2 இராஜாக்கள் 4:1-7 பழைய ஏற்பாட்டில் இது ஒரு அருமையான வேதப்பகுதி. 2 இராஜாக்கள் புத்தகமே ஒரு அருமையான நூலாக இருக்கிறது. என்னுடைய சபையில் அநேக ஆண்டுகளுக்கு முன்பாக இதிலிருந்து செய்திகளைக் கொடுத்திருக்கிறேன்.
இந்த நூல் ஆரம்பிக்கிற விதமே அருமையாக ஆரம்பிக்கிறது. இது எலியாவுக்குப் பிறகு எலிசா செய்த அரும்பெரும் காரியங்களையெல்லாம் பதிவு செய்திருக்கிறது. எலியா தன் ஊழியத்தை ஆரம்பித்தபோது மிகவும் அதிரடியாக ஆரம்பிப்பதை நாம் பார்க்கிறோம். ஆங்கிலத்தில் Explosive miracles என்று சொல்லுகிற வண்ணம் அருமையான அற்புதங்களையெல்லாம் செய்து அவர் தன் ஊழியத்தைத் தொடங்கினார். இந்த நூலை முழுமையாக வாசிக்கிறபோது அக்காலம் வார்த்தைப் பஞ்சம் நிலவிய ஒரு காலமாக நாம் காணமுடிகிறது. இருந்தபோதும் ஆண்டவர் எலிசாவையும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களையும் அங்கு வைத்திருந்தார். இந்தப் பகுதியை வாசிக்கும்போது ஆகாபின் குமாரனாகிய யோராம் காலத்தில் எலிசா வாழ்ந்திருந்ததை நாம் காண்கிறோம்.
இதற்கு முந்தைய அதிகாரமான மூன்றாவது அதிகாரத்தை நாம் வாசிக்கிறபோது யோராமின் கேடான நடத்தை மற்றும் தவறான நடவடிக்கைகளினால் ஆண்டவர் அவனைத் தண்டித்தார் என்பதை அறிந்துகொள்கிறோம். அவனைத் தண்டித்தது மட்டுமல்லாமல் இஸ்ரவேலுக்கு ஆண்டவர் விடுதலையைக் கொண்டு வந்ததையும் நாம் அறிகிறோம். இந்த நான்காவது அதிகாரத்தில் அதன் முதல் ஏழு வசனங்களும் அருமையாக ஆரம்பிக்கின்றன. அங்கு ஒரு விதவையைப் பார்க்கிறோம், அவள் யார் என்று கூட நமக்குத் தெரியாது. அவளுடைய பெயர் நமக்குச் சொல்லப்படவில்லை. அவளுடைய வாழ்க்கையில் நடந்த அற்புதமான நிகழ்ச்சியை நாம் இங்கு வாசிக்கிறோம். அதுவும் எலிசாவின் ஊழியத்தின் மூலமாக இது நிகழ்ந்திருக்கிறது. இந்தப் பகுதி நமக்கு எதை நினைவுபடுத்துகிறதென்றால் நாம் ஆராதிக்கிற நம்முடைய தேவன் திக்கற்றவர்களின் தேவனாக இருக்கிறார் என்பதைத்தான்.
சங்கீதங்களிலிருந்து ஒரு சில வசனங்களைப் பார்க்கலாம்.
சங்கீதம் 146:9
பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
திக்கற்ற பிள்ளை என்பது ஆங்கிலத்தில் தகப்பன் இல்லாதவர்கள் (Fatherless) என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
சங்கீதம் 68:5
தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
சங்கீதம் 10:18
மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.
இவ்விதமாக நம்முடைய தேவன் திக்கற்றவர்களுக்கெல்லாம் துணையாக இருக்கிறார். நாம் பார்க்கிற இந்தப் பகுதியிலும் கூட ஒரு திக்கற்ற விதவையைப் பார்க்கிறோம். நாம் மேலே குறிப்பிட்ட சங்கீத வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிற உண்மைகள் இவளுடைய வாழ்க்கையில் நிதர்சனமாக நடப்பதை நாம் காண்கிறோம். நம்முடைய ஜெபங்களைக் கேட்டு நம்மைக் காக்கின்ற ஆண்டவர், அவளுடைய வாழ்க்கையிலும் ஒரு விடுதலையைக் கொடுத்து அவளுடைய பிரச்சனைகளையெல்லாம் அருமையாகத் தீர்த்து வைக்கிறார். ஆகவே இந்த வேதப்பகுதி அந்த ஆண்டவர் நாம் நம்பக்கூடியவராக இருக்கிறார் என்றும், நமக்கு உதவி செய்கிற அந்த ஆண்டவர் தன்னை நம்புகிறவர்களை ஒருநாளும் கைவிடமாட்டார் என்பதையும் நமக்குக் காட்டுகிறது.
இந்தப் பகுதியை நாம் பார்க்கிறபோது இதை வாசிக்கின்ற, ஆண்டவரை அறியாத, தேவ நம்பிக்கை இல்லாத வாசகர்கள் இருந்தால் நீங்கள் நிச்சயமாக அவரை நம்பலாம். தேவன் தன்னை நம்புகிறவர்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை உறுதியாக இந்தப் பகுதி நமக்குக் காட்டுகிறது.
இந்தப் பகுதியில் இருந்து இந்த ஆக்கத்தில் மூன்று காரியங்களை நாம் கவனிக்கப் போகிறோம்.
1. விதவையின் மோசமான நிலை
2. விதவையின் ஜெபம்
3. விதவைக்கு ஆண்டவர் காட்டின கருணை
1. விதவையின் மோசமான நிலை
முதலாவதாக, இந்தப் பகுதி ஒரு விதவையின் மோசமான நிலையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. அவள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாள். அது எப்படி என்றும், அது எவ்விதமான சூழ்நிலை என்றும் நாம் கவனிப்போம். முதல் வசனம் அவளைப்பற்றி நமக்கு இப்படியாகச் சொல்லுகிறது.
2 இராஜாக்கள் 4:1
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ.
தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் என்பவர்கள் யார்? எலிசாவின் காலத்தில் வார்த்தைப் பஞ்சம் நிலவிய சூழ்நிலையில் இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் நாடு முழுவதும் இருந்தார்கள். இவர்கள் எலிசா தீர்க்கதரிசியின் மூலம் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தார்கள். இறையியல் கல்லூரி மாணவர்களைப் போல நாடு முழுவதும் ஆங்காங்கே இவர்கள் இருந்தார்கள். எலிசா தீர்க்கதரிசியாக இருந்தது மட்டுமல்லாமல், இவர்கள் இருந்த இடங்களுக்கெல்லாம் சென்று இறையியல் போதனைகளைக் கொடுத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார். இந்தக் காலத்தில் காணப்படுகிற இறையியல் கல்லூரியைப் போல அந்தக் காலத்திலும் இந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இவர்களுடைய வேலை என்ன? இவர்கள் நாட்டு மக்களுக்குத் தேவனுடைய வார்த்தையைக் கொடுத்து வந்தார்கள். அந்நாட்களில் ஆண்டவர் தீர்க்கதரிசிகளை எழுப்பி வைத்திருந்ததற்கு காரணமே அவர் பேசுகிறபொழுது தீர்க்கதரிசிகளின் மூலமாகப் பேசுவதற்காகத்தான். நாட்டு ராஜாக்களும் கூட இந்தத் தீர்க்கதரிசிகளிடமிருந்துதான் தேவனுடைய வழிகளை அறிந்து கொண்டார்கள், ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டார்கள். அவ்விதமான தீர்க்கதரிசிகள் எழும்புவதற்காகத்தான் இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த விதவையைப் பார்க்கிறபோது அவளுடைய கணவன் தீர்க்கதரிசிகளின் புத்திரர்களில் ஒருவராக இருந்தார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. அவன் நிச்சயமாக தேவனை அறிந்த ஒரு விசுவாசியாக இருந்திருக்கிறான். தன் கணவனைக் குறித்து முதல் வசனத்தில் அவள் இவ்விதமாகச் சொல்லுகிறாள்.
2 இராஜாக்கள் 4:1
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்;
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? அவளுடைய கணவன் தீர்க்கதரிசியின் புத்திரர்களில் ஒருவன் மட்டுமல்ல, தேவனுக்குப் பயந்து நடந்தவனாகவும் இருந்திருக்கிறான். அவன் தேவனை அறிந்தவனாகவும் அவரை நம்பினவனாகவும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தவனாகவும் வாழ்ந்திருக்கிறான். இருந்தபோதும் அவன் தன் வாழ்க்கையில் சடுதியாக மரணத்தைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் இவள் விதவையானாள், அவளுடைய இரண்டு பிள்ளைகளும் தகப்பன் இல்லாத ஒரு நிலையை அடைந்தார்கள். இந்தப் பகுதியின் நிகழ்வுகள் எந்த இடத்தில் நடந்தன என்று குறிப்பிட்டு நம்மால் சொல்ல முடியவில்லை, இருந்தபோதும் கில்கால் என்ற பகுதியில் நடந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏனென்றால் அங்கு தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் வகுப்புகள் அந்நாட்களில் நடைபெற்று வந்தன. இவ்விதமாக தீர்க்கதரிசிகளின் புத்திரர்களுக்கு வகுப்புகளை ஆரம்பித்து வைத்தது சாமுவேல் தீர்க்கதரிசிதான். இந்த வகுப்புகளில் ஆண்டவரை விசுவாசித்த வாலிபர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து அங்கேயே வாழ்ந்து அவ்விதமான பயிற்சியைப் பெற்று வந்தார்கள். எலிசாவின் நாட்களில் நாட்டில் பஞ்சம் கொடுமையாக இருந்தது. வார்த்தைப் பஞ்சம் மட்டுமல்ல உணவுப் பஞ்சமும் கூட காணப்பட்டது. அப்பொழுது எலிசா பல இடங்களுக்குச் சென்று இவர்களுக்குப் போதித்தார். தீர்க்கதரிசிகளின் புத்திரர்களின் வேலையே ஆவிக்குரிய வேலைதான். தேவனுடைய வார்த்தையை விளக்கப்படுத்தி மக்களுக்குப் போதிப்பதுதான் இவர்களுடைய பணியாக இருந்தது. அப்படியாக இதில் பயிற்சி பெறுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணித்திருந்தார்கள். தேவனுடைய வரலாற்றைப் பழைய ஏற்பாட்டிலிருந்து கற்றுக்கொள்ளுவதுமட்டுமல்ல, அதில் சொல்லப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின் அர்த்தங்களையெல்லாம் கற்றுக்கொண்டு தங்களை ஆண்டவருடைய பணிக்காக வளர்த்துக்கொண்டார்கள், ஒப்புக்கொடுத்தார்கள் இந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரர். இந்த விதவையின் கணவனும் அப்படியாக வேதத்தைக் கற்றுக்கொண்டு வளர்ந்து வந்தவன்தான். இருந்தபோதும் அவனுக்கு மரணம் நேரிட்டது, அவனுடைய மனைவி விதவையாகிவிட்டாள், அவனுடைய பிள்ளைகளும் தகப்பன் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இதுமட்டும் அவளுக்கு பிரச்சனை இல்லை, அதோடுகூட அநேக சோதனைகளும் வேதனைகளும் அவளுக்கு ஏற்பட்டன. மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அவள் இருந்தாள். அவளுக்கு வீடு இருந்தது, ஆனால் அந்த வீட்டினுள் எதுவுமே இல்லை. அவளுடைய சமையலறைக்குள் சென்று பார்த்தால் சாப்பிடுவதற்கு கூட ஒன்றுமே இல்லாதிருந்தது. தேவைகள் அவளுக்கு அதிகமாக இருந்தது. ஒரு பஞ்ச நிலை நாட்டில் இருந்தது மட்டுமல்ல, அவளுடைய வாழ்க்கையிலும் துன்பகரமான நிலை காணப்பட்டது. ஆனால், இவள் ஆபிரகாமின் வழியில் வந்த ஒரு தேவபக்தியுள்ள பெண்ணாக இருந்தாள். எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லாமல் தேவனை நம்பி அவரை ஆராதித்து வந்தாள். தன்னுடைய பிள்ளைகளையும் கூட தேவனுக்குப் பயந்து நல்ல வழிகளில் வளர்த்து வந்தவளாக இருந்தாள். அப்படி இருந்தபோதும் அவளுடைய வாழ்க்கையிலும் பிரச்சனைகள் சம்பவித்தது என்பதைப் பார்க்கிறோம்.
நாம் ஆண்டவரிடத்தில் வந்துவிட்டோம், அவரை நம்புகிறோம், விசுவாசிக்கிறோம், அவருடைய வழிகளில் போகிறோம், அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிகிறோம், அதனால் ஆண்டவர் எப்போதும் ஆசீர்வாதத்தை நம்மீது கொட்டிக்கொண்டே இருப்பார் என்று நாம் நினைக்கக்கூடாது. இன்றைக்கு அப்படியான போலித்தனமான சுவிசேஷத்தை எல்லா இடங்களிலும் நம்மினத்தில் கேள்விப்படுகிறோம். அதற்கு செழிப்பு உபதேசம் என்று பெயர். இது அமெரிக்காவில் ஆரம்பித்து எல்லா நாடுகளிலும் பரவி இப்போது நம் நாட்டிலும் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீங்கள் இயேசுவிடம் வந்தால் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழலாம் என்று பொய்யான செய்தியை அநேக பிரசங்கிகள் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் மோசமான ஒரு செயலாகும். வேதம் இப்படி ஓரிடத்திலும் போதிக்கவில்லை. இவர்களுக்கு விசுவாச வாழ்க்கை என்றால் என்ன என்பதே தெரியாமல் இருக்கிறது. இவர்கள் போதகர்கள் என்ற பெயரில் போலித்தனமான காரியங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மக்கள் ஆண்டவரைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
தேவனிடத்தில் வருவதென்பது நாம் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து, பரலோகம் போவதற்கான ஒரு வாழ்க்கைதான் அது. அதற்கு நாம் இந்த உலகத்தில் செல்வந்தர்களாக இருந்து சகல வசதிகளையும் பெற்று வாழ்ந்துவர வேண்டும் என்கிற அவசியமே இல்லை. சில பேருக்கு ஆண்டவர் தம்முடைய சித்தத்தின்படி அவ்விதமான வசதியைக் கொடுப்பார், சிலருக்கு அவ்விதமான வசதி கிடைக்காது. நாம் வணங்குகிற ஆராதிக்கிற தேவனில் எப்போதும் தங்கியிருக்க வேண்டும். அவர் தன்னுடைய சித்தத்தின்படி நாம் கேட்கும் நேரம் நமக்கு உதவி செய்கிற தேவனாக இருக்கிறார். ஆனால் நம்முடைய வாழ்க்கையில் எப்போதும் நல்லதை மட்டுமே அவர் செய்யவேண்டும் என்று நினைப்பது தவறு. எதிர்பாராத பேரிடர்கள் அவிசுவாசிகளை மட்டுமல்ல விசுவாசிகளையும் பாதிக்கும். அதனால் விசுவாசிகள் இறந்தும் போகலாம். அதற்கெல்லாம் நேரடிக் காரணம் ஆண்டவர் என்று நாம் நினைக்கக்கூடாது. நம்மைச் சுற்றிக் காணப்படும் பாவத்தின் பாதிப்பின் காரணமாகவும், பாவம் இவ்வுலகில் தொடர்ந்திருப்பதாலும் அவைகள் நமக்கும் நேரிடுகின்றன; அவற்றைக் கர்த்தர் அனுமதிக்கிறார்.
ஆகவே இந்தப் பெண் இவ்வளவு பக்தியுள்ளவளாக இருந்தும், இவளுடைய கணவன் ஒரு தீர்க்கதரிசிகளின் புத்திரராக இருந்தும், ஆண்டவர் அவர்களோடு இருந்தும்கூட அவளுக்கு வாழ்க்கையில் துன்பங்கள் நேரிட்டது என்று நாம் பார்க்கிறோம். முதல் வசனத்தில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்.
2 இராஜாக்கள் 4:1
உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்.
உண்மையிலேயே அவளுடைய கணவன் மட்டுமல்ல அவளும்கூட ஆண்டவருக்குப் பயந்து வாழ்ந்து வந்தாள். அவ்வாறு பயந்து வாழ்ந்துவந்த குடும்பத்திற்கு வந்த பிரச்சனைகளைப் பாருங்கள். முதல் வசனத்தில் மேலும் நாம் தொடர்ந்து வாசிக்கிறோம்,
2 இராஜாக்கள் 4:1
கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
ஏன் இவ்வாறு இவர்களுக்கு நேரிட்டது? கணவனை இழந்ததால் குடும்பத்தில் பல செலவுகள் இருந்திருக்கும். ஆகவே அந்தக் காலத்தில் கடன் கொடுப்பவர்களிடம் சென்று அவள் கடன் வாங்கியிருக்கிறாள். இதை வாசித்த உடனே நீங்கள், இதைத்தானே நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆகவே கடன் வாங்கலாம் என்பதுபோல் இங்கே ஆண்டவர் சொல்லியிருக்கிறார் என்று தவறாக எண்ணிக் கடன் வாங்கப் போய்விடக்கூடாது. கடன் வாங்கலாம் என்பதற்கான போதனையை இந்தப் பகுதி அளிக்கவில்லை. அது இஸ்ரவேல் நாட்டில் சட்டப்பூர்வமாக இருந்த ஒரு நிலையாகும். அவள் கடன் வாங்கி அதிக நாட்கள் ஆகி நிலைமை மிகவும் மோசமாகப் போய்விட்டது. அந்த நாட்டுச் சட்டப்படி கடன் கொடுத்தவன் அந்தக் கடனைத் திரும்ப பெற்றுக்கொள்ளுவதற்காக அவளுடைய இரண்டு மகன்களையும் தனக்குக் கீழாக வேலை செய்யும்படியாக அடிமையாக்கிக்கொள்ள வந்தான். அவ்வாறு அவர்கள் அடிமைகளாக வேலை செய்யும்போது அதிலிருந்து வருகிற வருமானத்தை அந்தக் கடன் தொகையிலிருந்து அவன் கழித்துக்கொள்ளுவான். அப்படியான மிகவும் மோசமான நிலைக்கு அவள் வந்துவிட்டாள். அவளுக்கு அது இருதயத்தின் பெரிய துன்பமாக வாழ்க்கையில் மாறியது. அவளுடைய மகன்கள் அந்தக் கடனை அடைக்க ஏழு வருடங்களுக்கு அடிமைகளாக வேலை செய்ய வேண்டும். அது அவர்கள் நாட்டுச் சட்டத்தில் இருந்தது. ஆகவே கடன்காரன் மிகவும் மோசமானவனாக இருக்கிறான் என்று தவறாக அவனைக் குறித்து எண்ணிவிடக்கூடாது.
அவளுடைய நிலை மிகவும் துன்பகரமானது, ஏற்கனவே கணவரை இழந்து பெரிய துன்பத்தில் இருந்தாள், இப்போது அவள் தன் இரண்டு பிள்ளைகளையும் இழக்கின்ற ஒரு நிலைக்கு வந்திருக்கிறாள். அவள் வீட்டில் சாப்பிடுவதற்கும் ஒன்றுமில்லை, ஒருவிதமான உணவுப் பதார்த்தம் கூட இல்லை. எங்கேயும் போய் வேலை செய்யவும் வழியில்லை, அவளுக்கு என்ன வயது என்பதுகூட நமக்குத் தெரியாது. அவளுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகும்வகையில் ஒரு மோசமான நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள். கடன்காரர்கள் வந்து பணத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள், இப்போது தன் பிள்ளைகளை அவள் இழக்க வேண்டிய நிலை வந்திருக்கிறது. அவளுக்கு இருந்த இந்த இருளான சூழ்நிலையில் அவளுக்குத் துணையாக இருந்தது தேவனுடைய வார்த்தை மட்டுந்தான். அவள் என்ன செய்தாள்? எலிசாவிடம் போகிறாள் என்று நாம் பார்க்கிறோம். ஏனென்றால் எங்கு தீர்க்கதரிசிகள் இருந்தார்களோ அங்குதான் தேவனுடைய வார்த்தை இருந்தது. ஆகவே அவள் சரியானதைத்தான் செய்தாள். நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் துன்பங்கள் வருகிறபோது நாம் என்ன செய்ய வேண்டும்? எங்கு போக வேண்டும்? ஆண்டவரிடத்தில்தான் போகவேண்டும். அதைத்தான் அவளும் செய்கிறாள், எலிசாவிடம் சென்று தன் நிலைமையை விளக்குகிறாள். அவள் அவ்வாறு சென்று எலிசாவிடம் பேசுகிறபோது எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை.
இந்த இடத்தில் நாம் படிக்க வேண்டிய பாடம் இருக்கிறது. சில நேரத்தில் ஆண்டவர் தன்னுடைய பராமரிப்பின் காரணமாக தம்முடைய மக்களுடைய வாழ்க்கையில் இப்படியான சூழ்நிலைகளை அனுமதிக்கிறார். அவ்வாறு நமக்கு நேரிடும்போது ஆண்டவர் நம்மை நேசிப்பதை நிறுத்திவிட்டார் என்று நாம் நினைக்கக்கூடாது. தம்முடைய அன்பினால் முன்குறித்து நம்மைத் தெரிந்துகொண்டிருக்கும் தேவன், இயேசுவின் மூலம் நமக்கு பாவங்களிலிருந்து விடுதலையைக் கொடுத்திருக்கிறார். ஆகவே அவர் தான் காட்டுகிற அன்பை நிறுத்திக்கொள்ளமாட்டார். நம்முடைய தேவன் நம்மைக் கைவிடுகிற தேவனல்ல, அதனால் அவரைப் பற்றி நாம் தவறாக நினைக்கக்கூடாது. இஸ்ரவேல் தேசத்தைப் பாருங்கள், எகிப்திலிருந்து தம்முடைய மக்களை விடுதலையாக்கித் தாம் வாக்குத்தத்தம் செய்த கானான் தேசத்திற்குக் கொண்டுவந்தார் இல்லையா? ஆனால், அதேநேரம் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை அனுபவிக்க நேரிட்டது. அதுபோலத்தான் இந்த விதவையின் வாழ்க்கையிலும் தேவனின் அனுமதியில்லாமல் இவ்விதமான கஷ்டங்கள் நேரிட்டிருக்க வாய்ப்பில்லை. கஷ்டங்கள் நேரிட்டாலும் தேவன் அவளோடு இருந்தார். அவள் மீது தான் காட்டுகிற அன்பை எவ்விதத்திலும் அவர் குறைத்துக்கொள்ளவில்லை. இவ்வாறு கஷ்டங்கள், துன்பங்கள், பாடுகள் நம் வாழ்க்கையில் வருவது நமக்கு ஒரு பாடமாக இருக்கிறது. எவ்வளவு மோசமான சூழ்நிலை நமக்கு நேரிட்டாலும் அது நமக்குப் பெரிய வாய்ப்பைக் கொடுக்கிறது. அது எத்தகைய வாய்ப்பு? நாம் ஆண்டவரிடத்தில் நெருங்கிப் போவதற்கும், அவரில் நாம் இன்னும் தங்கியிருப்பதற்கும், அவரோடு பேசுவதற்கும் அது நமக்கு உதவுகிறது.
2. விதவையின் ஜெபம்
இரண்டாவதாக இந்த விதவையின் ஜெபத்தைக் குறித்துப் பார்ப்போம். இந்த விதவை மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து எலிசாவை நோக்கிக் கதறுகிறாள். எலிசாவை நோக்கி இப்படிக் கதறுகிறாள் என்றால் அது ஆண்டவரை நோக்கிக் கதறுவது என்று அதற்கு அர்த்தமாகும். ஏனென்றால் எலிசா ஆண்டவருடைய மனிதனாக தீர்க்கதரிசியாக இருக்கிறார். அவரிடத்திலிருந்துதான் ஆண்டவருடைய வார்த்தை வருகிறது. அவரிடம் சென்று பேசி தன்னுடைய நிலையை விவரிப்பதெல்லாம் ஆண்டவரிடமே சொல்லுவது போலாகும். தன்னுடைய நிலையை ஆண்டவருக்கு முன்பாக ஒரு படமாக விரித்துக் காட்டுகிறாள். அவளுடைய ஜெபத்திலிருந்து சில காரியங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலாவதாக, அவள் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வழமையாக தொடர்ச்சியாக ஜெபித்து வந்திருக்கிறாள். அவள் தன் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான ஒருநிலையில் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாத ஒரு பஞ்ச நிலைமையில் மட்டும்தான் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டாள் என்று நாம் நினைக்கக்கூடாது. ஏற்கனவே நாம் பார்த்தபடி அவளுடைய கணவன் தேவனுக்குப் பயந்து வாழ்ந்து வந்தவனாக இருந்தான். இவளும் அதேவிதமாக தேவனை நம்பினாள், இருவரும் குடும்பத்தை அவ்வாறு வளர்த்திருக்கிறார்கள், தேவனிடத்தில் அடிக்கடி ஜெபித்து வந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆகவே இவள் ஆண்டவரிடத்தில் ஜெபிப்பது ஒன்றும் புதிய காரியமல்ல. அவளுடைய ஜெபத்தைப் பார்க்கிறபோது அதில் அவள் தன்னுடைய நிலைமையை ஆண்டவரிடத்தில் எடுத்துச் சொல்லுகிறாள். அவள் ஆண்டவரிடத்தில் எவ்விதமான நிபந்தனையையும் வைக்கவில்லை. இதைத் தாரும் ஆண்டவரே, அதைத் தாரும் ஆண்டவரே என்றெல்லாம் அவள் கேட்கவில்லை.
2 இராஜாக்கள் 4:1
உமது அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன் கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
தனது நிலையை உள்ளது உள்ளபடி அவள் ஜெபத்தில் எடுத்து வைக்கிறாள் என்று நாம் பார்க்கிறோம். எந்தவிதத்திலும் அதைக் கூட்டியோ குறைத்தோ சொல்லவில்லை. அவளுடைய ஜெபத்தைக் கவனிக்கிறபோது அது அருமையானதாக இருக்கிறது. அவளுடைய தேவைகளை அவள் ஆண்டவர் முன் வைக்கிறாள், இதைத்தான் ஆண்டவர் நம்மையும் செய்யச் சொல்லுகிறார். இவ்வாறு அவள் சொன்னபோது இதைத்தான் நீங்கள் செய்யவேண்டும், இவ்வளவு நேரத்தில் அதைச் செய்யவேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை அவள் முன்வைக்கவில்லை. அவள் சத்தம்போட்டு அநாவசியமாகப் புலம்பித் தன் தேவைகளைச் சொல்லவில்லை, வழமையாக ஜெபிக்கிற விதத்தில்தான் சொன்னாள் என்று நாம் பார்க்கிறோம். அதேநேரம் மிகவும் வருத்தத்தோடு ஜெபித்திருந்திருப்பாள்.
ஜெபம் செய்வது மிகவும் அவசியம், கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அன்றாடம் ஜெபம் செய்கிறவர்கள். யார் தன் வாழ்க்கையில் ஜெபம் செய்யவில்லையோ அவன் கிறிஸ்தவனாக இருக்க முடியாது என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார். அதற்காக அவன் எத்தனை தடவை ஜெபித்திருக்க வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. இங்கு எத்தகைய மனிதன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாதென்றால் ஜெபத்தைப் பற்றி நினைக்காத, ஜெபமே பண்ணாத மனிதன்தான். ஒருவன் புறத்தில் கிறிஸ்தவனைப் போலத் தோற்றமளிக்கமுடியும். ஆனால் அவன் வாழ்க்கையில் ஜெபம் என்பதே இல்லாமல் இருக்கலாம். அவன் நிச்சயமாக ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது.
அநேகர் ஜெபத்தைப் பற்றிய தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். ஜெபம் என்பது என்ன? ஆண்டவரிடத்தில் நம்முடைய தேவைகளையெல்லாம் கேட்பதற்கான வழி என்றால் அது மிகவும் தவறு. ஜெபம் என்பது ஆண்டவரோடு ஐக்கியத்தில் வருவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஒரு திருநியமமாகும். அது ஒரு கிருபையின் கருவியாகும், அவரோடு பேசுவதற்காக அதை ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஜெபத்தின் மூலம் மட்டுமே நாம் ஆண்டவரிடத்தில் பேச முடியும். ஆண்டவர் நம்மோடு பேசுவதற்கு வேதம் இருக்கிறது. அதன் மூலம் ஆண்டவர் நம்மோடு பேசுகிறார், ஜெபத்தின் மூலம் நாம் ஆண்டவரோடு பேசுகிறோம். ஆண்டவரை நேசிக்கிறவர்கள், அவருடைய ஐக்கியத்தில் மிகவும் ஆவல் உள்ளவர்கள் அவரோடு பேசுவார்கள். ஆகவே நாம் ஜெபத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. நாம் கேட்ட நேரமெல்லாம் எதையும் நமக்குக் கொடுப்பதற்காக ஆண்டவர் ஜெபத்தைக் கொடுத்திருக்கிறார் என்று நினைத்து ஜெபிக்கக்கூடாது. அது மிகவும் தவறானது. நான் தமிழ்நாட்டிற்கு வருகிறபோது கூட்டங்கள் முடிந்தபின்பு எனக்காக ஜெபம் பண்ணுங்கள் பாஸ்டர் என்று அநேகர் காத்திருப்பார்கள். அது ஜெபத்தையும், ஆண்டவரையும் மிகவும் கொச்சைப்படுத்தும் செயலாகும். என் ஜெபத்தில் ஒரு விசேஷமும் இல்லை; என்னிடம் தெய்வீகம் இல்லை.
நாம் மக்களுக்கு ஜெபத்தைக் குறித்துப் போதிக்க வேண்டும். ஜெபம் எதற்காகக் கொடுக்கப்பட்டிருகிறது, எப்படிப்பட்ட விசுவாசிகளாக நாம் இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்றுத்தர வேண்டும். நாம் வசதிகளை அடைவதற்காக சாதாரண மனிதர்களில் தங்கியிருக்கக்கூடாது. நீங்களும் ஜெபிக்கலாம், நீங்களும் ஆண்டவரோடு பேசலாம். ஒரு ஊழியக்காரன்தான் ஜெபிக்க வேண்டுமென்று வேதம் எங்கேயும் சொல்லவில்லை. இவளுடைய கணவன் ஒரு தீர்க்கதரிசிகளின் புத்திராக இருந்தான், இருந்தபோதும் அவள் தேவனிடத்தில் ஜெபிக்கிறாள். ஆகவே நாம் ஜெபத்தைக் குறித்து ஒரு வேதபூர்வமான எண்ணம் கொண்டிருக்க வேண்டும். வாழ்க்கையில் ஜெபம் இல்லாதவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும். நீங்கள் ஜெபிக்கிறீர்களா? உங்கள் சபையில் ஜெபக்கூட்டம் உள்ளதா? அதில் விசுவாசத்தோடு கலந்து கொள்ளுகிறீர்களா? எங்கு பார்த்தாலும் ஆத்துமாக்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூட்டத்திற்குப் போகிறார்கள், ஆனால் ஜெபக் கூட்டத்திற்குப் போவதில்லை. ஆண்டவரை நோக்கிப் பேசுவதற்கு ஏன் நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமென்ன? இருதயம் கடினப்பட்டுப் போய்விட்டதா? நாம்தான் நம்மையே அதைக் கேட்டுப்பார்க்க வேண்டும். ஜெபம் மிகவும் அவசியமானது. நம்முடைய ஆண்டவர் தம்முடைய பிள்ளைகள் தம்மை நோக்கிக் கூப்பிடுவதை விரும்புகிறார். அவ்விதமான உறவை அவர் எதிர்பார்க்கிறார்.
இரண்டாவதாக, தன்னுடைய தேவைகளை எடுத்துச் சொல்லுவதற்காக அவள் தீர்க்கதரிசியிடம் வருவதை நாம் காண்கிறோம். தீர்க்கதரிசி தேவனுடைய மனிதனாக இருக்கிறார். அவரே ஆண்டவருடைய செய்தியாளராக இருந்தார். ஆண்டவருடைய செய்தியை மக்களிடம் கொண்டுவந்தவர்கள் இந்தத் தீர்க்கதரிசிகள். அதே காரியத்தைத்தான் எலியாவும் செய்தார், எலிசாவும் செய்தார். அந்தத் தீர்க்கதரிசியின் மூலம் தேவனுடைய வெளிப்படுத்தல் மக்களிடம் வந்தது. நாட்டின் அரசன் கூட எந்த வழியில் போகவேண்டும், தேவன் என்னிடம் என்ன சொல்லுகிறார், நான் என்ன செய்யவேண்டும் என்பதை எல்லாம் அறிந்துகொள்ள தீர்க்கதரிசியிடம் சென்று கேட்பான். வேதத்தில், சவுல் சாமுவேலைப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டதற்குக் காரணமென்ன? ஆண்டவரிடத்திலிருந்து தனக்கொரு செய்தி வரவேண்டும் என்பதற்காகதான். ஏனென்றால் சாமுவேல் உயிரோடு இருந்தபோது அந்த ஒரு காரியத்தைத்தான் தீர்க்கதரிசியாக அவர் செய்திருக்கிறார். ஆகவே தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையை மக்களுக்குக் கொடுத்தவர்கள். இப்போது இவள் எலிசாவிடம் போகிறாள், ஏனென்றால் அவரிடமிருந்து தேவனுடைய வார்த்தை வருமென்ற நம்பிக்கை இவளுக்கு இருந்தது. தேவன் மட்டுமே திக்கற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதை நம்பி அவள் எலிசாவிடம் வருகிறதை நாம் பார்க்கிறோம். இங்கேயும் சில பயன்பாடுகள் நமக்கு உள்ளன.
இன்று புதிய உடன்படிக்கைக் காலத்தில் தீர்க்கதரிசிகள் இல்லை. இன்று தேவ செய்தியை அளிக்க யார் இருக்கிறார்கள்? திருச்சபைகள் இருக்கின்றன, சபையில் ஆண்டவர் போதகர்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். தேவனுடைய வார்த்தையை எடுத்து விளக்குவதற்காகவும், அதைப் போதிப்பதற்காகவும், மக்களுக்கு ஆத்மீக ஆலோசனைகளைக் கொடுத்து அவர்களை வளர்த்து விடுவதற்காகவும்தான் ஆண்டவர் போதகர்களைக் கொடுத்திருக்கிறார். நம்மினத்தில் அவ்விதமாக விசுவாசத்தோடு பணிசெய்கிறவர்கள் மிகவும் குறைவு. அது நம்முடைய நாட்டைப்பிடித்த ஒரு வியாதியாக இருக்கிறது, அது மிகவும் ஆபத்தானது. பிரசங்கிகள் அவ்விதம் இருக்கக்கூடாது. எலியாவும், எலிசாவும் சொன்னதுபோல தேவனுடைய வார்த்தையை உள்ளது உள்ளபடி மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஆண்டவருடைய சத்தத்தை அவர்கள் கேட்கும்படியாக செய்வதுதான் போதகர்களின் வேலையாக இருக்கிறது. ஆகவே வேதம் சொல்லுகிறபடி நம்முடைய தேவைகளை சபைக்குக் கொண்டுவரலாம். சபையில் ஜெபக்கூட்டம் (Corporate prayer) என்று இருக்கிறது. அதாவது ஆண்களும் பெண்களுமாக மூப்பர்கள் வழிநடத்திக் கூடி வந்து ஜெபிக்கும் கூட்டமே அது. எங்களுடைய சபையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுவாகக் கூடிவந்து அங்கு ஆண்கள் மட்டுமே ஜெபிப்பது வழக்கம். ஏனென்றால் 1 தீமோத்தேயு 2 வது அதிகாரத்தில் தெளிவாக அதைப்பற்றிய விளக்கம் இருக்கிறது. ஆணும் பெண்ணுமாக சபை கூடிவருகிறபோது போதகர்களால் வழிநடத்தப்படுகிற அந்தக் கூட்டத்தில் ஆண்கள் குரலை உயர்த்தி ஜெபம் செய்யவேண்டும். தேவ இராஜ்யத்துக்குரிய தேவைகளையெல்லாம் தேவனுக்கு முன்பாகக் கொண்டுவர வேண்டும். ஜெபம் செய்யாமல் இருக்கிற மற்றவர்கள் வாயைத்திறந்துதான் ஜெபிக்க வேண்டுமென்று இல்லை. ஒருவர் ஜெபிக்கிறபோது அதைக் காது கொடுத்துக் கேட்டு அந்த ஜெபத்திற்கு ஆமென் என்று சொல்லுவதும் ஜெபம்தான். ஆமென் என்று நாம் சொல்லும்போது அந்த ஜெபத்திற்கு நானும் உடன்படுகிறேன் என்பது அர்த்தமாகும். தேவனுக்கு முன்பாக நம் குறைகளை எடுத்து வைத்து, அவருடைய சபை ஊழியங்களுக்காக, அவருடைய பணிக்காக, சுவிசேஷம் எல்லா இடங்களுக்கும் போய்ச் சேருவதற்காக, மேலும் பல காரியங்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும். அன்று எலியா எலிசாவினிடத்தில் குறைகளைக் கொண்டுபோனது போல, நம்முடைய குறைகளைப் போதகரிடத்தில் கொண்டுபோகலாம். அவரிடத்தில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
நமக்குப் பிரச்சனைகள் இருந்தால் அதை மூப்பரிடத்தில் கொண்டு போகவேண்டும் என்று நாம் யாக்கோபு நிருபத்தில் வாசிக்கிறோம். யாக்கோபு நிருபத்தின் கடைசி அதிகாரத்தில் ஒருவனுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் இருந்தபோது மூப்பர்களை வரவழைத்து தன்னுடைய பாவங்களையும் குறைகளையும் விளக்கிச் சொன்னான் என்று நாம் வாசிக்கிறோம். அவர்கள் அவனுக்காக ஜெபம் பண்ணினார்கள், அவனுக்கு நோய் குணமானது மட்டுமல்ல, மன்னிப்பும் கிடைத்தது. இதையெல்லாம் நாம் மூப்பர்களிடம் சொல்லக்கூடாது என்று நாம் நினைக்கக்கூடாது. தவறான போதகர்கள் இருந்தால் அவர்களிடம் போகக்கூடாதுதான். ஆனால் நல்ல போதகர்களை ஆண்டவர் கொடுத்திருக்கிறபோது நாம் நம் குறைகளை அவர்களோடு பகிர்ந்துகொண்டு ஆத்மீக ஆலோசனைகளை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமையாக இருக்கிறது.
இங்கு அந்த விதவை தீர்க்கதரிசியிடம் போகிறாள், அங்கு தன்னுடைய குறைகளையெல்லாம் எடுத்துச் சொல்லுகிறாள். ஏனென்றால் தீர்க்கதரிசி ஆண்டவரோடு பேசுகிறவர், ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு ஆசீர்வதிக்கிறவர், நிச்சயமாக நமக்கு ஆலோசனைகளைச் சொல்லி உதவி செய்வார் என்கிற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. தேவனுக்கு அவள் பயந்த மனுஷியாக இருந்தாள். விசுவாசமான ஒரு வாழ்க்கையை நடத்தி அருமையான சாட்சியாக இருந்தாள். இப்போது அவள் பெரிய துன்பமான நிலையில் இருந்தாள் என்று பார்க்கிறோம். இவ்வாறெல்லாம் சமுதாயத்தில் நீங்கள் பார்க்கவில்லையா? எவ்வளவோ வைராக்கியமாக விசுவாசத்தோடு வாழ்ந்தவர்களுக்கும் புற்றுநோய் வந்திருக்கிறது. சில நேரம் கணவனையோ அல்லது பிள்ளைகளையோ இழந்துபோக வேண்டிய சூழல் வந்திருக்கிறது. விசுவாசிகளுக்கு இதெல்லாம் நிச்சயமாக வரும். பாவமுள்ள உலகத்தில் வாழுகிறபோது அவிசுவாசி மட்டுமல்ல, நம்முடைய விசுவாசத்தை வளர்ப்பதற்காக ஆண்டவர் அனுமதிக்கும், எல்லோரும் அனுபவிக்க வேண்டிய பிரச்சனைகளை நாமும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். ஆனால் விசுவாசிகளோடு விசேஷமாக தேவன் இருக்கிறார். நாம் எந்த நிலையிலும் ஆண்டவரிடத்தில் தைரியமாக வரலாம். நம்மைத் தாங்குகிற தேவனாக அவர் இருக்கிறார்.
3. விதவைக்கு ஆண்டவர் காட்டிய கருணை
மூன்றாவதாக இந்தத் திக்கற்ற விதவைக்கு ஆண்டவர் காட்டிய கருணையைக் கவனிப்போம். இதை நாம் 2-7 வரையுள்ள வசனங்களில் வாசிக்கிறோம். இந்தப் பகுதி அற்புதமான வேதப்பகுதி என்றுகூட நாம் சொல்லலாம். முதல் வசனத்தில் அந்த விதவை தன்னுடைய நிலைமையைத் தெளிவாகச் சொல்லிவிட்டாள். எலிசா அவளைப் பார்த்து என்ன சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள்.
2 இராஜாக்கள் 4:2-4
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, உள்ளேபோய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
எலிசா இங்கு உதவி செய்யத் தயாராக இருந்ததை நாம் பார்க்கிறோம். ஆண்டவரும் அப்படித்தான் நமக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவைகளைச் சந்திக்கிறவராக இருக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு உலகத்தில் இருந்தபோது நாலாயிரம், ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததாக வாசிக்கிறோம். மக்கள் அதிக நேரம் வனாந்தரத்திலிருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்டார்கள், ஆனால் அவர்கள் பசியாக இருந்தபோது அவர்களிடம் என்ன இருக்கிறது என்று ஆண்டவர் கேட்டார். அப்போது அவர்கள் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் மட்டுந்தான் இருக்கிறது என்று சொன்னார்கள். அதைக்கொண்டு எல்லோரும் திருப்தியாக சாப்பிட அவர் உணவளித்தார். அதுபோலதான் எலிசா இங்கு கேட்கிறார். “நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான்.” (2 இராஜாக்கள் 4:2). அவள் ஒரு குடம் எண்ணெய் இருக்கிறது என்று சொன்னாள். ஒரு குடம் என்றால் பெரிய குடம் என்று நினைக்கக்கூடாது. அது ஒரு சிறிய குடம்தான். அதை வைத்து எலிசா ஒரு பெரிய அற்புதத்தைச் செய்தார் என்று பார்க்கிறோம். ஏனென்றால் அவர் தேவனுடைய மனிதனாக தீர்க்கதரிசியாக இருந்தார். வறுமையின் காரணமாக அவள் வீட்டில் பாத்திரம் அதிகமாக இல்லாததனால் பக்கத்து வீட்டில் இருந்து வெறும் பாத்திரங்களை வாங்கி வரும்படிச் சொல்லுகிறார். அவள் பக்கத்து வீடுகளுக்குப்போய் எலிசா சொன்னபடியே பாத்திரங்களை வாங்கி வருகிறாள். அவளிடம் கீழ்ப்படிதலை நாம் காண்கிறோம். எலிசா சொன்னதை அவள் எந்தவிதத்திலும் சந்தேகப்படவோ, கேள்விகள் கேட்கவோ, எதிர்த்து நிற்கவோ இல்லை.
நம்மினத்தில் காணப்படாத ஒன்று கீழ்ப்படிதலாகும். சபை சபையாக சென்று பார்த்தாலும் கீழ்ப்படிதலையே ஆத்துமாக்களிடம் பார்க்க முடிவதில்லை. ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்று விருப்பத்தோடு கேட்டு அதற்குக் கீழ்ப்படியும் இருதயமே இல்லாமல் ஆத்துமாக்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த விதவை அப்படியல்ல. என்ன சொன்னாலும் செய்வேன் என்கிற தயார் நிலையில் இருந்தாள். ஏன்? அவள் ஆண்டவரை நம்பினாள், ஆண்டவரின் மனிதனான எலிசாவை நம்பினாள். இந்த இடத்தில் அவள் எத்தனை பாத்திரங்களை வாங்கி வந்தாள் என்று வேதம் சொல்லவில்லை. அது நமக்கு அவசியமும் இல்லை. அவள் அவ்விதம் அநேகம் வெறும் பாத்திரங்களை வாங்கி வந்த பிறகு எலிசா சொன்னார்: “உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்” (2 இராஜாக்கள் 4:4).
இவ்விதமான சூழ்நிலையில் நீங்களும் நானும் என்ன செய்வோம்? வாழ்க்கையில் எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்தாலும், கடன்காரர்கள் தொல்லை தலைக்கு மேல் போயிருந்தாலும் நாம் புத்திகெட்டவர்களைப் போலத்தான் நடந்துகொள்ளுவோம். முதலில் நாம் என்ன யோசிப்போம்? இந்த மனிதனுக்கு மூளை ஏதாவது கெட்டுப்போய்விட்டதா, என்றுதான் யோசிப்போம். என் கையில் இருப்பது ஒரு சின்ன குடம், அதிலிருக்கும் எண்ணெயைக் கொண்டு இவ்வளவு பாத்திரங்களை எப்படி நிரப்ப முடியும் என்றுதான் சொல்லுவோம். கட்டாயம் நாம் அவ்விதம் கேட்டிருப்போம். வாயைத் திறந்து சொல்லாவிட்டாலும் இருதயத்தில் அவ்விதமான கேள்வி எழத்தான் செய்யும். ஆனால் இங்கே இந்த விதவையினிடம் ஒரு கேள்வியையும் பார்க்க முடியவில்லை. “அவள் அவனிடத்திலிருந்து போய்” (2 இராஜாக்கள் 4:5) என்று வேதம் சொல்லுகிறது. அப்படியென்றால் அதற்கு என்ன அர்த்தம்? அவள் எந்தவிதமான கேள்வியும் சந்தேகமுமில்லாமல் எலிசா சொன்ன அனைத்தையும் முழுவதுமாக நம்பினாள் என்று அர்த்தம். இந்த விதவை தன் குறைகளையெல்லாம் தேவ மனிதனாகிய எலிசாவிடம் சொன்னாள். அதற்கு மேல் அவள் எவ்வித நிபந்தனையும் வைக்கவில்லை. ஏனென்றால் அதற்குமேல் ஆண்டவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்கிற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. எலிசா அவளிடம் சொன்னதையும் அவள் எவ்வித மறுப்பும் சந்தேகமும் இல்லாமல் அப்படியே கீழ்ப்படிந்து செய்கிறாள்.
இவளுடைய செயல் எதைக் காண்பிக்கிறது? அவளுடைய உறுதியான விசுவாசத்தைக் காண்பிக்கிறது. நீங்கள் ஆண்டவர் மீது கொண்டிருக்கிற விசுவாசம் எப்படி இருக்கிறது? எவ்விதமான நம்பிக்கையை அவர்மீது கொண்டிருக்கிறீர்கள்? நாம் எந்தவிதமான மோசமான சூழ்நிலையைக் கடந்து சென்றாலும் நம்மோடு இருக்கிற தேவன் என்றைக்கும் என்னைக் கைவிட மாட்டார் என்கிற உறுதி உங்கள் இருதயத்தில் இருக்கிறதா? அப்படியான உறுதியை நாம் ஆண்டவர் மீது கொண்டிருக்கவில்லை என்றால் அவர் நமக்குத் தேவையில்லையே. இந்த விதவை எலிசாவிடம் எனது புருஷன் உமது அடியான், கர்த்தருக்குப் பயந்து நடந்தான். அவனுடைய மனைவி நான், நாங்கள் குடும்பமாகவே கர்த்தருக்குப் பயந்து நடந்தோம் என்று சொன்னாள். ஆகவேதான் அவள் எலிசா சொன்ன வார்த்தையை அப்படியே நம்பினாள். அவளுடைய கீழ்ப்படிதல் எவ்வளவு அருமையாக இருக்கிறது என்பதைப் பாருங்கள்! இதற்குப் பெயர்தான் கீழ்ப்படிதல். கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பதற்குப் பெயர் கீழ்ப்படிதல் இல்லை. ஆண்டவர் சொன்னதை அப்படியே எந்தவித மறுப்பும் இல்லாமல் செய்வதற்குப் பெயர்தான் கீழ்ப்படிதல். அநேகருக்கு ஆண்டவர் வேண்டும், இயேசு வேண்டும், பாவ மன்னிப்பு வேண்டும், இரட்சிப்பு வேண்டும், சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பினோம் என்றுகூட சொல்லுவார்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுப்பதற்கும், சபையில் சேர்ந்து அங்கத்தவராக இருப்பதற்கும் தயங்குவார்கள். இதற்குப்பேர் விசுவாசமா? இதெல்லாம் இரட்சிப்பை அடைந்ததற்கான அறிகுறியா? ஆண்டவரை உண்மையாக விசுவாசிக்கிறவன், ஆண்டவர் தன் தலையைக் கேட்டாலும் கொடுப்பான்; ஆபிரகாம் தன் மகனைப் பலிகொடுக்கத் தயாரானதைப்போல. நாம் ஆண்டவரின் வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்படிய வேண்டும்.
மத்தேயு 28:18-20
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
ஆண்டவருடைய வார்த்தையின்படி செய்கிறவர்கள்தான் அவருடைய உண்மையான சீடர்களாக இருக்க முடியும். நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா? ஆண்டவரிடத்தில் நிபந்தனை வைப்பதற்கும், என்னால் இவ்வளவுதான் உங்களுக்கு கொடுக்க முடியும், இதற்குமேல் முடியாது என்று சொல்லுவதற்கு நீங்கள் யார்? அவர் உங்களுக்குக் கொடுக்கிற இரட்சிப்புக்குத் தகுதி இல்லாதவர்கள்தான் நீங்கள். அவர் அந்த இரட்சிப்பைக் கொடுக்காமல் இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை இல்லாமல் போயிருக்கும், நீங்கள் அழிந்து நித்திய நரகத்திற்குப் போயிருப்பீர்கள். ஆண்டவர், மேலிருந்து கீழே பார்க்கிறபோது ஒருவரும் நீதியாக இல்லையென்று காண்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. உங்களைப் பொறுத்தளவில் எவ்வித நீதியும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறீர்கள். அவ்வளவு மோசமான நிலையில்தான் நாம் இருக்கிறோம். நமக்கு ஆண்டவர் பெரிய விடுதலையைக் கொடுக்கிறாரென்றால் அவர் தம் கிருபையின் காரணமாகத்தான் அதைச் செய்கிறார். நாம் இரட்சிக்கப்பட்டிருப்போமானால் எந்தளவுக்கு ஆண்டவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவருடைய வார்த்தையைக் கேட்டு நடந்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நாம் அவ்விதம் செய்கிறோமா? உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? எந்தவிதத்தில் தேவனுடைய சபைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வார்த்தையைப் பின்பற்றி நடந்து கொண்டிருக்கிறீர்கள்? ஆண்டவருடைய கூட்டம் சபையில் நடந்து கொண்டிருக்கும்போதுகூட நம்மால் நேரத்திற்கு வந்து அதைக் கேட்க முடியவில்லை இல்லையா? சபையில் நான் நடக்காத ஒன்றைச் சொல்லவில்லை, நடக்கிற விஷயத்தைதான் சொல்லுகிறேன். உங்களில் எத்தனைப் பேர் ஆண்டவருடைய நாளில் கூட்டம் ஆரம்பிப்பதற்குப் பத்து நிமிடங்கள் முன்பாகவே சபைக்குப் போய்விடுகிறீர்கள்? நம் நடத்தை ஆண்டவரின்மீது கொண்டிருக்கும் விசுவாசத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். ஆண்டவர் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது பலிகளை அல்ல, கீழ்ப்படிதலையே அவர் நம்மிடம் கேட்கிறார். இதைத்தான் ஆண்டவர் ஒவ்வொருவரிடமும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
ஆபிரகாம் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்தான். அநேக ஆண்டுகளுக்குப் பின்பு ஆண்டவர் தனக்குக் கொடுத்த பிள்ளையை, ஆசை ஆசையாய் வளர்த்த தன் பிள்ளையை ஆண்டவர் கேட்டபோது அவர் மறுப்புச் சொன்னாரா? எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் மகனை பலி கொடுப்பதற்காகக் கூட்டிச் சென்றார் என்று பார்க்கிறோம். அதற்குப் பெயர்தான் கீழ்ப்படிதல். அந்தக் கீழ்ப்படிதல் எதைக் காட்டுகிறது? என் ஆண்டவர் எதைச் செய்யச் சொன்னாலும் அது நன்மையாகத்தான் இருக்கும் என்கிற உறுதியைக் காட்டுகிறது. தனக்கு விசுவாசத்தைக் கொடுத்த தேவன் நன்மையே செய்வார், அவர் ஒருபோதும் தீங்கு செய்கிறவர் அல்ல என்று அவர் உறுதியாக நம்பினார். நம் ஆண்டவருடைய பெயரே நல்லவர், அவரே நன்மைக்கு உருவாக இருக்கிறவர். அந்த ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படிகிற இருதயத்தைக் கொண்டிருக்கிறோமா? கீழ்ப்படியும் இருதயம் இல்லாவிட்டால் போலியாக நடந்துகொள்ளுகிறோம் என்று அர்த்தமாகும். கீழ்ப்படிதல் இல்லையென்றால் கிறிஸ்தவத்தை வெறும் மதமாக நாம் கொண்டிருப்போம். ஆண்டவர் வெறும் மதவாதிகளைத் தேடிப்போகவில்லை. அவர் விசுவாசிகளைத் தேடி வந்தார். இந்த விதவையின் வாழ்க்கையில் ஆண்டவருக்கு கீழ்ப்படிந்தாள் என்று நாம் பார்க்கிறோம். ஐந்தாவது வசனம் இவ்விதம் சொல்லுகிறது.
2 இராஜாக்கள் 4:5
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.
எந்தக் கேள்வியும் கேட்காமல் அவள் எலிசா சொன்னபடியே செய்தாள். அவள், இந்தச் சிறிய குடத்தை வைத்து வாங்கிவந்த பெரிய பெரிய பாத்திரங்களில் எப்படி எண்ணெயை ஊற்றி நிரப்ப முடியும் என்கிற எண்ணமே இல்லாமல் எலிசா சொன்ன வார்த்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தாள். தேவனுடைய மனிதன் ஒரு காரியத்தைச் சொல்லுகிறார் என்றால் நிச்சயம் அதில் நன்மை இல்லாமல் இருக்காது என்று எண்ணி அவர் சொன்னபடியே தன் வாழ்க்கையில் செய்தாள். எலிசா இங்கே ஒரு பெரிய அற்புதத்தைச் செய்தார். ஆனால் அதை எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும்படியாக இல்லாமல் மறைமுகமாகச் செய்தார் என்று பார்க்கிறோம். மேலும் நாம் 6, 7 வது வசனங்களில் பின்வருமாறு வாசிக்கிறோம்.
2 இராஜாக்கள் 4:6-7
அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று. அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.
இந்த விதவை வீட்டிற்குள் சென்று சிறிய குடத்தில் இருக்கிற எண்ணெய்யை ஊற்ற ஊற்ற வெறும்பாத்திரங்கள் ஒவ்வொன்றாக நிரம்புகிறது. அவ்வாறு நிரம்பியவற்றைத் தன் பிள்ளைகளிடத்தில் கொடுக்க அவர்கள் அதை இன்னொரு இடத்தில் கொண்டுபோய் வைக்கிறார்கள். இப்போது எல்லா பாத்திரங்களும் நிரம்பிவிட்டன. அவை இருபதா, முப்பதா, ஐம்பதா, எத்தனை பாத்திரங்கள் என்று கூட நமக்குத் தெரியாது. ஆனால் எண்ணையை ஊற்ற ஊற்ற எல்லா பாத்திரங்களும் நிரம்பி வழிந்தன. அவள் இன்னொரு பாத்திரம் கொண்டுவா என்று சொல்லுகிறபோது இதற்கு மேல் ஒரு பாத்திரமும் இல்லையென்று மகன் சொல்லுகிறான். அவன் இவ்வாறு சொன்னவுடன் ஊற்றுகிற எண்ணெய் நின்றுபோயிற்று என்று வாசிக்கிறோம். ஆண்டவர் நமக்கு எப்போதும் நம் தேவைகளைக் கொடுக்கிறவராக இருக்கிறார். நாம் கேட்பதை அவர் கொடுப்பதில்லை, சிலநேரம் நாம் அநாவசியத்திற்குக் கேட்போம். ஆனால் அவர் நம் தேவைகளை மட்டுமே தீர்க்கிறாரே தவிர நாம் கேட்பதை எல்லாம் தருகிறவர் அல்ல. நம் தேவைகளை நம்மைவிட நன்றாக அறிந்திருக்கிறவர் நம் தேவன். இந்த விதவையினுடைய தேவைகளையும் ஆண்டவர் நன்றாக அறிந்திருந்தார். அவளுடைய தேவைகள் அன்றைக்கு நிறைவேற்றப்பட்டன. இதிலிருந்து நாம் எத்தனை அருமையான ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பதைக் கற்றுக்கொள்ளுகிறோம்.
இந்த விதவை எலிசாவிடம் போய் நடந்ததைச் சொல்லுகிறாள், அப்பொழுது “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள்” (2 இராஜாக்கள் 4:7) என்று எலிசா சொல்லுகிறார். எண்ணெய் நிரம்பியிருக்கிற பாத்திரங்களின் எண்ணிக்கை நமக்குத் தெரியாது, ஆனால் அது அதிக பணத்தைக் கொண்டுவரக் கூடியதாக இருந்தது என்று பார்க்கிறோம். எந்தளவுக்கு அவள் கடன்பட்டிருந்தாளோ அந்தளவுக்கு அந்தக் கடனையெல்லாம் தீர்த்து, மீதியிருக்கும் பணம் அவளும் அவளுடைய பிள்ளைகளும் எந்தவிதப் பசியும் பட்டினியும், தேவைகளும் இல்லாமல் பல காலங்களுக்கு வாழ்கிற அளவுக்கு அந்தப் பணம் போதுமானதாக இருந்தது. நம் ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்பதைப் பாருங்கள்! பெயர் தெரியாத ஒரு விதவையோடு இந்த வரலாற்று நிகழ்வு ஆரம்பித்தது. அவளுடைய தேவை நிறைவேறிய உடனே ஏழாவது வசனத்தோடு இந்த வரலாற்று நிகழ்வை முடித்துக் கொண்டு வேறொரு விஷயத்திற்குக் கடந்து செல்லுகிறது வேதம். எவ்வளவு அற்புதமாக தேவன்! இந்த வேதப்பகுதியின் மூலம் ஒரு திக்கற்ற விதவையின் மூலம் நம்மோடு பேசுகிறார் ஆண்டவர். நம்முடைய விசுவாசம் எத்தகைய விசுவாசம் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும்படியாகப் பேசுகிறார்.
இந்த ஆக்கத்தில் பல கேள்விகளை ஏற்கனவே உங்கள் முன் வைத்தேன். இன்னும் சில கேள்விகளைக் கேட்கிறேன். உங்கள் விசுவாசம் எப்படிப்பட்டதாக இருக்கிறது? உண்மையிலேயே ஆண்டவருக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? ஆண்டவருக்குக் கீழ்ப்படிகிறீர்களா? மனதில் எந்தவித முறுமுறுப்பும் இல்லாத அளவுக்கு வாழுகிறோமா? தேவனை அந்தவிதமாக நாம் ஆராதிக்கிறோமா? நம் நேரத்தை ஆண்டவருக்குக் கொடுத்து விசுவாசத்தில் நாம் வளருகிறோமா? உங்களில் எத்தனையோபேர் கிறிஸ்தவர்கள் என்கிற பெயரைக் கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்கள் குடும்பங்களில் கணவன் மனைவி சண்டை இருக்கிறது. பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பதில்லை. பிள்ளைகளுக்கு முன் நீங்கள் நல்ல சாட்சியாக, உதாரணமாக இருப்பதில்லை. உங்கள் வேலையிலும் தொழிலும் உண்மையாக இருப்பதில்லை. வாழ்க்கையில் பலவிதமான குறைபாடுகளை வைத்துக்கொண்டு இயேசு பெயரை சொல்லிக்கொண்டு, திருவிருந்து எடுத்து எத்தனையோ தவறுகளைச் செய்கிறீர்கள். இந்த விதவையின் வாழ்க்கையில் நாம் அதையெல்லாம் பார்க்கவில்லையே. இது நம்மையே நாம் ஆராய்ந்து பார்த்துத் திருந்த வேண்டிய காலப்பகுதியாகும். நம்முடைய விசுவாசத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஆண்டவரிடம் நம்முடைய தவறுகள், பாவங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி நாம் மனந்திரும்ப வேண்டும். மனந்திரும்பி வாழுகிறவன்தான் விசுவாசி. என்றைக்கு ஆண்டவர் தன்னுடைய வார்த்தையின் மூலம் நம்முடைய குற்றங்களைச் சுட்டிக் காட்டுகிறாரோ உடனே அதை ஒப்புக்கொண்டு, அவரிடத்தில் “ஆண்டவரே இனிமேல் இது தொடராதபடி எனக்கு உதவி செய்யுங்கள், நீர் எந்தளவுக்கு என்னைத் தண்டித்தாலும் அது நீதியானதுதான், அந்தளவுக்கு நான் நன்மையே இல்லாதவன், இருந்தபோதும் என்னுடைய பாவங்களின் அடிப்படையில் என்னோடு இடைபடாமல் உம்முடைய அன்பின் கிருபையின் அடிப்படையில் என்னைப்பார்த்து எனக்குத் துணை செய்யும்” என்று கேட்போம். அவ்வாறு நாம் கேட்கும்போது அவர் ஒருநாளும் நம்மைத் தள்ளி வைக்கமாட்டார்.
ஒருவேளை கிறிஸ்துவை அறியாதவர்கள் இதை வாசிக்கலாம், உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆண்டவர் இலவசமாகக் கொடுக்கிற பாவ மன்னிப்பையும் இரட்சிப்பையும் அவரிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுவதற்காக இயேசுவை நீங்கள் விசுவாசியுங்கள். இந்த உலகமோ, இந்த உலகத்து தெய்வங்களோ உங்களுக்கு உதவப்போவதில்லை. ஜீவனுள்ள தேவனாக இருக்கிற இயேசு மட்டுமே மனிதனுடைய பாவங்களிலிருந்து விடுதலை கொடுப்பதற்காக தன்னையே சிலுவையில் ஒரேதரம் பலியாகக் கொடுத்தார் என்று வேதம் சொல்லுகிறது. அந்த இயேசுவை நீங்கள் விசுவாசித்தால் மட்டுமே உங்களுக்கு விடுதலையும், இரட்சிப்பும், ஜீவனும், பரலோகமும் கிடைக்கும். அவரை ஏன் நீங்கள் விசுவாசிக்கக்கூடாது? நாட்களை இப்படியே தொடர்ந்து வீணடித்து, சிக்கல்கள் கொண்ட இருதயத்தோடு வாழாமல் விடுதலைக்காக இன்றைக்கே அவரைத் தேடிச் சென்று, “இயேசுவே நீர்தான் என்னுடைய தேவன், உம்முடைய வார்த்தைகளைப் பின்பற்றி நடந்து உம்மில் அன்பு காட்டுகிறேன்” என்று ஏன் நீங்கள் சொல்லக் கூடாது? ஆண்டவர் பேசுகிறார், அவர் பேச்சைக் கேளுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்வார். ஆமென்!