய்கிறான் பாருங்கள்.
“அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது. மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான். எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது”. (2 இராஜாக்கள் 1:10-12).
அகசியா எலியாவைக் கைது செய்யும்படியாக ஆட்களை அனுப்புகிறான். எலியாவினால் அந்த ஆட்கள் அக்கினியினால் அழிக்கப்பட்டார்கள். எலியாவின் இந்தச் செயலை ஒருசில விளக்கவுரையாளர்கள், எலியா கோபப்பட்டு இவ்விதமாகச் செய்திருக்கக் கூடாது என்கிறார்கள். ஆண்டவருடைய தீர்க்கதரிசியாக இருந்தும் கொஞ்சமும் கருணையில்லாமல் நடந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அது ஒரு தவறான விளக்கமாகும். ஏனென்றால் இதை எலியா செய்யவில்லை, இதைச் செய்தவர் ஜீவனுள்ள தேவன். இங்கு எலியா ஒரு கருவிதான், அதை நாம் மறந்துவிடக் கூடாது. அன்றைய தினம் 102 பேர் இறந்து போனார்கள். எலியா அங்கு என்ன சொல்லுகிறார்?
“நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்”.
அதற்கு என்ன அர்த்தம்? ஆண்டவரே என்னைத் தீர்க்கதரிசியாக மாற்றினதே நீங்கள்தான். நான் செய்து கொண்டிருப்பதெல்லாம் உங்களுடைய பணியைத்தான். நீங்கள் போகச் சொல்லும்போதும், வரச் சொல்லும்போதும் அப்படியே செய்கிறேன். நீங்கள் சொன்னதைத்தான் அகசியாவுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவன் என்னை அழிக்க ஆட்களை அனுப்பி இருக்கிறான். உண்மையிலேயே நீங்கள்தான் என்னைத் தீர்க்கதரிசியாக ஆக்கியிருந்தால் அவர்களை அழித்துப் போடுங்கள் என்கிறார். ஆண்டவர் அதை எப்படிச் செய்யாமல் இருப்பார்? இங்கு எலியா ஒரு போலித் தீர்க்கதரிசியாக ஏமாற்றுக்காரனாக இருந்திருந்தால் அவன் சொன்னபடி நடந்திருக்குமா? அவன் சொன்னது பொய்யாக இருந்திருந்தால் வானத்திலிருந்து நெருப்பு இல்லை, பச்சைத்தண்ணீர் கூடக் கொட்டியிருக்காது. ஆனால் அவன் உண்மையான தீர்க்கதரிசியாக இருந்ததால் ஆண்டவர் அவ்விதம் செய்தார்.
முதலாவதாக வந்த படை “தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார்” (2 இராஜாக்கள் 1:9) என்றார்கள். எலியா கேட்டுக்கொண்டபடி அவர்கள் அக்கினியால் அழிக்கப்பட்டார்கள். இரண்டாவதாக வந்த படை மிகவும் தீவிரமாக எப்படியாவது எலியாவைக் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்கிற நோக்கத்தில், “தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார்” (2 இராஜாக்கள் 1:11) என்று சொன்னார்கள். அவர்களும் எலியா வேண்டிக் கொண்டபடியே அக்கினியால் அழிக்கப்பட்டார்கள். ஆண்டவர் அன்றைய தினம் 102 பேரை அழித்து எலியாவைப் பாதுகாத்திருக்கிறார். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் கர்மேல் மலையின்மேல் போலிப் பாகாலை வணங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு முன்பாக நெருப்பினால் அவர்களுடைய நம்பிக்கைகளை ஒன்றுமில்லாமல் ஆக்கினார். கர்மேல் மலைமேலும் இங்கும் நெருப்புதான் முக்கிய பங்கு வகித்தது. எலியாவின் தேவன் கர்மேல் மலைமேல் செய்தது போல இங்கும் செய்துகாட்டி அவர் ஜீவனுள்ள தேவன் என்பதை நிரூபிக்கிறார்.
ராஜா அகசியா, எதற்காக எலியாவை கூட்டிக்கொண்டு வரச்சொன்னான்? பெரிய விருந்து செய்து உபசரிக்கவா? அல்லது நாம் பாகால்சேபூ இடத்திற்கு போகாமல் எலியாவினிடத்தில் ஏதாவது நல்ல ஆலோசனை கேட்கலாம் என்றா? நிச்சயமாக அதற்காக அவர்களை அவன் அனுப்பவில்லை. எலியாவை இல்லாமல் செய்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில்தான் அனுப்பினான். அவன் இருதயத்தில் தேவனுக்கு இடமில்லை, தேவனுடைய வார்த்தைக்கு இடமில்லை. எலியா எப்படி நான் ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாவாய் என்று சொல்லலாம்? அந்தக் கோபத்தில்தான் அவன் படைகளை அனுப்புகிறான். ஏன் இங்கு நெருப்பு வந்தது? எப்படி கர்மேல் மலையின்மேல் நெருப்பை வரச்செய்து நான் மட்டுமே ஒரே ஜீவனுள்ள தேவன் என்று கர்த்தர் நிரூபித்தாரோ, அதுபோல இங்கும் நெருப்பை அனுப்பி அவர்களை அழித்து நான்தான் ஜீவனுள்ள தேவன் என்பதை அவர் நிரூபித்தார். கர்மேல் மலையின்மேல் நடந்தது முழு நாட்டிற்கும் தெரிந்திருந்தது. முதலில் அனுப்பப்பட்ட படையினர்மேல் நெருப்பு வந்து அழிந்து போனார்கள் என்று கேள்விப்பட்டவுடனேயே புத்தி வந்திருக்க வேண்டும் அல்லவா? நெருப்பு என்ற சொல்லைக் கேட்டவுடன் கர்மேல் மலையிமேல் நடந்ததுதான் இங்கேயும் நடந்திருக்கிறது என்ற எண்ணம் அவனுக்கு வந்திருக்க வேண்டும். உடனே மனந்திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அவனோ அகங்காரமாய் வேறு 51 பேரை அனுப்புகிறான். ஆண்டவர் அவர்களையும் எரித்துப் போட்டார் என்று நாம் வாசிக்கிறோம்.
இறுதியாக, (2 இராஜாக்கள் 1:13-18): தேவன் ஆணவத்தை அழிக்கிறவராக இருக்கிறார்.
102 பேர் அழிந்து போனார்கள் என்ற செய்தியை அனைவரும் கேள்விப்பட்டார்கள். இது படையிலிருந்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுவும் அவர்கள் சண்டையே போடாமல் நெருப்பினால் அழிந்து போய்விட்டார்கள். மீதியிருந்த படையினருக்கு இது எப்படியிருந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் திகைத்து அடுத்து என்ன நடக்குமோ என்றுதான் யோசித்திருப்பார்கள். அகசியா வேறொருவனைக் கூப்பிட்டு இன்னும் ஐம்பது பேரை உன்னோடு கூட்டிக்கொண்டு போ என்றான். இதைக் கேட்டு அவன் எப்படிப் பதறிப்போயிருப்பான் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். நாம் போனாலும் இதுதான் நடக்கும் என்பதை அவன் உணர்ந்திருப்பான். படைத்தலைவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள். அகசியாவிற்கு வராத புத்தி இவனுக்கு வந்திருந்தது. இவனுக்கும் கர்மேல் மலையில் நடந்ததும், இப்போது எலியா இரண்டு தடவை செய்ததும் நன்றாக தெரிந்திருந்தது. அகசியாவிற்கும் இது தெரிந்தது, ஆனால் அகசியாவோ இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டான், இவனோ தன்னைத் தாழ்த்திக் கொண்டான். மற்றவர்கள் செய்தது போல இவன் செய்யவில்லை.
“திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.” (2 இராஜாக்கள் 1:13-14).
இதற்குப் பெயர்தான் தாழ்மை. அகசியா மோசமானவனாக இருந்தபோதும், அவனுக்குக் கீழ் இவன் வேலை செய்தாலும் நடந்ததை எல்லாம் கவனித்து இவன் யோசிக்கிறவனாக இருந்தான். மரண பயத்தினால் இவன் இப்படிச் செய்தான் என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான், இவனுக்குச் சாக விருப்பமில்லை. ஆனால் அவன் என்ன செய்தான் என்பதுதான் முக்கியமே தவிர எதனால் அதைச் செய்தான் என்பது முக்கியமில்லை. ஏனென்றால் ஆண்டவர் எல்லாச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி ஒரு மனிதனைத் தன் பக்கம் திருப்பிக் கொள்ளுவார். பெரிய காரியங்களைப் பயன்படுத்தி சிலரை இரட்சிக்கவும் செய்வார். பவுலின் இரட்சிப்பைப் பாருங்கள். குதிரையிலிருந்து கீழே விழுந்து கண்ணும் தெரியாமல் போக ஆண்டவர் அவனோடு நேராகப் பேசி அவன் மனந்திரும்பும்படிச் செய்தார். நமக்கும் கூட இதுபோல நடந்தால் நன்றாய் இருக்குமே என்று ஆசைப்படலாம். ஆனால் என்ன செய்வது, எல்லாருக்கும் அதுபோல நடக்காது. அவருடைய இறையாண்மையின்படியே எதுவும் நடக்கும். நமக்கு சாட்சி சொல்ல அதிசயமாய் ஒன்றும் இருக்காது, குருடனாக இருந்தேன் இப்போது கண்கள் திறந்துவிட்டது என்று மட்டுந்தான் சொல்ல முடியும். ஆண்டவர் இப்படியும் செய்வார், அப்படியும் செய்வார், அவரால் எதையும் செய்ய முடியும்.
இங்கே இந்தப் படைத்தலைவன் மரணபயத்தினால் எலியாவோடு பேசியிருந்தாலும் அவன் தன்னைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறான். அதுதான் முக்கியம். இங்கிருந்து திரும்பிபோனால் அகசியா இவன் தலையை எடுத்துவிடுவானே, ஆனால் அவன் அதற்குப் பயப்படவில்லை. இவன் யாருக்குப் பயப்பட வேண்டுமோ அவருக்குப் பயப்பட்டான்; இவன் ஜீவனுள்ள தேவனுக்குப் பயப்பட்டான். சிலர், பயத்தினால் மனந்திரும்பக் கூடாது, அது சரியான மனந்திரும்புதலாக இருக்காது என்று சொல்லுவார்கள். அது தவறு. இவனை மனந்திரும்ப வைத்தது கர்த்தருடைய பயங்கரம். அது பயங்கரமாக இருந்தாலும் நன்மையாக முடியுமானால் அது நல்லதுதான். மனந்திரும்புவதுதான் அவசியமே தவிர அது எதனால் ஏற்பட்டது என்று கேள்வி கேட்கக்கூடாது. நானும் (ஆசிரியர்) இருதயம் கடினப்பட்டுப் போய் இந்துவாக இருந்தவன்தான். நான் பாரம்பரிய முறைப்படி இந்து வெறியனாகத்தான் இருந்தேன். வேதத்தின் மீதும், ஆண்டவர் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஆண்டவர் என்னை அசைப்பதற்குப் பயன்படுத்தியவற்றில் ஒன்று என்னுடைய தாயின் மரணம். அம்மாவும் நானும் மிகவும் நெருக்கமாக இருந்தோம். அவர்களுடைய மரணம் என்னை என்னென்னவோ செய்துவிட்டது. ஏதேதோ கேள்விகளையெல்லாம் கேட்க வைத்தது. நான் மரித்தால் எங்கே போவேன் என்று யோசிக்க வைத்து கடைசியில் இயேசுவிடம் கொண்டுவந்து விட்டது. ஒருவரை இரட்சிப்பதற்கு சிலநேரம் ஆண்டவர் மரணபயத்தையும் பயன்படுத்துவார்.
ஜோர்ஜ் விட்ஃபீல்டு நான்காயிரம், ஐயாயிரம் பேர் இருந்தாலும் ஒலிவாங்கி (Mic) இல்லாமல் எல்லாருக்கும் நன்றாகக் கேட்கும்படிப் பேசுவார். அவரால் அது எப்படி முடிந்ததோ எனக்குத் தெரியாது. அமெரிக்காவில் அவர் பிரசங்கம் செய்த இரண்டு இடத்தை நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். 1756 இல் இங்கிலாந்தில் உள்ள யோர்க்க்ஷயர் என்ற இடத்தில் வில்லியம் கிரிம்ஸ்வேல் என்ற போதகர் பணியாற்றிய சபையில் ஒரு கூட்டம் நடந்தது. ஜோர்ஜ் விட்ஃபீல்டுக்காக வெட்டவெளியில் பெரிய பிரசங்க மேடை அமைத்து கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய பிரசங்கத்தைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதிக் கொண்டு வந்தனர். விட்ஃபீல்டு ஜெபம்பண்ணி முடித்துவிட்டு, பிரசங்கத்திற்காக எபிரெயர் 9:27 ஐ வாசித்தார்.
“அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” என்ற வசனம் அது.
வசனத்தை வாசித்து முடித்து பிரசங்கத்தை அவர் ஆரம்பித்தபோது, திடீரென்று கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. கிரிம்ஸ்வேல் விட்ஃபீலிடம் ஓடிவந்து கூட்டத்தில் ஒருவர் இறந்துவிட்டதாகச் சொன்னார். சற்று நேரம் கழித்து மீண்டும் அதே வசனத்தை வாசித்து, விட்பீல்ட் பிரசங்கத்தை ஆரம்பித்தபோது கூட்டத்தின் மத்தியில் மீண்டும் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. மீண்டும் கிரிம்ஸ்வேல் ஒடிவந்து இன்னொருவர் இறந்துவிட்டதாகச் சொன்னார். ஆண்டவர் ஒரு மனிதனை இரட்சிக்க எதையும் பயன்படுத்துவார். இங்கு அவர்கள் மரித்ததற்கு விட்ஃபீலின் ஜெபம் காரணமாக இருந்திருக்கலாம் அல்லது அந்த வசனத்தை அவர் அழுத்தங்கொடுத்து வாசித்த விதம் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். பிரசங்கம் நடப்பதற்கு முன்பாகவே மக்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். வசனத்தை அறிவித்து அதற்கு பிறகு விட்பீல்ட் பிரசங்கம் செய்தார். நிச்சயமாக அநேகர் அன்றையதினம் ஆண்டவரிடம் மனந்திரும்பி வந்திருப்பார்கள். அதை யார் செய்தது? விட்ஃபீல்டு அல்ல, எலியாவைக் கொண்டு ஆண்டவர் செய்தது போல இங்கு விட்பீல்டைப் பயன்படுத்தி ஆண்டவர் கிரியை செய்திருக்கிறார். கர்த்தர் எதையும் பயன்படுத்தி எங்கேயும் எதையும் செய்ய முடியும்.
இங்கு படைத்தலைவனை மாற்றியது நெருப்புதான். 102 பேர் மரித்தது அவனுக்குப் புத்தியைக் கொண்டுவந்தது. அதேநேரத்தில் அகசியாவிற்கு புத்தி வந்ததா? அவனுந்தான் இதே செய்தியைக் கேள்விப்பட்டான். ஆனால் அவன் மனம் மாறவில்லை. அவனுக்குக் கோபம் அதிகரித்தது, இவனுக்கு மனந்திரும்புதல் ஏற்பட்டது. ஆகவே அந்தப் படைத்தலைவன் எலியாவிடம் வந்து மிகவும் பணிவாகப் பேசுகிறான். அவ்வாறு அவன் சொன்னவுடன் ஆண்டவர் எலியாவை அவனோடு போகச் சொல்லுகிறார். உடனே எலியா அவனோடு சென்று அகசியாவிடம் கர்த்தர் சொன்னதைச் சொல்லுகிறார். இங்கே அனைத்தையும் கர்த்தர் தன் வார்த்தையின்படியே செய்தார் என்பதைப் பார்க்கிறோம்.
“அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய், அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.” (2 இராஜாக்கள் 1:15-18).
ஆண்டவருடைய வாக்குறுதிகள் என்றைக்கும் நிறைவேறும். சிலநேரம் சற்று கால தாமதம் ஏற்படலாம், ஆனால் அது நிச்சயமாக நிறைவேறும். மூன்று முறை இங்கு ஆண்டவர் சொன்னார், அதேபோல அனைத்தும் நிகழ்ந்தன.
கடைசியாக நான் உங்கள் முன் சில கேள்விகளை வைக்கிறேன்.
- அகசியா மாதிரி நீங்கள் இருக்கிறீர்களா?
பாவத்தை சாதாரணமாக நினைக்காதீர்கள். பாவம் மிகவும் கொடுமையானது. அது இருதயத்தை ஆண்டு, தவறான வழியில் போக வைத்தும், சிலைகளை எல்லாம் வணங்க வைத்தும் நம்மைக் கேடான வழிகளில் கொண்டு செல்லும். பிசாசு நம்மை அவ்விதமாகத்தான் வழிநடத்துவான்.
- நீங்களும் எவ்வளவுதான் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும் இருதயம் கடினப்பட்டுப் போயிருக்கிறீர்களா?
தேவன் ஜீவனுள்ளவர், அவர் மலையில் இருப்பதில்லை. அவரை மரத்திலும் கல்லிலும் கொண்டுவந்து அடைக்க முடியாது. அவர் மனிதனுடைய இருதயங்களில் வாழுகிற தேவனாக இருக்கிறார். உங்கள் இருதயம் கடினப்பட்டுக் கல்லையும் மண்ணையும் வணங்குவதற்கு காரணம் உங்களில் இருக்கிற பாவம்தான். பாவம் உங்களுடைய கண்களை மறைக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் ஆண்டவரைப் பற்றிக் கேள்விப்ட்டாலும் இருதயம் மனந்திரும்பவில்லை. உங்கள் அருகில் உட்கார்ந்து இருப்பவர்கள் மனந்திரும்புகிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை மாற்றப்பட்டுள்ளது. எப்படியோ இருந்தவன் இப்போது நல்ல வழியில் போகிறான், அவன் வாழ்க்கையில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பார்க்கிறீர்கள். இதைல்லாம் நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தும் இன்னும் இருதயம் கடினப்பட்டுபோய் ஆண்டவரிடம் திரும்பாமல் இருக்கிறீர்களா? ஆகாப் ராஜா இப்படித்தான் இருந்தான், அவன் இறந்து போனான். அவன் மகனான அகசியா அவன் வழியிலேயே சென்று அவனும் இறந்துபோனான். ஆண்டவர் உங்களுக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறார். உங்கள் வாழ்க்கையும் ஆகாபை போல, அகசியாவை போல, யெரொபெயாமை போல முடிய வேண்டுமா? ஆண்டவருடைய வார்த்தையும் அவருடைய கோபமும் நிலையானது. அதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டுமானால் தொடர்ந்து இருதயத்தைக் கடினப்படுத்தாதபடி, எப்படி அந்த படைத்தலைவன் தன்னைத் தாழ்த்தினானோ அதேபோல நீங்களும் ஆண்டவருக்கு முன்பாக உங்களைத் தாழ்த்துங்கள். இயேசு மட்டுமே ஜீவனுள்ள தேவன். அவரை மட்டுமே இன்றிலிருந்து வழிபடப் போகிறேன், அவர் மட்டுமே எனக்கு ஆண்டவர், என்று அறிவித்து வேறு தேவர்களாக இருக்கிற கல், மண், சிலை எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். மனந்திரும்பி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை மட்டுமே விசுவாசிக்கிறவர்களுக்கு இரட்சிப்பு உண்டு. இந்தப் படைத்தலைவனுக்கு அன்றைக்கு விடுதலை வந்தது. சுற்றியிருக்கிற எத்தனையோ பேருக்கு வராத விடுதலை அவனுக்கு வந்தது. ஏனென்றால் ஆண்டவர் அவனோடு பேசினார்.
- உங்களோடும் ஆண்டவர் பேசுகிறாரா?
- உங்கள் வாழ்க்கை எப்படியிருக்கிறது?
- அகசியாவைப் போல அப்படியே தொடர்ந்து போய் ஆண்டவர் இல்லாமல் இறக்கப் போகிறீர்களா? இப்போது மனந்திரும்பாமல் எப்போது மனந்திரும்பப் போகிறீர்கள்?
இயேசுவின் வழி நீதியான வழி. இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் ஜீவனைக் கொடுக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. அவரை விசுவாசியுங்கள், அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்!