பெண்கள்

2 இராஜாக்கள் 4:8-16 இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 4:8-16 வரையுள்ள வசனங்களை ஆராய்வோம். கடந்த ஆக்கத்தில் இந்த அதிகாரத்தின் ஆரம்பப் பகுதிகளைப் பார்த்தோம்.

அதில் ஆண்டவருக்கு பயந்து வாழ்ந்த ஒரு விதவையை எலிசா சந்திப்பதையும், அவளுக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து அவர் அவளுக்கு விடுதலையைக் கொடுப்பதையும் நாம் கவனித்தோம். இந்த ஆக்கத்தில் இன்னொரு பெண்ணைப் பற்றி ஆராயப்போகிறோம். இந்தப் பெண் சூனேம் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தவள். இந்தப் பெண்ணும்கூட அந்த விதவையைப்போல தேவனுக்கு பயந்து வாழ்ந்து வந்தாள். அந்நாட்களில் இஸ்ரவேல் பகுதிகளில் தேவனுடைய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அங்கு நிறைய பஞ்சம் நிலவியது, நாட்டிற்கு எதிரிகளின் தொல்லைகள் இருந்தன, உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதுமட்டுமல்ல ஆண்டவரைவிட்டு விலகிப் போய் வாழ்ந்த மக்கள் அதிகமாக இஸ்ரவேல் நாட்டில் காணப்பட்டார்கள். தேவனையும் அவருடைய வார்த்தையையும் அதிகமாக உதாசீனம் செய்து அந்நிய தேவர்களையும், புறஜாதி மக்களின் பழக்கங்களையும் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்கள் அதிகமானோர் இருந்தார்கள். அதுபோன்ற சூழலில் தேவனுடைய மக்கள் மீதமானவர்களாகக் குறைந்தளவே இருந்தார்கள். தேவனுடைய மக்களுக்கு, புறஜாதி தெய்வங்களை வணங்கி வந்த இஸ்ரவேல் மக்கள் மற்றும் மற்றவர்களிடத்திலிருந்து வந்த பலவிதமான எதிர்ப்புகளையும் தாங்க வேண்டியது மட்டுமல்லாமல் நாட்டில் பஞ்சத்தையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இருந்தபோதும் தேவன் அவர்களைக் கைவிட்டுவிடவில்லை.

இந்த வேதப்பகுதி சூனேமில் இருந்த பெண்ணின் விசுவாசத்தையும், அதன் அருமையையும், அவளுடைய விருந்தோம்பலைப் பற்றியும் அருமையாக நமக்கு விளக்குகின்றது. 8 வது வசனத்தில் வேதம் இப்படியாகச் சொல்லுகிறது, “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது”.

இவ்வாறு வேதத்தில் எழுதியிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. எலிசா சூனேமுக்குப் போனது இது முதல் தடவை அல்ல, பல தடவை அவர் அங்கு போயிருக்கிறார். யார் இந்த எலிசா? இவர் ஒரு தீர்க்கதரிசி, எலியாவுக்குப் பிறகு அவரைப்போல அவரால் பயிற்சி கொடுக்கப்பட்டு மற்றொரு அதிரடிப் பிரசங்கியாகவும், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். தேவனைவிட்டு விலகி புறஜாதி தெய்வங்களை மக்கள் வணங்கி நாட்டில் துன்பங்கள் இருந்த காலப்பகுதியில் எலிசா பல இடங்களுக்குப் பிரயாணம் செய்து தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். அந்நாட்களில் நாட்டில் சத்தியப் பஞ்சம் அதிகமாக இருந்தது. சத்தியப் பஞ்சமென்றால் ஆண்டவருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்காமல், அவருடைய வார்த்தையைக் கேட்கவேண்டுமென்ற இருதய தாகமில்லாமல், புறஜாதி தெய்வங்களையும் அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் பின்பற்றி வந்த அதிகமானோர் இருந்தார்கள். ஆண்டவர் இஸ்ரவேல் நாட்டிற்காகச் செய்த அனைத்தையும் மறந்துபோய், அவற்றை நிராகரித்து அவர்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் அவ்வளவு மோசமான நிலையிலும் கூட ஆண்டவர் தன்னுடைய வார்த்தையைக் கொடுப்பதற்காகத் தீர்க்கதரிசிகளைக் கொடுத்திருந்தார்.

எலிசா இஸ்ரவேல் தேசத்தின் பல பகுதிகளிலும் பிரயாணம் செய்து மீதமாய் இருந்த மக்களுக்கு தேவனுடைய வார்த்தையை எடுத்துச் சென்று வந்தார். அதுபோன்று ஒரு பிரயாணமாகதான் அவர் சூனேமுக்கு வருகிறதை நாம் பார்க்கிறோம். அப்படி சூனேமுக்கு வந்தபோது அங்கொரு பெண்ணைச் சந்திக்கிறார். இந்த சூனேமுக்குப் போவதற்குக் கர்மேல் மலையிலிருந்து ஒருநாள் தூரம் பயணம் செய்து போகவேண்டியிருந்தது. ஆகவே அது அதிக நேரத்தை செலவழித்து போக வேண்டிய பிரயாணமாக இருந்தது. கர்மேலுக்கு வந்து தங்கியிருந்து படிப்பதற்கும் ஓய்வெடுப்பதற்கும் எலிசா அங்கு போவது வழக்கம். அப்படி கர்மேலுக்குப் போகிறபோது, போகிற வழியில் சூனேமுக்கு வந்து தங்கியிருந்து ஓய்வெடுப்பதற்காகதான் வந்திருந்தார். இந்தப் பெண்ணுக்கு எலிசாவைப் பற்றி நன்கு தெரிந்திருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் எலிசா ஏற்கனவே பலமுறை வந்து சென்றிருக்கிறார். எலிசாவுக்கும் இந்தப் பெண்ணைப் பற்றிய அறிமுகம் இருந்தது. எந்தளவுக்கு அவர்களுடைய உறவு இருந்தது என்று நமக்குத் தெரியாது. ஆனால், இதுதான் அவர்கள் ஒருவரையொருவர் முதல் முறை சந்தித்துக்கொண்ட நிகழ்வு அல்ல. அவளைப் பற்றி மேலும் வேதம் சொல்லுகிறது, “அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.” (2 இராஜாக்கள் 4:8)

கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ என்று சொல்லும்போது முக்கியஸ்தரான ஒரு பெண் (Prominent woman) என்று NASB என்ற ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பு மொழிபெயர்த்துள்ளது. குறிப்பிடத்தக்க பெண் (Notable woman) என்று NKJV என்ற இன்னொரு ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்பு மொழிபெயர்த்துள்ளது. இவைகளுக்கு அர்த்தம் நல்ல செல்வந்தமுடையவளாக, வசதிகள் வாழ்க்கையில் நிறைந்தவளாக, சமுதாயத்தில் முக்கியத்துவம் கொண்டிருந்தவளாக இருந்திருக்கிறாள் என்று அர்த்தம் கொள்ளலாம். அல்லது அந்த ஊரில் ஒரு நல்ல பெயரை வாங்கிய ஒரு முக்கியமான பெண் என்றும் சொல்லலாம். அதற்குமேல் அவளைப்பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் தேவனை விசுவாசித்த கனம்பொருந்திய ஒரு பெண்ணாக இருந்தாள். எலிசா வந்திருக்கிறார் என்பதை அறிந்து அவருக்கு விருந்துபசாரம் செய்வதற்காகத் தன் வீட்டிற்கு வரும்படியாக அவரை அழைத்தாள். எலிசா தேவனுடைய மனிதன் என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும், அவர் வீட்டிற்கு வந்து நம்மோடு உணவருந்த வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டு அவரை அழைத்தாள்.

சூனேம் என்ற ஊரைப்பற்றி . . . 

ஆண்டவர் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்தில் இருந்தது இந்த ஊர். அந்த தேசத்தில் வட தென் பகுதிகளுக்குப் போகிற வழியில் இடையில் சம தரையாக இருந்த இடம்தான் இந்த சூனேம். இதனுடைய எல்லை யோர்தான் வரைக்கும் பரந்து விரிந்து காணப்பட்டது. இந்த பரந்து விரிந்த பகுதிக்கு கிஷோன் என்ற ஆற்றிலிருந்துதான் தண்ணீர் வந்தது. இந்த பரந்த நிலப்பரப்பில் பயிர்கள் நன்கு செழுமையாக வளரக்கூடிய விதத்தில் காணப்பட்டது. அதுமட்டுமல்ல அதனுடைய காலநிலையும் கூட விவசாயம் பண்ணுவதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருந்தது. இந்தப் பகுதியில் சோளம் அதிகமாக விவசாயிகளால் பயிரிட முடிந்தது. மேலும் ஒலிவ மரங்களையும் அதிகமாகப் பயிரிட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு அருமையான பகுதியாக இந்த சூனேம் ஊர் காணப்பட்டது. அங்கிருந்து வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் விவசாயிகளாகத்தான் இருந்தார்கள். அது பிரச்சனைகள் இல்லாத ஒரு அமைதியான இடமாக இருந்தது. எலிசா கர்மேல் மலைக்குப் போவதற்கு முன்பாக இந்த நகரத்தில் ஓய்வெடுப்பதற்காக வந்திருந்தார்.

சூனேமியப் பெண்ணின் ஆவிக்குரிய நிலை

ஏற்கனவே நாம் கவனித்திருப்பது போல அவள் தேவனை விசுவாசித்தாள். அந்நாட்களில் தேவனை விசுவாசிக்காத மக்கள் அதிகமானோர் நாட்டில் இருந்தபோதும் இவள் தேவனை விசுவாசித்தாள் என்று நாம் பார்க்கிறோம். எலிசாவை அவள் மதித்து அவர் தனது வீட்டிற்கு வரவேண்டும், தனது வீட்டில் உணவருந்த வேண்டும் என்று அவள் விரும்பினாள் என்று பார்க்கிறோம். ஒரு நாட்டில் தேவபயம் குறைவாகவும், பாகாலை அதிகமாக வணங்கிக் கொண்டிருந்த மனிதர்கள் இருந்த காலப்பகுதியில் இந்தப் பெண் சற்று வித்தியாசமானவளாக இருந்தாள். தீர்க்கதரிசியாகிய எலிசா சூனேமுக்கு வருகிறபோதெல்லாம் அவருக்கு உதவிகள் செய்தாள், மேலும் அவருடைய வார்த்தைகளைக் கேட்க மிகவும் ஆர்வமுள்ளவளாக இருந்தாள். நான் ஏற்கனவே முந்திய ஆக்கங்களில் சொன்னதுபோல அந்த நாட்களில் எங்கு தீர்க்கதரிசிகள் இருந்தார்களோ அங்குதான் தேவனுடைய வார்த்தை இருந்தது. ஆகவே தேவனுடைய மக்கள், தீர்க்கதரிசிகள் மற்றும் தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் வருவதை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு தீர்க்கதரிசிகள் அந்த இடங்களுக்குப் போகிறபோது அவர்களிடத்தில் இருந்து தேவனுடைய வார்த்தையைக் கேட்பதற்கு அவர்கள் போவார்கள்.

இப்போது எலிசா இங்கு வந்தபோது இந்தப் பெண் மிகவும் அருமையாக அவரைக் கவனித்துக்கொள்ள எண்ணுகிறாள். தன்னுடைய ஆவிக்குரிய தகப்பனைப்போல எலிசாவை அவள் மதித்தாள். தீர்க்கதரிசிகளுக்கு எந்தமாதிரியான முக்கியத்துவம் இஸ்ரவேலில் இருந்தது என்பதை இவள் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். தெய்வபக்தி இல்லாத ஒரு காலப்பகுதியில் இப்படியான தீர்க்கதரிசிகள் இருந்ததே ஒரு அருமையான காரியமென்று நாம் பார்க்கிறோம். மேலும் இந்தப் பெண்ணுக்கு ஒரு கணவன் இருந்தார் என்று இந்தப் பகுதி சொல்லுகிறது. 9 வது வசனத்தில் “அவள் தன் புருஷனை நோக்கி” என்று சொல்லுவதை நாம் பார்க்கிறோம். இவர்கள் இரண்டு பேருமே தேவபக்தி உடையவர்களாக அருமையான மணவாழ்க்கையைக் கொண்டவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கணவனும் மனைவியுமாக இருவரும் சேர்ந்து தீர்க்கதரிகள் அங்கு வருகிறபோதெல்லாம் அவர்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்தார்கள். அதே நேரத்தில் அவர்களிடத்திலிருந்து தேவனுடைய வார்த்தையைப் பெற்று தாங்களும் தங்கள் வாழ்க்கையில் ஆறுதலையும் உற்சாகத்தையும் பெற்றுக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பெண் தீர்க்கதரிசிக்கு மேலும் சில உதவிகளை செய்யவேண்டுமென்று ஆசைப்படுகிறாள். 9, 10 வது வசனத்தில் நாம் வாசிக்கிறோம். “அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.”

இந்தப் பெண் தானே எதையும் செய்துவிடாமல் தன் கணவனை மதித்தவளாக அவரோடு கலந்து பேசுகிறதை நாம் இங்கு பார்க்கிறோம். எலிசா பரிசுத்த மனிதன் என்று அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். மேலும் அவர் அடிக்கடி அங்கு வந்து போவதால் அவர் வந்து போவதற்கு வசதியாக ஏன் ஒரு ஏற்பாட்டைச் செய்யக்கூடாது என்று ஆலோசனை பண்ணினார்கள். அந்தளவுக்கு வசதியைச் செய்து கொடுக்கும்படிக்கு அவர்களுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் இருந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு மேலாகவே ஒரு அறையைக் கட்டி அங்கு ஓய்வெடுப்பதற்கு கட்டிலும், படிப்பதற்கு மேஜையும் நாற்காலியும் குத்துவிளக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கலாம் என்று யோசித்தார்கள். மேலும் 11 வது வசனம் சொல்லுகிறது, “ஒரு நாள் அவன் அங்கே வந்து, அந்த அறை வீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.” (2 இராஜாக்கள் 4:11)

இந்தப் பெண் கணவனிடம் சொன்ன யோசனை அவருக்கும் பிடித்திருந்தது. அப்போது அவர்கள் சொன்னபடியே அப்படியான ஒரு ஏற்பாட்டை செய்து கொடுத்தார்கள் என்று நாம் பார்க்கிறோம். இவர்கள் எந்தளவுக்கு தேவ பக்தியுள்ளவர்களாக வாழ்ந்தார்கள் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. கணவனும் மனைவியுமாக சேர்ந்து தாங்கள் எதைச் செய்யவேண்டுமென்று தீர்மானித்தார்களோ அதையெல்லாம் செய்து முடித்து எலிசாவையும் அவனுக்கு உதவியாக இருந்த கேயாசியையும் தன்னுடைய வீட்டின் மேல் வந்து தங்கும்படி செய்தார்கள்.

படிக்க வேண்டிய பாடங்கள்

இந்தப் பகுதியில் இவர்கள் செய்ததை வெறும் வரலாற்று நிகழ்வாக மட்டும் கருதிவிடக்கூடாது. இங்கு ஆண்டவரை நேசித்த ஒரு பெண்ணையும் அவளது கணவனையும் நாம் பார்க்கிறோம். நாட்டில் பல பிரச்சனைகளும் வார்த்தைப் பஞ்சங்களும் இருந்தபோதும் ஆண்டவருக்கு விசுவாசமாக இருந்து ஆண்டவருக்கென்று எவ்வளவு வைராக்கியமாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும், ஆண்டவருடைய மனிதர்களான தீர்க்கதரிசிகள் வந்தபோது அவர்களை எந்தளவுக்கு கவனித்துக் கொண்டார்கள் என்பதையும் நாம் அறிந்துகொள்ளுகிறோம். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்படியாக சொல்லுகிறார்.

மத்தேயு 10:40-42

உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னதுபோல இந்த சூனேம் ஊராளாகிய பெண் இங்கு நடந்துகொள்ளுவதைப் பார்க்கிறோம். அவளுக்கு ஒரு தீர்க்கதரிசி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது தெரிந்திருந்தது. அவருக்குச் செய்யும் எதுவும் ஆண்டவருக்கே செய்வது என்பதை அவள் நன்றாக அறிந்திருந்தாள். ஆகவே இவள் இருதயத்தில் எந்தளவுக்கு தேவன் மீது வாஞ்சையாக இருந்தாள் என்பதைத் தனது செயலின் மூலம் வெளிப்படுத்துகிறாள். இவ்வாறு செய்கிறவர்களை நிச்சயமாக ஆண்டவர் ஆசீர்வதிப்பார். தேவனுடைய மக்கள் இதனை யோசித்துப் பார்க்க வேண்டும். எவ்வாறு நாம் தேவனுடைய பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கிறோமோ அந்தளவுக்கு ஆண்டவர் அதற்கான பலனைக் கொடுக்காமல் போகமாட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் வாழும் இந்தக் காலங்களில் மனிதர்கள் அதிகமாக பணம் சேர்க்கும் காரியங்களில் ஈடுபடுகிறார்களே தவிர, ஆண்டவருடைய பிள்ளைகளைக் கவனிப்பதும், அவர்களுடைய வார்த்தையைக் கேட்பதும், அவருடைய மக்களுக்கு உதவி செய்வதும் மிகவும் குறைந்துபோய் காணப்படுகிறது. ஆனால் உண்மையாக தேவனை விசுவாசிக்கிறவர்களும், வைராக்கியத்தோடு ஆண்டவருடைய வசனத்தைக் கேட்கிறவர்களும் அவ்வாறு செய்யமாட்டார்கள். எவ்வளவு துன்பம் நாட்டில் இருந்தபோதும் மீதமாக இருந்த ஆண்டவருடைய மக்கள் மிகக்குறைவாக இருந்தபோதும் இவள் ஆண்டவருக்காக வாழவேண்டுமென்ற வைராக்கியத்தோடு இருந்ததை நாம் காண்கிறோம். எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் வேதம் சொல்லுகிறது,

எபிரெயர் 13:2

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.

இந்த வசனம் எந்தளவுக்கு நாம் விருந்தோம்பலில் ஈடுபட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. விருந்தோமல் என்கிற வார்த்தை ஆங்கிலத்தில் Hospitality என்று சொல்லப்படுகிறது. இதைக் குறித்து வேதம் அதிகமாக விளக்குகிறது. யாரையும் உபசரிக்க மறக்காமல் இருக்க வேண்டும். ஏன் நாம் அதைச் செய்யவேண்டும்? ஆண்டவருக்காக அதைச் செய்யவேண்டும். அவ்வாறு நாம் செய்கிறபோது நம்மையே அறியாமல் தேவ தூதரையும் உபசரித்ததுண்டு என்று வேதம் சொல்லுகிறது. நான்கூட பிரசங்கம் செய்வதற்காகப் பல நாடுகளுக்குப் போய்வரும்போது சிலரை நான் சந்தித்து இருக்கிறேன். அமெரிக்காவில், கடந்த 32 வருடங்களாக அங்கு சென்றபோதெல்லாம் ஒரு மாகாணத்தில் ஒருவருடைய வீட்டில் தங்கியிருந்திருக்கிறேன். ஒரு வாரம் அல்லது ஒன்றறை வாரம் அங்கு தங்கி இருக்கிறேன். அவர்கள் எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் தங்களுடைய வசதிக்கு ஏற்றவிதத்தில் அருமையாக என்னை கவனித்துக்கொள்ளுவார்கள். அந்தளவுக்கு அதிகமாக நான் ஒரு வீட்டில் தங்கியதில்லை. அவர்கள் இரண்டுபேரும் வயதானவர்கள்தான். இருந்தபோதும் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறவர்கள் ஊழியக்காரர்கள் என்பதற்காக எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் தங்களுடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் தள்ளிவைத்துவிட்டு அன்போடு கவனித்துக்கொள்ளுவார்கள். அப்படியான ஒரு அருமையான உறவு இத்தனை ஆண்டுகளாக அவர்களோடு எனக்கு இருக்கிறது. அவர்கள் எப்போதும் எதையும் என்னிடம் எதிர்பார்த்ததே இல்லை. தங்களால் முடிந்ததைச் செய்து தேவனுடைய ஊழியக்காரர்களுக்கு உதவி செய்யவேண்டுமென்ற எண்ணம் மட்டும்தான் அவர்கள் இருதயத்தில் இருந்தது. இந்த மாதிரியானவர்களை நம்மால் பார்க்க முடிகிறதா? இந்தக் காலத்தில் நாம் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்போம், ஆலயத்திற்கு போவோம், காணிக்கையைக் கொடுத்துவிடுவோம், ஆனால் நம் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் யோசித்துப் பார்த்து கடவுளுடைய வார்த்தை மேலும் மேலும் பிரசங்கிக்கப்படுவதற்கும் அவருடைய வார்த்தை எல்லோருக்கும் போய்ச் சேருவதற்கு என்ன செய்யலாம் என்று இந்தப் பெண்ணைப் போல யோசிப்பதில்லை.

எலிசாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் வார்த்தை போய்ச் சேரவேண்டும் என்கிற வைராக்கியம் அவளுக்கு இருந்திருக்கிறது. நமக்கு அந்த வைராக்கியம் இருக்கிறதா? இந்தப் பெண்ணைப் போன்று நாம் யோசிக்கிறோமா? ஆலயத்திற்கு போய் வந்துவிட்டோம், போதகரை வீட்டுக்கு அழைத்து உபசரிக்கிறோம், இதுவே போதுமென்று எண்ணாமல் இந்தப் பெண்ணைப் போன்று ஆண்டவருக்கென்று இன்னும் அதிகமாக என்ன செய்யலாம் என்று யோசிக்கிறோமா? நாம் ஏதோ கொஞ்சம் செய்துவிட்டோம் என்று திருப்தியடையாமல் இன்னும் எவ்வளவு செய்யலாம் என்கிற மனப்பான்மை நமக்கிருக்கிறதா? ஆண்டவருடைய வார்த்தை எல்லோரையும் போய்ச் சேருவதற்கு நமக்கொரு சந்தர்ப்பம் கிடைக்குமா? நாம் செய்யக்கூடிய ஏதாவது இருக்கிறதா என்று யோசித்துப் பார்க்கிறோமா? நாம் ஆலயத்திற்குக்கூட நேரத்திற்குப் போவதில்லை. ஆண்டவர் கிருபையாக எவ்வளவோ வசதிகள் செய்துகொடுத்தாலும் நாம் நேரத்திற்குப் போவதில்லை. மிகவும் அசட்டையாக இருந்துவிடுகிறோம். தேவனுடைய காரியத்தில் எந்தளவுக்கு நீங்கள் வைராக்கியமாக இருக்கிறீர்கள்? இந்த சூனேமியப் பெண்ணைப் போல ஆண்டவருக்கென்று வைராக்கியத்தோடு இருக்கிறீர்களா? உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்.

சூனேமியப் பெண்ணுக்கு எலிசா தீர்க்கதரிசியின் பாராட்டு

சூனேமியப் பெண்ணின் செயலை எலிசா சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலபேருக்கு இவ்விதம் செய்துகொடுத்தால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் போய்விடுவார்கள். நம்மிடமும் அவ்விதமான பழக்கம் இருக்கிறது. யாராவது நமக்கு உதவிசெய்தால் அவர்களுக்கு நன்றி சொல்லுகிறோமா? அவர்கள் எந்த நிலையிலிருந்து அந்த உதவியைச் செய்தார்கள் என்று அவர்களுடைய நிலைமையைப் பார்த்து நன்றி சொல்லியிருக்கிறோமா? இந்த சூனேமியப் பெண்ணின் உதவியை எலிசா கவனித்தார். 12 வது வசனத்தில் வேதம் நமக்கு சொல்லுகிறது, “அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.” (2 இராஜாக்கள் 4:12)

எலிசா ஏன் அழைத்துவரச் சொன்னார்? ஏனென்றால் தான் ஏதாவது அந்தப் பெண்ணுக்கு உதவ முடியுமா என்று அவர் யோசித்தார். அந்த மனுஷி தன் வாழ்க்கையில் காட்டின அக்கறையான கவனிப்பை அவர் மதித்தார், அதற்கு நன்றியுள்ளவராக இருந்தார். 13 வது வசனத்தில் சலக்கரணையோடும் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஆங்கில வேதத்தில் கவனிக்கிறபோது, சகலவிதமான அக்கறையோடும் என்னைக் கவனித்துக்கொண்டாள் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். அது சாதாரணமான அக்கறை இல்லை. அவள் தன்னால் எந்தளவுக்கு அவருக்குச் செய்யமுடியுமோ அந்தளவுக்கு அக்கறை காட்டி கவனித்துக்கொண்டாள்.

அவள் செய்திருப்பதைக் கவனியுங்கள். வீட்டில் தங்குவதற்கு ஒரு அறையைக் கட்டிக்கொடுத்து, அந்த அறைக்குள்ளாகப் படிப்பதற்கு விளக்கும் மேஜையும், ஓய்வெடுப்பதற்கு கட்டிலும் எனத் தங்களால் முடிந்தளவுக்கு அக்கறையோடு சிந்தித்துப் பார்த்து அவர்கள் செய்ததையே அந்த “சலக்கரணையோடும்” என்கிற பழங்காலத் தமிழ் வார்த்தையின் அர்த்தமாக உள்ளது. இதுபோன்ற இருதயமுள்ளவர்களாக நாம் காரியங்களைச் செய்கிறபோது ஆண்டவர் அதைக் கவனிக்கிறார். யாரும் பாராட்டவில்லையே என நாம் எதிர்பார்த்தால் நாம் செய்த செயல்கள் எல்லாம் உண்மையிலேயே செய்யத்தகாது. நம்மை ஆண்டவர் பார்க்கிறார், அதை அவர் கவனிக்காமல் இருக்கமாட்டார். அவருடைய கண்கள் எல்லோர் மேலும், எல்லாக் காரியங்கள் மேலும் இருக்கிறது. அக்கறையோடு நம் ஆண்டவர் அதைக் கவனிக்கிறார். கர்த்தருக்காக நாம் செய்கிறபோது எதையும் எதிர்பார்க்காமல் வலது கையில் கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 13 வது வசனத்தில் எலிசா சொல்லுகிறார், “அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான்.” (2 இராஜாக்கள் 4:13)

ராஜாவுக்கு எலிசாவைப் பிடிக்காது. அத்தோடு எலிசாவுக்கும் அவனைப் பிடிக்காது. அப்படியிருக்க நான் ராஜாவினிடத்தில் பேச வேண்டுமா? என்று எலிசா கேட்கிறார். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் ராஜா தீர்க்கதரிசியை மதிக்கிறவன். அன்றைக்கு ராஜாவுக்கும் எலிசாவுக்கும் நெருங்கிய உறவு இல்லாவிட்டாலும் எலிசா சொன்னால் ராஜா செய்வார். ஏனென்றால் எங்கு எலிசா இருக்கிறாரோ அங்குதான் கர்த்தர் இருக்கிறார் என்பது ராஜாவுக்குத் தெரியும். அவரிடம்தான் வார்த்தை இருக்கிறது, அங்குதான் நாம் தேவனுடைய ஆலோசனைக்குப் போகவேண்டும் என்பது ராஜாவுக்குத் தெரியும். சாமுவேல் இறந்த பிறகும் சவுல் ஏன் சாமுவேலைக் கூப்பிட்டார்? சாமுவேல் வந்தால்தான் தேவனுடைய வழிகளை அறிந்துகொள்ள முடியுமென்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆகவே எலிசா சொன்னால் ராஜா கேட்பார். ஆகவேதான் ராஜாவினிடத்தில் இருந்து ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார். அல்லது சேனாதிபதியினிடத்திலாவது பேசி உங்களுக்குத் தேவையானதைச் செய்யச் சொல்லட்டுமா என்று கேட்டார். ஆனால் அவளுடைய பதில் அவ்வளவு அருமையாக இருந்தது. “அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.” (2 இராஜாக்கள் 4:13)

என் ஜனம் அதாவது தேவனுடைய மக்கள் கொஞ்சப்பேர் இருந்தாலும் அவர்கள் மத்தியில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். ஆகவே நீங்கள் எனக்கு எதுவும் செய்யவேண்டிய அவசியமேயில்லை என்று சொல்லுகிறாள். நீங்கள் இங்கு வந்து தங்கினதே எங்களுக்குப் பெரிய காரியம், எங்களால் இந்தளவுக்குச் செய்ய முடிந்ததே சந்தோஷம்தான், நாங்கள் எதுவுமே உங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கவில்லை என்று தன் இருதயத்திலிருந்து சொன்னாள். இந்தமாதிரியான மக்களை நாம் பார்க்கிறோமா? இதுபோன்று நாம் நடந்து கொள்ளுகிறோமா? நம்மை நாம் கேட்டுப்பார்க்க வேண்டும். ஆனாலும் எலிசாவுக்கு அதில் சமாதானம் இருக்கவில்லை. அவன் தன் ஊழியக்காரனான கேயாசியைப் பார்த்து கேட்டார். “அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.” (2 இராஜாக்கள் 4:14)

கேயாசி அவர்களைக் கவனித்துப் பார்த்து அவர்களுக்கு பிள்ளை இல்லை என்று சொல்லுகிறான். பெரிய வயதுள்ளவன் என்றால் அதிக வயதான நிலையில் அவள் கணவன் இருக்கிறான் என்று அர்த்தம்.. உடனே எலிசா அவளைக் கூப்பிடுமாறு சொன்னார். “அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள். அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.” (2 இராஜாக்கள் 4:15-16)

பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே என்றால், ஆங்கில வேதத்தில் பார்க்கிறபோது அடுத்த வருஷம் இதே நேரம் என்று சொல்லப்படுகிறது. அவ்வேளை உன் கையில் ஒரு பிள்ளை இருப்பான் என்று எலிசா சொல்லுகிறார். இங்கு ஒரு அருமையான அற்புதத்தை அவளுக்காக எலிசா செய்கிறார். அவளுடைய வாழ்க்கையில் பிள்ளை இல்லை என்பது ஒரு குறையாகத்தான் இருந்திருக்கும், அவளுடைய கணவரோடு சேர்ந்து அந்தக் குறையைப் பற்றி அதிக நேரம் பேசியிருந்திருப்பார்கள், அது அவர்களது உள்ளத்துக் கவலையாக இருந்திருக்கும். இருந்தபோதும் அதைப்பற்றி அவள் கவலைப்படாமல் தேவனுடைய வார்த்தையில் அக்கறைகாட்டி, தேவனுடைய மனிதர்களைக் கவனிப்பதில் அக்கறைகாட்டி, பிரச்சனைகள் இருந்தாலும் ஆண்டவரில் எந்தளவுக்கு விசுவாசம் வைக்கவேண்டும் என்று அவள் விடாப்பிடியாக இருந்திருக்கிறாள். அவள் தீர்க்கதரிசி எவ்வளவு பெரிய அற்புதங்களையும் செய்ய முடியும் என்பதை அறிந்திருந்தபோதும், அவரைத் தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எண்ணாமல், ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்கவேண்டும், அவருடைய சுவிசேஷம் பல இடங்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று தீர்மானித்து உதவி செய்கிறாள். அதனால்தான் அவளே தன் தேவையைத் தீர்க்கதரிசியிடம் சொல்லாதபோதும் ஆண்டவர் அவளுடைய கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததைப் பார்க்கிறோம்.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளுகிறோம்? இவளுடைய நிலமையில் நாம் என்ன செய்திருப்போம்? நமக்கு நம்முடைய கவலைதான் பெரிதாக தெரிந்திருக்கும். இதுபோன்று அற்புதம் செய்யும் பெரிய தீர்க்கதரிசி நம்மிடம் வந்தால் முன்கூட்டியே திட்டம் வகுத்து சமயம் கிடைக்கும்போது நம் எல்லா குறைகளையும் சொல்லிவிடலாம் என்றுதான் பார்த்துக்கொண்டு இருந்திருப்போம். விசுவாசத்தில் உறுதியாகவும் ஆண்டவரிடத்தில் சந்தோஷமாக இவர்கள் இருந்தபோதும் அவர்களிடத்திலும் குறைகள் இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை. நாம், எல்லாம் நன்றாக இருந்தால் ஆண்டவருக்கு ஏதாவது செய்யலாம் என்று யோசிப்போம். நம் வாழ்க்கையில் குறையே இல்லாமல் வாழ்ந்து மரித்துவிட முடியுமா? குறைகள் ஒன்று போனால் ஒன்று வரும். என் குறையெல்லாம் தீர்ந்த பிறகு, பிரச்சனைகள் முடிந்த பிறகு நான் ஆண்டவருக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லுவது தவறு. எனக்கு நிறைய கடன்கள் இருக்கிறது, நிறைய தேவைகள் இருக்கிறது, இதெல்லாம் முடிந்த பிறகு ஆண்டவருக்கு காணிக்கை கொடுக்க ஆரம்பிக்கிறேன் என்று சிலர் சொல்லுவார்கள்.

இந்த சூனேமியப் பெண் இதுபோன்று எதுவும் சொல்லவில்லையே. அவள் வாழ்க்கையில் பல குறைகள் இருந்திருக்கிறது. அதற்கெல்லாம் ஜெபித்து ஆண்டவரிடத்தில் நிச்சயமாக சொல்லியிருப்பாள். அவள் அதை சொல்லி விட்டுவிட்டுத் தான் செய்யவேண்டிய வேலைகளில் அவள் குறை வைக்காமல் செய்தாள். பக்தியின் காரியங்களில் அவள் குறை வைக்கவில்லை, ஆண்டவருக்குச் செய்யவேண்டிய வைராக்கியமான கடமைகளில் அவள் குறை வைக்கவில்லை, பொறுப்புகளில் குறை வைக்கவில்லை, தன் கணவனோடு சேர்ந்து எந்தளவுக்கு ஆண்டவருக்குச் செய்ய முடியுமோ அந்தளவுக்கு உற்சாகத்தோடும், ஆனந்தத்தோடும் குறைகளுக்கு மத்தியிலும் அத்தனையும் செய்தாள் என்று பார்க்கிறோம். நம்மிடம் அப்படிப்பட்ட தன்மைகள் இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள்.

ஆண்டவருக்கென்று பணிகள் செய்கிறபோது சிரமத்தையும் பாரத்தையும் பார்க்கக்கூடாது. இவ்வளவுதான் ஆண்டவருக்குக் கொடுப்பேன், இவ்வளவு நேரம்தான் கொடுப்பேன் இதற்குமேல் என்னால் கொடுக்கமுடியாது என்று எவ்வளவோ பேர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுவா ஆண்டவருக்கென்று கொண்டிருக்கிற வைராக்கியம்? இந்தப் பெண் இன்னும் என்ன செய்யலாம், இதற்குமேல் என்ன செய்யலாமென்று யோசித்து செய்தாள் என்று பார்க்கிறோம். அதற்காக ஜெபித்திருப்பாள், சிந்தித்திருப்பாள், கணவருடைய ஆலோசனையைக் கேட்டிருப்பாள். நம்மிடம் ஏன் அப்படிப்பட்ட காரியங்கள் இல்லை? எந்தளவுக்குச் செய்தாலும் அது போதாது என்கிற மனப்பான்மை நமக்கிருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். சீர்த்திருத்தவாத காலப்பகுதிகளில் எவ்வளவோ பேர் ஆண்டவருக்காக உயிரையே விட்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்கள் சிறையில் போடப்பட்டிருக்கிறது, இரத்தம் சிந்தி மரித்தவர்கள் எவ்வளவோ இருக்கிறார்கள். நாம் இந்த உலகத்தின் வசதிகளுக்காக மட்டும் கிறிஸ்தவர்கள் என்று பெயரைச் சூட்டிக்கொண்டு வாழ்வது மிகவும் அபத்தமானது. நாம் ஆண்டவரில் எந்தளவுக்கு விசுவாசமும் வைராக்கியமும் கொண்டிருக்கிறோம் என்பதை நம் வாழ்க்கைதான் காட்டிக்கொடுக்கிறது.

இந்த சூனேமியப் பெண்ணின் பெயர்கூட நமக்கு சொல்லப்படவில்லை. அவளுடைய கணவருடைய பெயரும் சொல்லப்படவில்லை. அவளைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளும் நமக்கு அதிகமாகச் சொல்லப்படவில்லை. இந்த பெயர் தெரியாத பெண்ணைப் பற்றி வேதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றால் ஆண்டவர் அவளைக் கவனித்திருக்கிறார் அல்லவா! நம் ஆண்டவர் எல்லோரையும் கவனித்துக்கொண்டே இருக்கிறவர். மத்தேயு எழுதின சுவிசேஷத்தில் இறுதி நியாயத்தீர்ப்பில் அநேகர் வரிசையில் நின்றுகொண்டு ஆண்டவருடைய பெயரில் நிறைய செய்திருக்கிறோம் என்று சொல்லுவார்கள், ஆனால் ஆண்டவர் அவர்களைப் பார்த்து உங்களை எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுவார் என்று வேதம் சொல்லுகிறது. நம்முடைய விசுவாசம் எந்தளவுக்கு உண்மையான பக்தி வைராக்கியம் கொண்ட விசுவாசம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சத்தியம் எந்தளவுக்கு உங்களை மாற்றியிருக்கிறது? பெயர் தெரியாத இந்த பெண்ணின் விசுவாசத்தை ஆண்டவர் வேதத்தில் பதிவு செய்துள்ளார், அது நம் வாழ்க்கையை மாற்றப்போகிறதா? எந்தளவுக்கு ஆண்டவருக்கு வைராக்கியமாக இருக்கப்போகிறீர்கள்? நம்முடைய பிள்ளைகள் ஆண்டவரை இன்னும் அறியாமல் இருக்கிறார்கள், அவர்கள் ஆண்டவரை அறிந்துகொள்ளுவதற்காக அவருடைய வழியில் போவதற்காக எந்தளவுக்கு தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்கிறீர்கள்? திருச்சபையில் இன்னும் எத்தனையோ மூப்பர்களும், உதவிக்காரர்களும் தேவையாக இருக்கிறதே, அது நம் நாட்டில் ஒரு பஞ்சமாகவே இருக்கிறதே. நன்றாக உழைத்துக் கருத்தாகப் போதிக்கிற போதகர்கள் இல்லை. கருத்தோடும் கனிவோடும் ஆத்துமாக்களைப் பார்க்கிறவர்கள் இல்லை. நம்மால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து அதற்காக ஜெபிக்கிற இருதயம் இருக்கிறதா? சுயநலவாதிகளாக இல்லாமல் கர்த்தருக்காக முழுமையாக நம்மை ஒப்படைத்து வாழுகிற வாழ்க்கையை ஏன் நாம் கொண்டிருக்கக்கூடாது? இந்த சூனேமியப் பெண்ணின் மூலம் ஆண்டவர் இன்றைக்கும் நம்மோடு பேசிக்கொண்டிருக்கிறார். அவளுடைய வாழ்க்கையை ஆண்டவர் கவனித்தார், அவளை ஆசீர்வதித்தார் என்று நாம் பார்க்கிறோம்.

ஆண்டவரால் முடியாதது ஒன்றுமே இல்லை. அவளுக்கு பிள்ளை இல்லாமல் இருந்தது, அவளுடைய கணவனுக்கு வயதாகிவிட்டது. வயதாகிவிட்டால் பிள்ளைகள் பிறக்காது என்று எல்லோரும் சொல்லுவார்கள். மனிதனால் முடியாது என்று நினைக்கிறபோது, என்னால் முடியுமென்று செய்துகாட்டுகிறவர்தான் நம் ஆண்டவர். எலிசா அந்தப் பெண்ணைப் பார்த்து அடுத்த வருஷம் இதேநேரம் உனக்கு ஒரு பிள்ளை பிறக்கும் என்று சொன்னார். ஏனென்றால் அந்தளவுக்கு அவள் விசுவாசத்தையும் இருதயத்தையும் செயல்களையும் அவர் பார்த்தார்.

இதிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆண்டவர் நமக்கும் அப்படியான வைராக்கியத்தைக் கொடுக்க வேண்டும். இவ்விதமாக வாழ்வதற்கு நாமும் முயற்சி செய்வோம். இந்தக் காலங்களில் நம்மை நாம் ஆராய்ந்து சிந்தித்துப் பார்ப்போம். எந்தளவுக்கு குடும்பமாக சபைக்கு உதவியாக இருக்க முடியும், எந்தளவுக்கு ஆண்டவருக்குச் செய்ய முடியும் என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆண்டவர் இந்த பெண் மூலம் நம்மோடு பேசுகிறார். ஆனால் நீங்கள் அதைக் கேட்கிறீர்களா? ஆண்டவருக்கென்று பக்தி வைராக்கியமாக இன்னும் அதிகமாக அவருக்காக காரியங்களை செய்வதற்கு உங்களுக்கு இருதயம் இருக்கிறதா? சிந்தித்துப்பாருங்கள்.


© 2025 Copyright ஆசிரியரின் எழுத்துமூல அனுமதியின்றி இவ்வாக்கத்தின் எப்பகுதியையும் மறுபிரசுரம் செய்தலாகாது. இவ்வாக்கத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள் காட்டுவதானால் ஆசிரியரின் பெயரையும், அது திருமறைத்தீபத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும் எழுத்தில் குறிப்பிட வேண்டும்.