1. வாசகர்களே!
2. வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல்
3. விடாப்பிடியான விசுவாசம்
4. உயிர் மாய்க்கும் நஞ்சும், கொசுத்தொல்லையும்
5. 1689 விசுவாச அறிக்கை - வாசகர் மதிப்பீடு
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! இந்த இதழ் மூலம் மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இடது தோளில் ஆபரேசன் செய்து ஒரு வாரம் முடிந்த கையோடு இந்த இதழைத் தயாரிக்க கர்த்தர் உதவி செய்தார். அதுவும் பிரசங்கம் செய்யும் அவசியமில்லாமல் வீட்டிலிருந்து குணப்பட்டு வந்த காலத்தில் நேரத்தோடு இந்த இதழைத் தயாரிக்க முடிந்தது.
இந்த இதழில் மிகவும் முக்கியமானதொரு ஆக்கத்தை எழுதியிருக்கிறேன். முடிந்தவரையில் எளிமையாக எழுத முயற்சி செய்திருக்கிறேன். இறையியல் அறிவு பெரிதளவுக்கு இல்லாதவர்களுக்கு இது விளங்கிக்கொள்ளுவதற்கு சிறிது நேரமெடுக்கலாம். ஒருதடவைக்கு மேல் கவனத்தோடு சிந்தித்து வாசித்தீர்களானால் இதை விளங்கிக்கொள்ளுவது கடினமாக இருக்காது.
இந்த இதழில் வெயின் குரூடம் (Wayne Grudem) எனும் இறையியலறிஞரின் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை ஆராய்ந்து சீர்திருத்த இறையியல் கண்ணோட்டத்தில் என்னுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். பிரபலமாகியிருக்கும் அந்நூலில் பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன. அந்தப் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக அடையாளங்கண்டு அவற்றின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி கிறிஸ்தவர்கள் தவறான போதனைகளை தவிர்த்துக்கொள்ள துணைசெய்யும் விதத்தில் இந்த ஆக்கத்தை வரைந்திருக்கிறேன்.
இது தவிர 2 இராஜாக்களில் இருந்து ஒரு செய்தியையும், 1689 விசுவாச அறிக்கை பற்றிய ஷேபா (ஓமான்) அவர்களின் கருத்துரையையும், அடிப்படை வேதசத்தியங்கள் பற்றியும் அவ்வாறில்லாத விதத்தில் தரப்பட்டிருக்கும் சத்தியங்கள் பற்றியும் விளக்கி, ‘உயிரை மாய்க்கும் நஞ்சும், கொசுத்தொல்லையும்‘ என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தையும் தந்திருக்கிறேன். இந்த ஆக்கம் உங்களைச் சிந்திக்க வைக்கவேண்டும். “ஏனென்றால், அடிப்படைப் போதனைகளில் ஒற்றுமை, அவ்வாறில்லாத போதனைகளில் சுதந்திரம், அனைத்திலும் அன்பு” என்ற தத்துவத்தைப் பின்பற்ற இந்த ஆக்கத்தை விளங்கிக்கொள்ளுவது அவசியம்.
இந்த இதழைத் தயாரிக்கத் துணைபுரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்! இந்த இதழ் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கக் கர்த்தர் துணைபுரியட்டும். – ஆசிரியர்
வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல்
விடாப்பிடியான விசுவாசம்
2 இராஜாக்கள் 4:17-37
நாம் தொடர்ந்து 2 இராஜாக்கள் நூலை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் சூனேமியப் பெண்ணைக் பற்றிய வசனங்களை 8-16 வரை ஆராய்ந்திருக்கிறோம். இந்த ஆக்கத்திலும் சூனேமியப் பெண்ணைக் குறித்த வசனங்களை 17-37 வரையுள்ள பகுதியில் ஆராயவிருக்கிறோம்.
பல வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் பிரசங்கி ஒருவர் இந்த வேதப்பகுதிக்கு விளக்கமளித்ததை நான் இங்கு பதிவு செய்கிறேன். இந்த சூனேமியப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அற்புதமான காரியத்தைப் பற்றித்தான் அன்று அவர் விளக்கினார். அவர் என்ன சொன்னாரென்றால், இந்தப் பெண் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எலிசா தீர்க்கதரிசியோடு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டாளாம். ஆகவே அவள் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனது தேவையை நிறைவேற்றிக்கொண்டாள். அதாவது அவள் தனது திட்டப்படி அந்த தீர்க்கதரிசிக்குத் தன் வீட்டில் ஒரு அறையை தயார் செய்து கொடுத்தாள். அவ்வாறு அவள் செய்தபோது அவளுடைய விசுவாசத்தின் காரணமாக அந்தத் தீர்க்கதரிசியால் அதை மறுக்கமுடியவில்லை. ஆகவே அவள் தன்னுடைய விசுவாசத்தின் காரணமாக தனக்குத் தேவையான ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்துக் கொண்டாள் என்று சொன்னார் அந்த பிரசங்கி.
அவர் சொன்னதிலிருந்து, நம்மிடம் போதுமான அளவுக்கு விசுவாசமிருந்தால் கடவுளுடைய கரத்தைப் பிடித்து நமக்குத் தேவையான காரியங்களைச் செய்துகொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அது எவ்வாறு முடியுமென்ற கேள்வி நமக்கு எழலாம். அதற்கு அவர் சொல்லுகிறார், ஆண்டவர் நமக்கு தெய்வீக அம்சத்தைக் கொடுத்திருக்கிறார், நாம் சரீரபிரகாரமாகவும், ஆத்மீகபிரகாரமாகவும், பொருள் ரீதியாகவும் நல்ல பலத்தோடு இருந்தால் ஆண்டவர் நமக்குத் தேவையானதை செய்யமுடியும். நாம் சரீரபிரகாரமாகவோ, ஆத்மீகபிரகாரமாகவோ, பொருள் ரீதியாகவோ பெலவீனர்களாக இருந்தால் கடவுளால் நம்மைப் பயன்படுத்த முடியாது என்று அந்தப் பிரசங்கி சொல்லுகிறார். வேதத்தில் இவ்விதம் எங்கு விளக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு, அந்தப் பிரசங்கி, ஆபிரகாமோடு ஆண்டவர் ஏற்படுத்தின உடன்படிக்கையில் இவையெல்லாம் அடங்கியிருக்கின்றன என்று பதிலளிக்கிறார்.
இதையெல்லாம் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைக்கு செழிப்பு உபதேசத்தைப் (Prosperity gospel) போதிக்கிற கூட்டத்தில் ஊழியம் நடத்திக்கொண்டிருக்கும் ஒருவர்தான் இந்தப் பகுதிக்கு இவ்விதம் விளக்கம் கொடுத்தார். இன்று எத்தனையோபேர் தொலைக்காட்சியில் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறோமென்ற பெயரில் மேலே நான் குறிப்பிட்ட பிரசங்கியைப் போன்றவர்களிடம் வீணாய்ப் போகிறார்கள். அவர்களுடைய காதுகளுக்கும், மனதுக்கும் எது பொய், எது உண்மை என்று பிரித்தறியும் பக்குவமில்லாது இருக்கிறார்கள். இனி இந்தப் பகுதியில் தேவனுடைய வசனம் உண்மையிலேயே என்ன சொல்லுகிறது என்பதை நாம் கவனிப்போம்.
இந்தப் பகுதியை நாம் வாசிக்கிறபோது மேலே நான் குறிப்பிட்ட பிரசங்கி சொன்னபடி, எவ்விதமான சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தித் தீர்க்கதரிசியைத் தன்னுடைய விசுவாசத்தின் மூலமாகக் கடவுளைக் கொண்டு எதையும் செய்யவைக்கும்படி அந்தப் பெண் எதையுமே செய்யவில்லை. அவள் தீர்க்கதரிசிக்கு செய்த பணிகளனைத்தையும் எவ்வித தன்னலமும் இல்லாமல் செய்த பணிகளாகத்தான் வேதத்தில் நாம் காண்கிறோம். அந்தப் பகுதியை நன்றாகத் தெளிவாய் வாசித்துப்பார்க்கிறபோது அவள் தனக்கொரு பிள்ளை வேண்டுமென்று தீர்க்கதரிசியிடம் கேட்கவேயில்லை. அவள் இருதயத்தில் அப்படிப்பட்ட எண்ணம் எழவே இல்லை என்பதை நாம் பார்க்கமுடியும். தனக்கும் வயதாகிவிட்டது, தனது புருஷனுக்கும் வயதாகிவிட்டது என்பதால் தங்களுக்கு இனி பிள்ளை பிறக்கப்போவதில்லை என்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள்.
எலிசா தீர்க்கதரிசியே அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். ஆனால் அவள்: இங்கு என்னுடைய மக்களோடு நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று சொன்னாள். அதிலிருந்து நாம், அவள் போதுமென்ற மனத்தோடு ஆண்டவரை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தாள் என்பதைப் பார்க்கிறோம். இதுதான் இந்த சூனேமியப் பெண்ணைப்பற்றி நாம் கொடுக்கக்கூடிய விளக்கம். மேலே நாம் கவனித்த விசுவாச ஊழியம் நடத்திவந்த மனிதன் வேதத்தை மிகவும் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் காரியத்தைச் செய்து வருகிறார்.
இந்த வேதப்பகுதியிலிருந்து மூன்று காரியங்களைச் சிந்திப்போம்.முதலாவதாக, பிள்ளை பிறந்த விதத்தையும், இரண்டாவதாக, பிள்ளைக்கு ஏற்பட்ட மரணத்தையும், மூன்றாவதாக, பிள்ளை உயிர்த்தெழுந்த விதத்தையும் ஆராய்வோம்.
- பிள்ளை பிறந்த விதம்
இதை நாம் 2 இராஜாக்கள் 4:8-17 பகுதியில் வாசிக்கிறோம். அந்தப் பிள்ளை எப்படிப் பிறந்தது என்று அறிந்துகொள்ள இந்தப் பகுதியில் ஐந்து காரியங்களை நாம் கவனிக்க வேண்டும்.
முதலில், சூனேமியப் பெண்ணிற்கும் அவள் புருஷனுக்கும் பிள்ளைகள் இருக்கவில்லை. அப்படி இருந்தபோதும் அவர்கள் மிகவும் சந்தோஷத்தோடு வாழ்க்கையை அனுபவித்து வந்தார்கள். அவர்கள் தங்களுக்குப் “பிள்ளைகள் இல்லையே” என்று எண்ணி வருத்தப்படவில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் பிள்ளைகள் பிறந்திருந்தால் அவர்கள் நிச்சயமாக சந்தோஷமடைந்திருப்பார்கள். அவர்களை ஆண்டவருடைய வழியில் நடத்தியிருப்பார்கள். இருந்தபோதும் இஸ்ரவேலின் ஆண்டவர் தங்களுக்குப் பிள்ளைகளைக் கொடுக்கவில்லை என்பதற்காக அவர்கள் எந்தவிதத்திலும் ஆண்டவரைப் பற்றித் தவறாக எண்ணாமல் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அதேநேரம் அவர்கள் உள்ளுக்குள் ஏமாற்றத்தோடு இருந்திருக்கலாம். அது யாருக்குத்தான் இல்லை? மனிதர்களாகிய அனைவரிடமும் அது சாதாரணமாகக் காணப்படும். இருந்தபோதும், அது தங்கள் வாழ்க்கையையோ, பணிகளையோ எந்தவிதத்திலும் பாதித்துவிடாதபடி அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். ஆண்டவர் தனது சித்தத்தின்படி தங்களுக்குப் பிள்ளையைக் கொடுக்கவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதைப்பற்றி எவ்விதமான குற்றச்சாட்டை முன்வைத்ததையோ அல்லது பக்கத்து வீட்டாரிடம் குறைகூறிக்கொண்டிருந்ததையோ அவர்களுடைய வாழ்க்கையில் அடியோடு காணமுடியவில்லை. இதுதான் நாம் கவனிக்கவேண்டிய முதலாவது காரியமாகும்.
இரண்டாவதாக, ஆண்டவர் அவர்கள் வாழ்க்கையில் மிக அற்புதமாகச் செயல்பட்டார், கிரியை செய்தார் என்பதைப் பார்க்கிறோம். தீர்க்கதரிசியான எலிசா அந்தவீட்டார் தனக்கு அருமையாக விருந்துபசாரம் செய்ததைப் பார்த்து அவர்களுக்குத் தான் எதையாவது செய்யவேண்டும் என்று தீர்மானம் பண்ணினார். அப்படி அவர் முன்வந்து உனக்கு என்ன வேண்டும் என்று அவளிடம் கேட்டபோது அவள் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அவள், என் மக்கள் மத்தியில் மிகவும் சந்தோஷத்தோடு இருக்கிறேன் என்று சொன்னாள். எலிசா தீர்க்கதரிசி பலமுறை அந்த சூனேம் ஊருக்குப்போய் இந்தக் குடும்பத்தைச் சந்தித்து வந்திருக்கக்கூடும். இதைக் கடந்த ஆக்கத்தில்கூட நான் குறிப்பிட்டிருந்தேன். ஏனென்றால் தீர்க்கதரிசிப் புத்திரர்களுக்கு போதிப்பதற்காக இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்து வந்திருந்த இறையியலாளராகத்தான் அன்று எலிசா தீர்க்கதரிசி இருந்திருக்கிறார். அத்தகைய பிரயாணத்தின்போது இந்த ஊரில் அவர் நிச்சயமாக இந்தப் பெண்ணைச் சந்தித்திருக்கலாம். சில நேரங்களில் இவள் வீட்டில் கூட தங்கியிருந்திருக்கலாம். அப்படியிருந்தபோதும் எலிசா அவளுடைய வாழ்க்கையில் இந்தளவுக்குக் கருத்தாய் இந்த வீட்டில் பிள்ளைகள் இல்லையே என்றெல்லாம் கவனித்துப் பார்க்கவில்லை. இதனை அவருடைய வேலைக்காரனான கேயாசிதான் கவனித்து தீர்க்கதரிசியிடம் வந்து சொல்லுகிறான். ஆகவே தீர்க்கதரிசி தானாக இதையெல்லாம் கவனித்துச் செய்யவில்லை என்பதை இரண்டாவதாகக் கவனிக்கவேண்டும்.
மூன்றாவதாக, இந்த சூனேமியப் பெண் தீர்க்கதரிசியிடமிருந்து எந்தவிதத்திலும் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை என்பதைக் கவனிப்பது அவசியம். தீர்க்கதரிசி என்பவர் யார் என்பதையும், அவரால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதையும் அவள் நன்றாக அறிந்திருந்தாள். இருந்தபோதும் எனக்கொரு பிள்ளையைக் கொடு என்று அவள் ஒருபோதும் அவரிடம் கேட்கவில்லை. தீர்க்கதரிசியே அடுத்த வருடம் இதே நேரத்தில் உனக்கொரு பிள்ளை இருக்குமென்று சொன்னபோதும் அந்த நேரத்தில் அவள் அதை நம்பத் தயாராக இல்லை. அதற்காக தீர்க்கதரிசியின் வார்த்தையின்மீது அவளுக்கு நம்பிக்கை இல்லையென்று அர்த்தமில்லை. தனக்கும் தன் கணவருக்கும் வயதாகிவிட்டது என்று அவளுக்கு நன்றாக தெரிந்திருந்ததால் அவருடைய வார்த்தையை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நான்காவதாக, எலிசாவின் வார்த்தையின் மூலம் மட்டுமே அவளுக்குப் பிள்ளை பிறந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். அவளுக்குப் பிள்ளை பிறந்த விஷயத்தில் அவள் எந்தவிதத்திலும் பங்குவகிக்கவில்லை என்பதை நாம் உணரவேண்டும். அதற்காக அவள் உபவாசம் இருக்கவோ, காணிக்கை கொடுக்கவோ, உடலை வருத்தியோ எதையுமே செய்யவில்லை. ஆகவே அவளுக்குப் பிறந்த பிள்ளை ஆண்டவர் அவளுக்குக் கொடுத்த ஈவாக இருந்தது. ஆண்டவர் அவளுக்கு ஒரு பிள்ளையைத் தன்னுடைய நேரத்தின்படி கொடுக்க வேண்டுமென்பது அவருடைய திட்டமாக இருந்தது. ஆகவேதான் நம்பமுடியாத அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, அதாவது வயதாகிப் பிள்ளைபெற முடியாத நிலையிலிருந்த கணவன் மனைவிக்கு ஆண்டவர் ஒரு பிள்ளையைக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். இது வேத வரலாற்றில் முதல் முறை நடந்த ஒரு காரியமல்ல. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பலருடைய வாழ்க்கையில் இதை நாம் கவனிக்கிறோம்.
இந்த நேரத்தில் நாம் ஆபிரகாமையும் அவன் மனைவி சாராளையும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது. ஆண்டவர் ஒரு பிள்ளையைக் கொடுக்கிறேன் என்று சொன்னபோது சாராள் சிரித்தாள் என்று பார்க்கிறோம். வயதாகிவிட்ட எங்களுக்குப் பிள்ளை பிறக்குமா என்று அவள் சிரித்தாள். பிள்ளை பிறக்கும் காலத்தையெல்லாம் மீறிப்போன ஒரு நிலைமையில் ஆண்டவர் அவர்களுக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தார் என்று கவனிக்கிறோம். அப்படிக் கொடுத்த பிள்ளையின் மூலம் மனிதகுலம் விருத்தியடைந்தது மட்டுமல்ல, அந்த வழியில் இயேசு வரவேண்டிய திட்டம் இருந்தது. கர்த்தருடைய மீட்பின் திட்டங்களுக்குப் பயன்படும்படியாக ஆண்டவர் அவர்களுக்குப் பிள்ளையைக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஈசாக்குக்கும் அவன் மனைவிக்கும் இதேவிதமாகத்தான் நீண்ட காலமாகப் பிள்ளை இல்லாமல் இருந்து, பிறகு ஆண்டவர் பிள்ளையைக் கொடுத்தார். யாக்கோபுவுக்கும் ராகேலுக்கும் அநேக காலத்துக்குப் பிள்ளை இல்லாதிருந்து பிறகு பிள்ளை பிறந்தது. பிறகு வேதத்தில் எல்க்கானா அவனது மனைவி அன்னாளைப் பற்றி வாசிக்கிறோம். அவர்களுக்கும்கூட நீண்ட காலத்துக்குப் பிறகுதான் பிள்ளை பிறந்தது, அதற்காக அன்னாள் அழுது ஜெபித்திருக்கிறாள். பிறகு புதிய ஏற்பாட்டில் சகரியா அவனது மனைவி எலிசபெத்தைப்பற்றி வாசிக்கிறோம். இருவருக்கும் இதேவிதமாக நீண்ட காலத்துக்குப் பிள்ளை இல்லாதிருந்து பிறகு பிள்ளையை ஆண்டவர் கொடுத்தார்.
வேதத்தில் இதையெல்லாம் பார்க்கிறபோது ஆண்டவரின் உடன்படிக்கையின் அடிப்படையில் அவருடைய மீட்பின் திட்டங்களில் பங்குபெறும்படியாகவும், அந்த மீட்பின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறும்படியாகவும் குழந்தையை அவர்களுக்குக் கொடுத்தது மட்டுமல்லாமல், அந்தக் குழந்தைகளுக்கு மீட்பின் வரலாற்றில் பெரிய பங்கும் இருக்கும்படியாகக் கர்த்தர் செய்திருக்கிறார். ஆனால் இந்த சூனேமியப் பெண்ணைப் பார்க்கிறபோது அவளுடைய பிள்ளைக்கு அந்த விதத்தில் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை. அவர்களுடைய பிள்ளை பிறக்காமல் இருந்திருந்தாலும் மீட்பின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறியிருக்கும். உண்மையில் இந்த சூனேமியப் பெண்ணின் பெயரோ, அவளது புருஷனுடைய பெயரோ, அந்த பிள்ளையின் பெயரோகூட நமக்குத் தெரியாது.
பின் ஏன் அந்தப் பிள்ளையை ஆண்டவர் கொடுத்தார்? ஆண்டவர் தன்னுடைய மீட்பின் திட்டம் நிறைவேற வேண்டும் என்ற அடிப்படையில் நமக்குப் பிள்ளையைக் கொடுக்கத் தேவையில்லை. நமக்கு உதவி செய்வது ஆண்டவருக்குப் பிடித்திருக்கிறது. அவர் நன்மையின் தேவனாக, கிருபையின் தேவனாக இருக்கிறார். அவர் மிகவும் மனமகிழ்ச்சியோடு இவர்களுக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக ஒரு பிள்ளையைக் கொடுத்தாரே தவிர, தனக்கு அந்தப் பிள்ளையால் பெரிதாக ஏதும் ஆக வேண்டும் என்பதற்காகப் பிள்ளையைக் கொடுக்கவில்லை. ஆண்டவர் நமக்கு எதையாவது செய்ய நாம் சிறப்பான மக்களாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவர் தன்னுடைய விருப்பத்தின்படி, தன்னுடைய சித்தத்தின்படி யாருக்கும் எதையும் செய்கிற தேவனாக இருக்கிறார். ஏன் இந்தக் குடும்பத்திற்கு ஆண்டவர் பிள்ளையைக் கொடுத்தார்? அவ்வாறு கொடுப்பது ஆண்டவருடைய விருப்பமாகவும், சித்தமாகவும் இருந்தது.
ஐந்தாவதாக, தீர்க்கதரிசியின் வார்த்தையில் இந்தப் பெண் நம்பிக்கை வைத்தாள். ஒருவேளை ஆரம்பத்தில் ஒரு கேள்வி எழும்பியிருக்கலாம். தீர்க்கதரிசி என்ன இப்படிச் சொல்லுகிறாரே என்று அவள் நினைத்திருக்கலாம். அந்தக் குழப்பமோ கேள்வியோ இருந்ததற்குக் காரணம் தீர்க்கதரிசியின் வார்த்தையில் நம்பிக்கையில்லாததால் அல்ல. தன்னுடைய வயது, சரீர பலவீனம், தனது கணவருடைய வயது, அவருடைய சரீர பலவீனம் எல்லாவற்றையும் நினைத்துத் தங்களுக்குப் பிள்ளை பிறப்பது நடைமுறையில் சாத்தியமா என்று அவள் நினைத்துப் பார்த்திருக்கலாம். ஆனால் அவள் ஒருநாளும் தீர்க்கதரிசியின் வார்த்தையில் நம்பிக்கை வைக்காமல் இருக்கவில்லை. தீர்க்கதரிசி சொன்னால் அது நடக்குமென்று உறுதியாக அவரையும், அவரது வார்த்தையையும் அவள் நம்பினாள். எங்கு தீர்க்கதரிசி இருக்கிறாரோ அங்குதான் தேவன் இருக்கிறார் என்பது இஸ்ரவேலின் ராஜாக்களுக்கும் தெரிந்திருந்தது, இஸ்ரவேல் மக்களுக்கும் தெரிந்திருந்தது. நடக்காத ஒரு காரியத்தை தீர்க்கதரிசி சொல்லமாட்டார். ஆகவே அவள் நிச்சயமாக தீர்க்கதரிசியின் வார்த்தையை நம்பினாள், கர்த்தரையும் நம்பினாள். உண்மையிலேயே தீர்க்கதரிசியை நம்புவது கர்த்தரை நம்புவதற்குச் சமம். ஆகவே இந்த மனுஷியின் வாழ்க்கையில் ஆண்டவர் அற்புதமாகக் கிரியை செய்து ஒரு பிள்ளையைக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். அவளுடைய வயிற்றில் எந்தவிதத்திலும் பிள்ளை பிறக்க வாய்ப்பில்லை, மருத்துவரோ வேறு எவருமோ உதவ முடியாது என்ற சூழ்நிலையில் இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஆண்டவர் ஒரு பிள்ளையைக் கொடுத்தார். இது எவ்வளவு சந்தோஷத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
- பிள்ளைக்கு மரணம் சம்பவித்தது
இதுவரை எந்தச் சந்தர்ப்பத்தில், எத்தனை அருமையான விதத்தில் ஆண்டவர் அந்தக் குடும்பத்திற்குப் பிள்ளையைக் கொடுத்தார் என்று கவனித்தோம். ஆனால் அந்தப் பிள்ளைக்கு இப்போது மரணம் சம்பவித்தது. 17 வசனத்தில் “அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து… ஒரு குமாரனைப் பெற்றாள்” என்று வாசிக்கிறோம். 19 வது வசனத்தில் அந்தப் பிள்ளை “என் தலை நோகிறது” என்று குறிப்பிடுகிறது. 20 வது வசனம் “அவள் மடியில் இருந்து செத்துப்போனான்” என்று விளக்குகிறது. அவள் கர்ப்பம் தரித்துப் பிள்ளை பெற்றாள், அந்தப் பிள்ளைக்குத் தலைவலி வந்து இறந்தது என்று நான்கு வசனங்களுக்குள்ளேயே நாம் வாசிக்கிறோம்.
இந்த சம்பவத்தை எவ்வாறு நாம் புரிந்து கொள்ளுவது? அந்தச் சின்னப் பையன் அந்த வீட்டிற்கு அதிக சந்தோஷத்தைக் கொண்டுவந்திருப்பான். பொதுவாகவே பிள்ளைகள் பிறந்தால் அதிகமாகக் கொண்டாடுவார்கள். நமது சமுதாயத்தில் திருமணம் முடிந்தவுடனேயே எப்போது பிள்ளை வரப்போகிறது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். பிள்ளை பிறக்கும்போது பெரிய கொண்டாட்டமாக இருக்கும். அதுவும் நமது சமுதாயத்தில் ஆண் பிள்ளை பிறந்துவிட்டால் மகா கொண்டாட்டந்தான். இன்று கிறிஸ்தவர்கள்கூட “ஆண்டவரே ஒரு ஆண் பிள்ளையைத் தாரும்” என்று உள்ளுக்குள் ஜெபிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். யாரும் பெண் பிள்ளைகளை விரும்புவதில்லை. எதையும் நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. இது தமிழ் சமுதாயத்தில் ஆண்டாண்டு காலங்களாக இருந்து வரும் பண்பாட்டுச் சிந்தனை. ஒரு கிறிஸ்தவனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இத்தகைய பண்பாட்டுச் சிந்தனை இருக்கக்கூடாது. அவனுக்கு விசுவாசிக்குரிய வேத சிந்தனை இந்த விஷயத்தில் இருக்கவேண்டும். ஆண்டவர் எந்தப் பிள்ளையைக் கொடுத்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்பிள்ளை பிறப்பதைத் தாழ்வாகக் கருதக்கூடாது. இத்தகைய சிந்தனைகள் புறஜாதி இந்துப் பண்பாட்டிலிருந்து வரும் சிந்தனைகளாக இருக்கின்றன. பிள்ளை பிள்ளைதான். அது ஆண் பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறானது.
இந்தப் பகுதியில் ஒரு அற்புதத்தின் குழந்தையாக அந்தக் குழந்தை பிறந்திருந்தது. அந்தப் பிள்ளையால் பெற்றோர் அதிக சந்தோஷம் அடைந்திருப்பார்கள். அவர்கள் மட்டுமல்ல, அந்தக் கிராமமே சந்தோஷமடைந்திருக்கும். ஏனென்றால் அது அதிசயமாக பிறந்த குழந்தையாக இருந்தது. இந்த சூனேமியப் பெண்ணும் அவளது கணவனும் மிகவும் அருமையாக அந்தக் குழந்தையை வளர்த்திருப்பார்கள். இப்போது திடீரென்று எதிர்பார்க்காத விதத்தில் பிள்ளை இறந்துவிட்டது என்று வாசிக்கிறோம். அந்தப் பிள்ளைக்கு மோசமான தலைவலி வந்தது என்பதை 19 வது வசனத்தில் காண்கிறோம். “தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக் கொண்டுபோய் விடு என்றான். அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்” என்று இப்பகுதியில் வாசிக்கிறோம் (2 இராஜாக்கள் 4:19-20). மருத்துவரிடம் போகலாமா, வேண்டாமா என்று யோசிப்பதற்குள் அந்தப் பிள்ளை இறந்துவிட்டது என்று வாசிக்கிறோம். பெற்றோர்கள் இவ்வளவு அருமையாகப் பெற்ற பிள்ளை என்பதற்காக, அந்தப் பிள்ளையைப் பிழைக்க வைப்பதற்கு என்னென்னவோ செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் அந்தப் பிள்ளை இறந்துவிட்டது.
இங்கொரு விஷயத்தை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். எத்தனை அருமையான விசுவாசிகளாக இருந்தாலும், ஆண்டவரிடத்தில் வைத்திருக்கிற விசுவாசத்தில் இவர்களைப்போல இருந்தாலும், வாழ்க்கையில் துன்பமோ துயரமோ வராமல் இருக்காது. நீ கிறிஸ்தவனாகிவிட்டால் எந்த வியாதியும் வராது என்கிற போலிச் சுவிசேஷப் பேச்சிற்கெல்லாம் காதைக் கொடுக்கலாகாது. எல்லோருக்கும் வருவதுபோல் ஒரு கிறிஸ்தவனுக்குப் புற்றுநோய்கூட வரலாம்; அதால் இறக்கவும் நேரிடலாம். கோவிட் வந்தபொழுது அவிசுவாசிகள் மட்டுமா இறந்தார்கள்; எத்தனையோ கிறிஸ்தவர்கள் இறக்கவில்லையா? இதெல்லாம் நிகழ்வதற்குக் காரணம் உலகத்திலிருக்கும் பாவந்தான். பாவம் அந்தளவுக்கு உலகத்தையும் நம்மையும் பாதித்திருக்கிறது; பலவீனப்படுத்தியிருக்கிறது. ஆகவே கிறிஸ்தவர்களுக்கு நிச்சயம் துன்பம் வரும். கிறிஸ்தவர்களுக்குத் துன்பம் வராது என்று நினைப்பது ஒரு கனவு உலகில் வாழ்வதுபோல. அது தவறான எண்ணம். கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த உலகம் முடிகிறவரை பொதுவான விதத்தில் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால் அந்தத் துன்பங்களும், போராட்டங்களும், இடையூறுகளும் வாழ்க்கையில் வருகிறபோது ஒரு விசுவாசி அதை எவ்வாறு அணுகுகிறார் என்பதில்தான் ஒரு விசுவாசிக்கும் விசுவாசி அல்லாதவருக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது.
இப்போது சூனேமியப் பெண் என்ன செய்தாள் என்று பார்ப்போம். பிள்ளை இறந்துபோனவுடன் அவன் இறந்துவிட்டான் என்பதை அவள் இறுதி முடிவாக ஏற்றுக்கொள்ள மறுத்தாள். 25 வது வசனத்தில் “கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்” (2 இராஜாக்கள் 4:25) என்று வாசிக்கிறோம். ஏன் போனாள்? தன் பிள்ளை இறந்துபோனதை அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. 27 வது வசனத்தில் “பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்” (2 இராஜாக்கள் 4:27) என்று வாசிக்கிறோம். நீ எனக்குப் பிள்ளையைக் கொடுத்தாய், இப்போது அந்தப் பிள்ளை இறந்துவிட்டான். ஆகவே உன்னை நான் விடப்போவதில்லை என்று அவள் பிடிவாதமாக இருந்தாள்.
“அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான்” என்று 2 இராஜாக்கள் 4:27ல் வாசிக்கிறோம். எலிசா தீர்க்கதரிசியாக இருந்தபோதும் இது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்போது அவள் எலிசாவைப் பார்த்து: “நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்” (2 இராஜாக்கள் 4:28). அபத்தம் சொல்லவேண்டாம் என்றால் என்னை ஏமாற்றாதீர்கள் என்று சொல்லவில்லையா என்கிறாள். அதாவது அவருடைய வார்த்தையில் நம்பிக்கையில்லாமல் அவள் அவ்வாறு சொல்லவில்லை. தனது வயதையும், தனது கணவரின் வயதையும் கருத்தில்கொண்டு சும்மா ஏதாவது சொல்லி என்னை நம்ப வைக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறாள். இந்த இடத்தில் இந்தச் சூனேமியப் பெண்ணின் விசுவாசத்தின் உண்மையான தன்மைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. விசுவாசம் என்பது யாரோ ஒருவர் நம்மை வற்புறுத்தி நம்மை நம்ப வைக்கிற காரியமல்ல.
இந்தப் பெண்ணின் விசுவாசத்தைப் பற்றி இரண்டு காரியங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. முதலாவதாக, ஆண்டவர் எதை வெளிப்படுத்தியிருக்கிறாரோ அதை நம்புவதுதான் விசுவாசம். உறுதியாக எவ்வித சந்தேகமுமில்லாமல் ஆணித்தரமாக அவருடைய வார்த்தையை நம்புவதுதான் விசுவாசம். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் அவர் வார்த்தையில் தங்கியிருப்பதற்குப் பெயரே விசுவாசம். கர்த்தருடைய வார்த்தையிலிருந்து புறப்படாததாக இருந்தால், அந்த வார்த்தையில் தங்கியிருப்பதாக இல்லாமல் இருந்தால் எதுவும் விசுவாசமாகவே இருக்காது. ஆகவே இந்தப் பெண் தீர்க்கதரிசியின் வார்த்தையை நம்பினாள்.
கர்த்தர் உனக்கொரு பிள்ளையைக் கொடுப்பார் என்று சொன்னபோது அதை அவள் உறுதியாக நம்பினாள். ஏனென்றால் அந்த வார்த்தை ஒரு சாதாரண மனுஷனுடைய வார்த்தையல்ல. அது கர்த்தரிடத்திலிருந்து வந்த வார்த்தையாக இருந்தது. சாதாரணமாக சூழ்நிலையை வைத்துப் பார்க்கிறபோது அவ்விதமாக நடப்பதற்கு சந்தர்ப்பமுமில்லை வசதியுமில்லை. இருந்தபோதும் ஆண்டவர் இந்த சந்தர்ப்பங்களையெல்லாம் மீறி ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறபோது அதை எப்படி நான் நம்பாமல் இருக்க முடியும்? தேவனுடைய வார்த்தையில் உறுதியாக இருந்ததால்தான் அந்த மரணத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆண்டவர் ஒரு அற்புதத்தை செய்து பிள்ளையைக் கொடுத்திருப்பதால் அந்தப் பிள்ளை வாழ்வான் என்று அவள் நம்பினாள். ஆண்டவரின் வார்த்தையின்மீது அந்தளவுக்கு விசுவாசம் இருந்ததை நாம் பார்க்கிறோம்.
இரண்டாவதாக, எலிசா தீர்க்கதரிசி இந்த சூனேமியப் பெண்ணிடம் இதற்குமுன் வரலாற்றில் நடந்ததொரு சம்பவத்தை கூறியிருந்திருக்கக்கூடும். நிச்சயமாக அவள் அதைக் கேள்விப்பட்டிருந்திருப்பாள். ஏனென்று கேட்டால், இதற்கு முன்பாக இருந்த எலியா தீர்க்கதரிசி இப்படிப்பட்டதொரு அற்புதத்தைச் செய்திருக்கிறார். 1 இராஜாக்கள் 17:17-24 -பகுதியை வாசித்துப் பார்க்கிறபோது சாறிபாத் என்கிற இடத்தில் ஒரு விதவையின் வீட்டிலே நடந்த அற்புதத்தை வாசிக்கிறோம். அங்கேயும் ஒருவன் இறந்து போய்விட்டான், எலியா அவனுக்கு உயிரைக் கொடுத்தார். அதை இவள் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். ஆகவே, ஆண்டவர் எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்திருக்கிறார், நிச்சயம் அவர் அதை வாழ வைப்பார் என்கிற நம்பிக்கை இவளுக்கு இருந்தது. இந்த இரண்டு காரியங்கள்தான் அவளுடைய பிள்ளையின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாதபடி செய்தது.
இது இரண்டும் கர்த்தரின் வார்த்தையின் அடிப்படையில் அவளுடைய நம்பிக்கையாக இருந்ததே தவிர, தேவனுடைய வார்த்தைக்கு முரணாக அவளுடைய விசுவாசம் இருக்கவில்லை. ஆகவே நம்முடைய விசுவாசமும் ஒரு கற்பனையாக இருக்கக்கூடாது. பலபேர் விசுவாசம் எனும் பெயரில் கற்பனையுலகில் வாழ்கிறார்கள். அதிகமான கற்பனைகளை நம்பி அவை விசுவாசத்தோடு சம்பந்தப்பட்டவை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்விதமான கற்பனைகளையும் சிந்தனைகளையும் வேதத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கிறபோது அவை எத்தனை போலியானவை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆகவே நம்முடைய எண்ணங்கள், நோக்கங்கள், நடவடிக்கைகள் எல்லாம் வேதத்தை சார்ந்தவையாக, வேதத்திலிருந்து புறப்படுபவையாக, வேதத்தை வைத்து ஆதாரம் காட்டக்கூடியவையாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவை வேத நம்பிக்கைகளே அல்ல. ஆகவே இவள் ஆண்டவருடைய வார்த்தையை நம்பினாள், அவருடைய ஞானத்தில் நம்பிக்கை வைத்திருந்தாள், அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைத்திருந்தாள். அவளுடைய விசுவாசம் அப்படிப்பட்டதாக இருந்ததால்தான் எலிசா தீர்க்கதரிசியின் காலைப் பிடித்துக்கொண்டு உங்களை விடமாட்டேன் என்று அழுதிருக்கிறாள்.
ஒரு வேத விளக்கவுரையாளர் இப்படியாக சொல்லுகிறார்: “கர்த்தருடைய கிருபையையும் வாக்குறுதிகளையும் தொடர்ந்து விசுவாசிப்பதே விசுவாசம். கர்த்தர் தனது வார்த்தையின்படி நடந்துகொள்ளுவார் என்பதே விசுவாசம். விசுவாசம் என்பது நாம் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாகவும் கர்த்தர் செய்வார் என்பதை அறிந்து உணர்ந்திருப்பதே விசுவாசம். கர்த்தர் நம்மை ஏமாற்றவோ தவறான வழியில் ஒருபோதும் நடத்தவோ மாட்டார். அதுதான் விசுவாசம்”.
இப்போது நமக்கொரு கேள்வி எழலாம். அந்தப் பிள்ளை இறக்கக்கூடாது என்று ஆண்டவர் தீர்மானித்திருந்தால் அவன் ஏன் இறந்து போனான்? ஆண்டவர் தன் மக்களின் வாழ்க்கையில் தனது பராமரிப்பின் மூலம் செய்கிற காரியங்களைப் பற்றி இது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஆண்டவருடைய பராமரிப்பை நாம் எப்போதும் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடியாது. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்களையெல்லாம் ஆண்டவர் தன்னுடைய திட்டங்களுக்காக அருமையாகப் பயன்படுத்திக்கொள்ளுகிறார். ஆகவே அப்படியான நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் நடக்கிறபோது, அவற்றைப் பயன்படுத்தி ஆண்டவர் நம்மைத் திருத்துகிறார், கிருபையின் மூலமாக நம்மை வளர்க்கிறார், நாம் பரிசுத்த வாழ்க்கையில் முன்னேறிப் போவதற்கும் உதவி செய்கிறார். மேலும் இதன் மூலம் ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்பதை நமக்கு வெளிப்படுத்தி, நாம் அவரில் தங்கியிருக்கும்படியாகவும், அவரோடு இன்னும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும்படியாகவும் செய்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆண்டவரைப் பொறுத்தளவில் இந்த உலகத்தில் நடைபெறுகிற எதுவும் தற்செயலாக நடக்கும் நிகழ்வு அல்ல.
- பிள்ளையின் உயிர்த்தெழுதல்
எலிசா இப்போது என்ன செய்கிறார் என்பதை 29-30 வது வசனங்களில் நாம் வாசிக்கிறோம். “அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய், என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான். பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.” (2 இராஜாக்கள் 4:29-30). கேயாசி எலிசா சொன்னபடி செய்தும் 31 வது வசனத்தில் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. “ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.” (2 இராஜாக்கள் 4:31). கேயாசி அந்தத் தடியின் மூலமாக பெரிய அதிசயம் நடக்குமென்று நினைத்தான். ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? தீர்க்கதரிசியிடம் இருந்த விசுவாசமும், அந்த பெண்ணிடமிருந்த விசுவாசமும் கேயாசியிடம் இருக்கவில்லை. அவன் தடியை நம்பினானே தவிர கர்த்தரை நம்பவில்லை. அற்புதம் ஒரு தடியால் நடந்துவிடுமா? யாரை விசுவாசித்து அந்தக் காரியத்தைச் செய்யவேண்டுமோ அவரை விசுவாசித்து அந்தக் காரியத்தை அவன் செய்யவில்லை.
இங்கு நமக்கொரு பாடம் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு, கையில் வேதத்தை வைத்துக்கொண்டு, சபைக்கும் போய்வந்து, இருந்திருந்து ஜெபத்தையும் செய்து வருவதால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. இவற்றைச் செய்வதால் மட்டும் ஒருவர் விசுவாசி என்று சொல்லிவிட முடியாது. ஆண்டவரை விசுவாசிப்பது என்பது ஒன்று, வெறுமனமே பக்தி என்கிற பெயரில் ஆலயத்திற்குப் போய் வருவது இன்னொன்று. பாரம்பரிய சபைகள் என்று இருந்து வரும் சபைகளில் நாம் எதைக் கவனிக்கிறோம்? தாத்தா, பாட்டி காலத்திலிருந்து நாங்கள் பரம்பரையாகக் கிறிஸ்தவர்கள் என்ற எண்ணத்தோடு அவர்கள் போலித்தனமான வாழ்க்கையை நடத்தி வருகிறார்களே தவிர அவர்களுடைய வாழ்க்கையில் மெய்யான இரட்சிக்கும் விசுவாசமில்லை. அவர்கள் வாழ்க்கையில் எந்த அற்புதத்திற்கும் வழியே இல்லை. ஏனென்றால் மறுபிறப்பாகிய பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய அற்புதமே வாழ்க்கையில் நடந்திருக்காதபோது வேறு எந்த அற்புதத்தை ஆண்டவர் அவர்கள் வாழ்க்கையில் செய்துவிட முடியுமென்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம்முடைய விசுவாசம் ஒரு போலி வாழ்க்கையாக இருந்துவிடக்கூடாது. இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் காணப்பட்டது போல நம்முடைய விசுவாசம் இருக்கவேண்டும்.
இங்கு என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனியுங்கள். “எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்து, கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல்கொண்டது. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.” எனும் வார்த்தைகளை 2 இராஜாக்கள் 4:32-35 பகுதியில் வாசிக்கிறோம்.
எலிசா இந்தச் செயல்களையெல்லாம் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருக்கச் செய்தார். எவ்வாறு 1 இராஜாக்கள் 17 ஆம் அதிகாரத்தில் எலியா அந்த அற்புதத்தை செய்தாரோ அதேவிதமாக இங்கும்கூட அந்த அற்புதத்தை எலிசா செய்தார். உடனடியாக அந்தப் பிள்ளை உயிர்பிழைத்தது என்று கவனிக்கிறோம். எலிசா இதையெல்லாம் செய்ததற்குக் காரணமென்ன? தீர்க்கதரிசியோடு இருந்த ஆண்டவர் தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை எலிசாவுக்கு உணர்த்தியிருந்தார். தேவனுடைய ஞானத்தினாலும் அவருடைய வல்லமையினாலும் அந்தப் பிள்ளை அன்று உயிர்பிழைத்தான் என்று பார்க்கிறோம். அந்தத் தீர்க்கதரிசி கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியே தவிர, தீர்க்கதரிசியின் சொந்த வல்லமையினால் எதுவும் நடைபெறவில்லை. தீர்க்கதரிசியின் மூலமாக உயிர் கொடுப்பதும் நானே, ஒருவன் மரிப்பதற்குக் காரணமும் நானே என்று தேவன் இங்கு நமக்குக் காட்டுவதைப் பார்க்கிறோம். இது தேவனால் நடந்த அற்புதம்.
விசுவாசத்தைக் குறித்த இரண்டு பாடங்கள்
- மெய்யான விசுவாசம் எந்தவிதமான தடங்களும் இல்லாமல் தேவனுடைய வாக்குறுதிகளில் தாழ்மையோடு உறுதியாகத் தங்கியிருக்கும்.எந்தவிதத்திலும் ஒரு சந்தேகத்தை இருதயத்தில் கொண்டிராமல் தேவனுடைய வார்த்தையை உள்ளபடியே மனதில் ஏற்று அவருடைய பரிசுத்தமான வாக்குறுதிகளை மிகத்தாழ்மையோடு நம்புவதுதான் விசுவாசம். ஒரு கருவிபோல் பயன்படுத்தி கர்த்தரிடத்தில் காரியம் சாதித்துக் கொள்ளுவதற்காக உதவுவதல்ல விசுவாசம். ஆண்டவரைப் பற்றி மிக மோசமான ஒரு எண்ணத்தைக் கொண்டிருப்பவன்தான் விசுவாசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பார்ப்பான். நாம் நினைத்தபடி பயன்படுத்துவதற்கும், ஆட்டிப்படைப்பதற்கும் கர்த்தர் ஒரு பொம்மையல்ல. அவர் சர்வ வல்லவர், தன் சித்தப்படி எல்லாவற்றையும் செய்கிறவர். அவர் பரிசுத்தமுள்ளவராக, வல்லமையுள்ளவராக, இறையாண்மையுள்ளவராக, உலகத்தையும் பரலோகத்தையும் படைத்த தேவனாக இருக்கிறார். நாம் அவருக்கு முன்பாக ஒரு சாதாரண துரும்பாக இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் தன்னுடைய கிருபையினாலே தனக்கென ஒரு மக்களை தெரிவுசெய்து அவர்களில் இடைப்பட்டு தன்னுடைய மகிமைக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். விசுவாசம் இந்த உலகத்து மக்களின் சிந்தனையின் அடிப்படையில் இருந்துவிடக்கூடாது. ஆண்டவருடைய வாக்குறுதிகளில் அசைக்க முடியாதபடி, எந்தவித சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கை வைத்திருப்பதுதான் உண்மையான விசுவாசமாகும். ஆகவே நீங்கள் உங்கள் துயரமான சூழ்நிலையிலும் ஆண்டவரை நம்ப வேண்டும். எந்த நிலையிலும் ஆண்டவர் நமக்கு உதவ முடியும். ஏனென்றால் அவரால் முடியாதது ஒன்றுமேயில்லை. அவர் அற்புதங்களின் தேவனாக இருக்கிறார்.
- நம் வாழ்க்கையில் அன்றாட நடவடிக்கைகளில் விசுவாசம் நடைமுறையில் காணப்பட வேண்டும்.விசுவாசம் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயத்தில் வைத்திருக்கிற இரகசியம் அல்ல விசுவாசம். நாம் நடந்து கொள்ளும் விதம் நம் விசுவாசத்தின் அடிப்படையில் காணப்பட வேண்டும். விசுவாசம் அமைதியாக ஒரு ஓரத்தில் அடங்கியிருக்காது. சிலருக்கு விசுவாசம் என்கிற பெயரில் சில குருட்டுத்தனமான நம்பிக்கைகள் இருக்கும். அதை எதன் அடிப்படையில் எந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நம்புகிறீர்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்களால் அதற்குப் பதிலே சொல்லமுடியாது. அது குருட்டு நம்பிக்கையாக மட்டுமே இருக்கும். இந்துப் பாரம்பரியத்திலிருந்து வருகின்ற குருட்டு நம்பிக்கையும், வேத அடிப்படையில் அதன் வாக்குறுதிகளின் மேல் நம்பிக்கை வைத்து வருகிற விசுவாசத்திற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆகவே நம்முடைய விசுவாசம் நம்முடைய நடவடிக்கைகளில், எடுக்கின்ற தீர்மானங்களில், கடமைகளில், திட்டங்களில் காணப்பட வேண்டும். அதில் விசுவாசத்தைக் காணமுடியாவிட்டால் அதற்கு பெயர் விசுவாசமே அல்ல. நம்முடைய விசுவாசம் எவ்விதம் இருக்கிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சூனேமியப் பெண்ணின் வாழ்க்கையில் மெய்யான விசுவாசத்தைக் காண்கிறோம். கர்த்தர்மேல் தனக்கிருந்த விசுவாசத்தை எலிசா தீர்க்கதரிசிக்கு முன்னால் அவள் காட்டினாள். தீர்க்கதரிசி ஊருக்கு வந்தபோது, கர்த்தர்மேல் அவள் நம்பிக்கை வைத்திருந்ததால், அந்தத் தீர்க்கதரிசி கர்த்தருடைய மனிதன் என்று அவள் நம்பியதால், அவரிடமிருந்து வருகிற வார்த்தை கர்த்தருடைய வார்த்தை என்று நம்பியதால், தனது விசுவாசத்தின் அடிப்படையில் அவருக்கு என்னென்ன செய்யலாமோ அதையெல்லாம் தன் கணவரோடு சேர்ந்து தீர்மானித்து அவள் செய்தாள் என்று பார்க்கிறோம்.
அவளுடைய செயல்களின் பொருளென்ன? அது சமுதாயத்தில் காணப்படும் சாதாரண விருந்தோம்பலல்ல, அவளுடைய விசுவாசம் அவளை அவ்வாறு செயல்படச் செய்தது. இன்னொரு இடத்திலும் அவளுடைய விசுவாசத்தைக் காண்கிறோம். அவள் விருந்துபசாரம் செய்தவேளை, உனக்கு என்னவேண்டும் நான் ஏதாகிலும் செய்கிறேன் என்று தீர்க்கதரிசி அவளைப் பார்த்துக் கேட்டபோது, அவள், என்னுடைய மக்கள் மத்தியில் போதுமென்கிற மனத்தோடு மிகவும் சந்தோஷத்தோடு வாழ்ந்து வருகிறேன் என்று சொன்னாள். அவளுடைய வார்த்தைகளுக்கு அர்த்தமென்ன? இங்கே அவளுடைய விசுவாசம் அவளை அவ்வாறு பேச வைத்ததைக் காண்கிறோம். அவளுடைய விசுவாசத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருந்தது. அதுமட்டுமல்ல, தீர்க்கதரிசி உனக்குப் பிள்ளை பிறக்கும் என்று சொன்னபோது அவரோடு வாக்குவாதம் பண்ணாமல் அதை அவள் உறுதியாக நம்பினாள். ஆண்டவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டியது விசுவாசத்தின் கடமை, ஆகவே அவள் அதை நம்பினாள். மேலும் அவள் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் தேவனுடைய சித்தத்தின்படியே நடந்தது. அவள் ஆண்டவரையும், அவருடைய ஞானத்தையும் நம்பினாள், போதுமென்கிற மனத்தோடு வாழ்ந்து வந்தாள், எவ்வித முறுமுறுப்பும் இல்லாமல் தன் வாழ்க்கையில் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஆண்டவருக்காக உழைத்தாள், தீர்க்கதரிசிக்குப் பணி செய்தாள் என்று பார்க்கிறோம். இங்குதான் அவளுடைய விசுவாசம் அவளுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுவதைப் பார்க்கிறோம்.
நம் வாழ்க்கையில் அத்தகைய விசுவாசம் இருக்கிறதா? தானியேலை சிங்கத்தின் கெபியில் போட்டபோது அவனுடைய விசுவாசம் வேலை செய்தது அல்லவா! அவன் மகா துன்பமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டான், கர்த்தர்மேல் அவன் விசுவாசம் வைத்திருந்ததனால் ஆண்டவர் சிங்கத்தின் வாய்களை அடைத்து அவன் இறக்காமல் பார்த்துக்கொண்டார். வாழ்க்கை எப்போதும் மிகவும் ஆச்சரியமானது. அதில் சந்தோஷமான காரியங்களும் நடக்கும், வேதனை தரக்கூடிய நிகழ்வுகளும் நடக்கும். ஆனால் ஆண்டவர்மேல், அவர் வார்த்தையின்மேல் உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறவர்கள் அசாதாரண சூழ்நிலையிலும் தங்கள் விசுவாசத்தை நடைமுறையில் காட்டுவார்கள். இப்படித்தான் விசுவாசிகளின் வாழ்க்கையில் மெய்யான விசுவாசம் வேலை செய்கிறது. வேதத்தில் வாசிக்கிற ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் இதேவிதமாகத்தான் விசுவாசம் செயல்படுவதை வாசிக்கிறோம்.
இப்போது உங்களைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலைகள் நடைபெறுகிறபோது உங்கள் விசுவாசத்தைக் கிரியைகளில் காட்டுகிறீர்களா? கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு சொல்லுகிறார் அல்லவா! உண்மையான விசுவாசம் நம் செயல்களில் காணக்கூடியதாக இருக்கவேண்டும். இந்த சூனேமியப் பெண்ணின் வாழ்க்கையானது அவளுடைய விசுவாசம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. இதை வாசிக்கிற இந்நேரத்தில் நம்முடைய விசுவாசம் செயல்களின் மூலம் பிரகாசமடையுமானால் அதுவே தேவனுடைய சித்தம், அதுவே கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவரும். இந்நேரத்திலும்கூட கிருபையிலும் தேவனுடைய ஞானத்திலும் நம்மை வளர்த்துக்கொண்டு, இக்கட்டான காலப்பகுதியிலும் விசுவாசத்திற்குரியவர்களாக, ஆண்டவருடைய பிள்ளைகளை நேசித்து அவர்களுக்கு நற்கிரியைகளைச் செய்து நாம் முன்னோக்கிப் போகிறவர்களாக இருந்தால் தேவனுடைய சித்தம் நம் வாழ்க்கையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாகும். ஏனென்றால் அவருடைய வாக்குறுதிகளை நாம் நம்பிச் செயல்படுவதால் அவருடைய சித்தம் நிறைவேறுவதையும் நாம் பார்க்கிறோம்.
கிறிஸ்துவை நீங்கள் முழுமனத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இப்படியான விசுவாசம் கிறிஸ்துவின் மீது உங்களுக்கு இல்லாமல் இருந்தால், இது சிந்திக்க வேண்டிய நேரம். இந்தச் சூனேமியப் பெண் தான் விசுவாசித்த தேவன் எவ்வளவு பெரியவர், எவ்வளவு ஞானமுள்ளவர், எவ்வளவு வல்லமையுள்ளவர், தன் மக்களைத் தொடர்ந்து காக்கிறவர் என்பதை நம்முன் காட்டுகிறாள். அந்த விசுவாசத்தைக் கொடுக்கிற இயேசு கிறிஸ்துவிடம் நீங்கள் ஏன் வரக்கூடாது? அவரை ஏன் நீங்கள் நம்பி விசுவாசிக்கக்கூடாது? சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பாவத்தில் இருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை உங்களின் இரட்சிப்பிற்காக விசுவாசியுங்கள். அவரே பாவிகளின் இரட்சகர்; அவரே ஒரே தடவை தன்னைப் பாவங்களுக்குப் பலியாக சிலுவையில் அர்ப்பணித்தவர். அவராலன்றி இரட்சிப்பில்லை. மரித்து உயிர்த்தெழுந்த இயேசு உங்களுடைய பாவங்களிலிருந்து உயிர்த்தெழ உதவுவார்; நித்திய ஜீவனையும் அளிப்பார்.
உயிர் மாய்க்கும் நஞ்சும், கொசுத்தொல்லையும்
கர்த்தருடைய சத்தியத்தைத் தாங்கி வரும் வேதத்தைப் பற்றிய நம்முடைய அறிவும், அணுகுமுறையும் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அதாவது, வேதத்தை எப்போதும் தேவபயத்தோடு அணுகுவது அவசியம். அது நம்மைப் படைத்தவரின் சித்தத்தைத் தாங்கி வருவதால் அதைத் துல்லியமாக அறிந்துகொள்ளுவதற்கு நமக்குத் தேவபயமும் பரிசுத்த ஆவியானவரின் துணையும் மிகமிக அவசியம். இவை இரண்டும் இல்லாமல் வேதம் படிக்க முயல்வது ஆபத்து.
இவற்றோடு நிதானித்துப் பொறுமையோடு ஆராய்ந்து அறிந்துகொள்ளும் பக்குவமும் தேவை. ஏனெனில், வேதத்தைப் படிக்கும்போது தினசரி செய்தித்தாளை வாசிப்பதுபோல அதைப் படிக்கமுடியாது. இரண்டிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு தெரியாதவன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. வேதம் ஆராய்ந்து கவனத்தோடு படித்தறிந்துகொள்ள வேண்டிய தெய்வீகச் செய்தி. அதைப் படித்தறிவதற்கு அவசியமான வேதவிதிகளைக் கற்றுத் தேர்ந்து அவற்றை முறையோடு பயன்படுத்தி தேவ செய்தியை அறிந்துகொள்ள நேரமும், நிதானமும், பொறுமையும் அவசியம்.
வெளியரங்கமாகவும், உள்ளரங்கமாகவும்
வேதத்தில் அனைத்துச் சத்தியங்கள் வெளியரங்கமாகவும், உள்ளடக்கமாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன. வெளியரங்கமாக விளக்கப்பட்டிருப்பவற்றை விளங்கிக்கொள்ளுவது சுலபமானது. உதாரணத்திற்கு, இரட்சிப்பிற்காக நாம் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்ற போதனை. இது குழப்பத்திற்கிடமில்லாமல் புதிய ஏற்பாட்டின் பல்வேறு பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கின்றது. இதை விளங்கிக்கொள்ள நாம் பெரும் மேதையாக இருக்கவேண்டியதில்லை.
வேதத்தில் வேறு பல சத்தியங்கள், அதுவும் மிக முக்கியமானவையுங்கூட உள்ளரங்கமாக விளக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, வெளிப்படையாக ஒரே வசனத்தில் தரப்படாமல், முழு வேதத்தையும் ஆராய்ந்து அந்த சத்தியத்திற்குரிய அனைத்து வசனப்பகுதிகளையும் தொகுத்து ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டிய விதத்தில் தரப்பட்டிருக்கின்றன. கர்த்தரின் ஆராதனை பற்றிய சத்தியம் இந்தவிதத்தில்தான் தரப்பட்டிருக்கிறது. அதுபற்றிய முழுப் போதனையையும் ஒரு சில வசனங்களை மட்டும் பயன்படுத்தி அதற்குரிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. 1689 விசுவாச அறிக்கையின் 22ம் அதிகாரம் ஆராதனைத் தத்துவங்களை எட்டுப் பத்திகளில் விளக்குகிறது. அந்த விளக்கங்கள் அனைத்தும் முழு வேதத்திலும் இருந்து தொகுக்கப்பட்டவை; ஒரு சில இடங்களில் மட்டும் அவை வெளியரங்கமாக விளக்கப்படவில்லை.
இந்த இரண்டாவது வகை (உள்ளடக்கமாக) வேதவிளக்கவிதியைப் பயன்படுத்தும்போது நமக்கு நிதானமும், பொறுமையும், உழைப்பும் அவசியம். உள்ளடக்கமாக விளக்கப்பட்டிருக்கும் சத்தியங்களை ஆராய்ந்தறிய நேரமும் அதிகம் செலவாகும். இந்த இரண்டு வேத விளக்கவிதிகளையும் பயன்படுத்தியே நாம் வேத சத்தியங்களனைத்தையும் அறிந்துகொள்ளுகிறோம். இந்த இரண்டும் மிகமிக முக்கியமானவை.
மாறுபாடான கருத்துக்கள்
இந்த முறையில் கற்று அறிந்துகொள்ள வேண்டியதாகக் கர்த்தர் வேதத்தைத் தந்திருப்பதால்தான் சில வேளைகளில் அதைப் படிப்பவர்கள் ஒரு சில சத்தியங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும் நிலை உருவாகின்றது. உதாரணத்திற்கு, ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்ளுவோம்.
புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் என்ற வார்த்தைக்கு “முழுக்குதல்” என்ற அர்த்தம் மட்டுமே காணப்படுகின்றது. அதை ஜோன் கல்வினும் ஏற்றுக்கொள்ளுகிறார். அத்தோடு, இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது யோவான் ஸ்நானனுடன் தண்ணீருக்குள் போய் தண்ணீரிலிருந்து கரையேறியதாக மத். 3:16 விளக்குகிறது. இந்த முறையிலேயே கிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சிப்பிற்காகத் தனிப்பட்ட முறையில் விசுவாசித்த அனைவரும் புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பாப்திஸ்து சபைகள் கிறிஸ்துவை விசுவாசித்து அதை பகிரங்கமாக அறிவித்து சபை அங்கத்தவத்துவத்தை நாடுகிறவர்களுக்கு மட்டும் முழுக்கு ஞானஸ்நானத்தை அளிக்கிறார்கள். பாப்திஸ்து சபைகள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்கும் பக்குவமோ, விசுவாசத்தை பகிரங்கமாக அறிவிக்கும் வயதோ, அங்கத்தவராகும் தகுதிகளோ கிடையாது.
இம்முறைக்கு மாறாக குழந்தை ஞானஸ்நானத்தைப் பின்பற்றும் திருச்சபைகள், பழைய ஏற்பாட்டுப் போதனையைப் பின்பற்றி, ஆபிரகாமுக்குக் கர்த்தர் அளித்த வாக்குறுதியின்படி (ஆதி 15) ஆபிரகாமின் பிள்ளைகளும் விருத்தசேதனத்தின் மூலமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்ற விளக்கத்தின் அடிப்படையில், அது புதிய ஏற்பாட்டிலும் தொடர்வதாகக் கருதி பழைய ஏற்பாட்டு விருத்தசேதனத்தின் இடத்தை ஞானஸ்நானம் பிடித்திருக்கிறது என்று கூறி, புதிய ஏற்பாடு விசுவாசிகளாக இருப்பவர்களின் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். இவர்கள் இஸ்ரவேலைப் பழைய ஏற்பாட்டு சபையாகவும், அதுவே புதிய ஏற்பாட்டில் தொடர்கிறதாகவும் கருதுகிறார்கள். புதிய, பழைய உடன்படிக்கைகளுக்கிடையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது இவர்களுடைய விளக்கம்.
மேல் கவனித்த ஞானஸ்நானம் பற்றிய இரண்டு விளக்கங்களையும் கவனித்தால் வேதத்தை இரண்டு தரப்பாரும் விளக்கும் முறையில் வேறுபாடு இருப்பதைக் காண்கிறோம். முதல் தரப்பினரான பாப்திஸ்துகள், பழைய உடன்படிக்கை பெருமளவுக்கு இஸ்ரவேலை நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிறது என்றும், புதிய உடன்படிக்கையிலேயே திருச்சபை கிறிஸ்துவை மையமாகக் கொண்டு உருவாகியது என்கிறார்கள். அந்தவிதத்தில் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் திருச்சபை காணப்படவில்லை என்கிறார்கள். அத்தோடு ஞானஸ்நானம் புதிய உடன்படிக்கை திருச்சபைக்குக் கொடுக்கப்பட்ட திருநியமம் என்றும் அதற்கும் விருத்தசேதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்கள். இரண்டாம் தரப்பினரான குழந்தை ஞானஸ்நானவாதிகள் இதற்கு மாறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
மாறுபாடான இந்த இரு வேறு கருத்துக்களும் வரலாற்றில் இருந்து வந்திருக்கின்றன. அதனால் இவ்விருவேறு கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபைகளும் அமைந்து வந்திருக்கின்றன. இவை இரண்டில் எந்தவொரு கருத்தையும் நாம் போலிப்போதனையாகக் கருதக்கூடாது; இவை ஒரே தலைப்பைக் குறித்த வேறுபட்ட வேத விளக்கங்கள் மட்டுமே. சீர்திருத்த பாப்திஸ்தான நான், இந்த விளக்கங்களில் விசுவாசிகளுக்கு மட்டும் முழுக்கு ஞானஸ்நானமளித்து சபை அங்கத்தவர்களாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உறுதியாக நம்புகிறேன். அதற்குரிய விளக்கங்களே முற்றிலும் வேதத்தோடு பொருந்திப் போவதாகவும் நம்புகிறேன். அதேவேளை, அதற்கு முரணான கருத்தைக் கொண்டிருக்கும் குழந்தை ஞானஸ்நானவாதிகளை நான் போலிப்போதனையைப் பின்பற்றுகிறவர்களாகக் கருதவில்லை. இந்த விஷயத்திலும், திருச்சபைக் கோட்பாடு மற்றும் கர்த்தரின் உடன்படிக்கை ஆகிய போதனைகளிலும் அவர்களோடு நான் முற்றிலும் வேறுபடுகிறேன். இருந்தபோதும் எனக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் குழந்தை ஞானஸ்னானவாதிகள் தாங்கள் நம்பும் விளக்கத்தைத்தான் வேதம் தருகிறது என்று நம்புகிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் என்னுடையதிலிருந்து முற்றிலும் வேறுபாடானவையே தவிர போலிப்போதனைகள் அல்ல. அவர்கள் இந்த விஷயத்தை விளக்கும் முறையில் தவறிழைக்கிறார்கள், வேதவிளக்க விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பதே என் பதில். இருந்தும் இந்த விஷயத்தில் அவர்களுடைய கருத்துக்கள் போலிப்போதனை என்ற பட்டியலுக்குள் வராதவை.
குழந்தை ஞானஸ்நானம் போலிப்போதனை இல்லை என்பதால் நாம் பாப்திஸ்து சபைகளில் இனி முழுக்கு ஞானஸ்நானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இரண்டையும் பின்பற்றி வரலாமே என்று சிலர் நினைக்கிறார்கள். இது அடிப்படையிலேயே மிகத்தவறான எண்ணம். முழுக்குஞானஸ்நானம் வெறும் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயமல்ல; அது திருச்சபையின் அங்கத்துவ அமைப்போடு தொடர்புடையது, இரட்சிப்போடும் தொடர்புடையது. அதனால் ஒருபோதும் ஒரே சபையில் இரண்டு முறைகளையும் பயன்படுத்த முடியாது; அப்படிப் பயன்படுத்தினால் வேதம் விளக்கும் திருச்சபை பற்றிய கோட்பாட்டை நாம் நடைமுறையில் பின்பற்ற முடியாது. அதைக் குழிதோண்டிப் புதைக்க நேரிடும். இந்தப் பிரச்சனைக்கு என்ன வழி? முழுக்கு ஞானஸ்நானமும், குழந்தை ஞானஸ்நானமும் கிறிஸ்து மறுபடியும் வரும்வரை உலகில் இருக்கத்தான் போகின்றன. அதனால் நாம் நம்பிப் பின்பற்றும் திருச்சபைக் கோட்பாட்டை முறையோடு பின்பற்றி அதில் உறுதியாக இருந்து கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். எதிர்தரப்பைப் போலிப்போதனையாளராகக் கருதக்கூடாது. அவர்களுடைய கருத்தை நாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவில்லை; ஆதரிக்கவும் இல்லை; பின்பற்றப்போவதுமில்லை. இருந்தபோதும் அவர்கள் நமக்கு எதிரிகளல்ல. கொசுக்கடியை நாம் பொறுத்துக்கொள்வதில்லையா? அதுபோலத்தான் இந்தப் பூரணமற்ற உலகில் இதையும் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
எது போலிப்போதனை?
போலிப்போதனை வேதத்தின் (கிறிஸ்தவத்தின்) அடிப்படைச் சத்தியங்களுக்கு (Foundational doctrines or essential teachings) முற்றிலும் விரோதமானது. அது கிறிஸ்தவத்தைத் தாங்கும் சத்தியத் தூண்களைத் தகர்க்கிறது. உதாரணத்திற்கு, திரித்துவப்போதனையில் நாம் மாறுபாடான விளக்கங்களைக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்வது போலிப்போதனைக்கு வழிகோளும். (இதற்குள் நுழையத் துணிந்திருக்கும் வெயின் குரூடமின் தவறான போதனை பற்றி இந்த இதழில் விளக்கியிருக்கிறேன்). கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றியும் நாம் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கக் கூடாது.
இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, அவருடைய தெய்வீக, மானுடத் தன்மைகள், அவருடைய அற்புதச் செயல்கள், அவருடைய பூரணப் பரிகாரப்பலி, அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், அவருக்கும் பிதாவுக்கும் இடையில் காணப்படும் ஐக்கியம், திரித்துவ அங்கத்தவர்களுக்கிடையில் காணப்படும் ஐக்கியம், அவர்களுடைய தன்மை, பணிகள் ஆகியவை பற்றியும், இறையாண்மை, நீதிமானாக்குதல், ஜென்மபாவம், மறுபிறப்பு, மனந்திரும்புதல், விசுவாசம், பரிசுத்தமாக்குதல் ஆகியவை பற்றியும், வேதம் பரிசுத்த ஆவியினால் ஊதித் தரப்பட்ட தன்மை, அதன் குறைபாடுகளற்ற தன்மை, அதனுடைய அதிகாரம், அதன் போதுமான தன்மை, பரலோகம், நரகம் ஆகியவை பற்றியும் நாம் ஒத்த கருத்துள்ளவர்களாகவே இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் போதனைகளைப் பற்றி வேதம் விளக்குகின்ற முறையான போதனைகளை நாம் அறிந்து பின்பற்ற உதவவும், போலிப்போதனைகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவுமே வரலாற்றில் திருச்சபை விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் உருவாக்கி நமக்குத் துணை செய்திருக்கிறது. இவை போலிப் போதனைகளுக்கு நம்மிருதயத்தில் இடங்கொடுத்துவிடாதிருக்க உதவும். (போலிப்போதனைகள் பற்றிய மிக ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள, “போலிப்போதனைக்கு விலகி நில்லுங்கள்” எனும் ஆக்கத்தை 2021, மலர் 27, இதழ் 4ஐ வாசியுங்கள்).
இவற்றோடு, வேதம் அறுபத்தி ஆறு நூல்களில் விளக்கமாகத் தரும் போதனைகளுக்கு அடிப்படையில் முரணான எந்தப் போதனையும் போலிப்போதனையே. கருக்கலைப்புக்கு வேதம் அனுமதி தரவில்லை. அதற்கு ஒத்துப்போவது போலிப்போதனைக்கு நம் வாழ்வில் இடங்கொடுப்பதற்குச் சமம். இஸ்லாமியரைப்போல இரண்டு மனைவிகளைக் கொண்டிருப்பது போலிப்போதனைக்கு இடங்கொடுப்பதாகும். அதற்கு கிறிஸ்தவன் வாழ்வில் இடந்தரக்கூடாது. சிலைவணக்கத்தில் ஈடுபடுவதும், தேவதூதர்களை வணங்குவதும், பிறமதப் போதனைகளைப் பின்பற்றுவதும், இந்து மதப் போதனைகளுக்கு ஏற்றவிதத்தில் கிறிஸ்தவப் போதனைகளுக்கு விளக்கங்கொடுப்பதும் போலிப்போதனைக்கான உறுதியான அடையாளங்கள். கிறிஸ்துவின் பரிகாரப்பலியை இழிவுபடுத்தும் கத்தோலிக்க மத “மாஸ்” (Mass) ஆணித்தரமான போலிப்போதனை. தள்ளுபடி ஆகமங்களை ஒதுக்கிவைக்காமல் இருப்பதும் போலிப்போதனைக்கான அடையாளம். அதனால்தான் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாகக் கருதமுடியாது. இன்று அநேகரை வஞ்சித்துக்கொண்டிருக்கும் செழிப்புபதேசப் போதனை (Prosperity gospel) போலிப்போதனையே. அது வேதத்தில் அடியோடு காணப்படாததொரு போதனையை அளித்து ஆத்துமாக்களை வஞ்சிக்கிறது. போலிப்போதனை எந்த ரூபத்தில் வந்தாலும் அது நம் உயிரை மாய்க்கும் நஞ்சு.
அடிப்படைச் சத்தியங்களும் அவ்வாறில்லாத சத்தியங்களும்
நிச்சயம் வேதத்தில் அடிப்படைச் சத்தியங்களும், அவ்வாறில்லாத ஆனால் அவசியமான சத்தியங்களும் காணப்படுகின்றன. உண்மையில் இப்படிப் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், இது தவறானதொரு கருத்து உருவாகக் காரணமாக அமைந்துவிடுகிறது. சிலர் தவறான புரிந்துகொள்ளுதலால் அடிப்படைப் போதனைகளாக இல்லாத சத்தியங்கள் அவசியமற்றவை என்று கருதி அவற்றை ஓரங்கட்டிவிடுகிறார்கள். இது பொதுவாகவே கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுகிறது. அவ்வாறு நினைப்பது மிகவும் ஆபத்தானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஜோன் கல்வின் சொல்லுகிறார், “மெய்யான சத்தியத்தின் எல்லாப் பகுதிகளும் ஒரேவிதமானவையல்ல” என்று. கெவின் டீ யொங்கின் பின்வரும் விளக்கம் இந்த விஷயத்தில் கைகொடுக்கிறது, “சில சத்தியங்கள் விசுவாசம் நிலைத்திருப்பதற்கு அத்தியாவசியமானவை, ஏனையவை அது பூரணமடைய அவசியமானவை. சில தவறான போதனைகள் நாம் அவற்றை விளக்குகின்ற விதத்தில் தங்கியுள்ளன; ஏனையவை அவற்றின் நம்பிக்கையில் அடங்கியுள்ளன. சில சத்தியங்கள் நமது இரட்சிப்புக்கு அவசியமானவை, ஏனையவற்றை நாம் ஒருபோதும் நிராகரிக்க முடியாது. சில சத்தியங்கள் நாம் பரலோகத்தை அடைய அவசியமானவை; ஏனையவை நாம் பரலோகம் போகும் வழியில் துணை செய்பவை” (Daily Doctrine, Kevin DeYong, pg 19-20, Crosway, USA)
திருச்சபைக்கு தசம பாகத்தைக் கொடுப்பது அடிப்படைச் சத்தியமல்ல; அது அவசியமற்ற, அக்கறை காட்டத் தேவையில்லாத சத்தியமுமல்ல. அது அடிப்படைச் சத்தியப் பட்டியலில் வராவிட்டாலும், திருச்சபை கோட்பாட்டோடு தொடர்புடைய அவசியமான போதனை. அப்படியில்லாமலிருந்திருந்தால் நேரத்தை செலவிட்டு அதற்கான வேத விளக்கங்களைத் தந்து ஏ. டபிள்யூ. பிங்க் ஒரு சிறு ஆக்கத்தை எழுதியிருப்பாரா? கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் அது பழைய ஏற்பாட்டோடு மட்டும் தொடர்புடையது, புதிய ஏற்பாட்டிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பார்கள். அது அவர்களுடைய காலப்பாகுபாட்டுக் கோட்பாட்டின் தாக்கத்தினால் ஏற்பட்ட கருத்தே தவிர வேதத்தில் இருந்து புறப்பட்டதல்ல. தசமபாகம் கொடுப்பது புதிய ஏற்பாட்டிலும் தொடர வேண்டிய ஒரு போதனை.
இறுதிக்காலப் போதனைகள் அடிப்படைச் சத்தியங்களின் பட்டியலில் வரவில்லை. ஏனெனில், அப்போதனைகளுக்கும் இரட்சிப்பிற்கும் தொடர்பில்லை. அப்போதனைகளை விசுவாசிக்காதவர்களை இரட்சிப்படையாதவர்கள் என்று அழைக்கமுடியாது. இருப்பினும் இறுதிக்காலப் போதனைகள் அவசியமானவை; அக்கறைகாட்ட வேண்டியவை. அவை கர்த்தர் உலகத்தில் எந்தவகையில் செயல்படுகிறார் என்பதையும், மீட்பின் வரலாறு எவ்வாறு முடியப்போகிறது என்பதையும் விளக்குகின்றன. இல்லாதிருந்தால் தானியேலை தைரியப்படுத்த கர்த்தர் வரலாற்றில் நடக்கவிருக்கும் காரியங்களைத் தரிசனத்தில் வெளிப்படுத்தியிருப்பாரா?
துன்புறுத்தப்பட்ட திருச்சபைக்கு ஆறுதலளித்து அவர்களைத் தைரியப்படுத்தவே ஆண்டவர் வெளிப்படுத்தல் விசேஷத்தை, அவர்களுடைய முதல் நூற்றாண்டின் ஆவிக்குரிய தேவையை நிறைவேற்ற அளித்தார். ஆவிக்குரிய விதத்தில் நமக்குதவும் இறுதிக்காலப் போதனைகள் அடிப்படைப்போதனைகளாக இல்லாதிருந்தாலும், அவசியமற்றவையோ, ஒதுக்கித்தள்ளிவிட வேண்டியவையோ அல்ல. கெவின் டீ யொங்க் குறிப்பிடுவதுபோல், “ஆயிரம் வருட அரசாட்சி பற்றிய போதனை திரித்துவப் போதனையைப் போலவோ, கிறிஸ்துவின் தெய்வீக மானுடத் தன்மையைப் போலவோ அல்லது நீதிமானாக்குதலைப் போலவோ முக்கியமானதாக அல்லாவிட்டாலும் அது நாம் இந்த உலகத்தை எவ்வாறு அணுகவேண்டும், அதன் பண்பாட்டோடு நமக்கு எத்தகைய உறவு இருக்கவேண்டும் எனும் விஷயங்களில் நம்மில் செல்வாக்கு செலுத்துகின்றது. . . . ஆகவே, அதை ஒதுக்கிவைத்துவிடாமல் கவனத்தோடு ஆராய்ந்து படித்து வேதம் அதுபற்றி என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்” (Daily Doctrine, Kevin DeYong, pg 367-368, Crossway, USA).
ஒரு குறிப்பிட்ட பகுதியினர் முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதல் ஆகிய போதனைகளில் நாம் அக்கறைகாட்டத் தேவையில்லை, இரட்சிப்பை அடைவதும், அதை அனுபவிப்பதும் மட்டுமே அவசியம் என்கிறார்கள். இவர்களுக்கு முன்குறித்தலாகிய போதனையும், தெரிந்துகொள்ளுதலாகிய போதனையும் கசப்பானவை. இவை அந்தளவுக்கு அவசியமற்றவையாக இருந்தால் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இவை பற்றிய போதனைகள் ஏன் தரப்பட்டிருக்கின்றன? பவுல் அப்போஸ்தலனும், பேதுருவும் தங்களுடைய நிருபங்களில் ஆழமாகவும், ஆணித்தரமாகவும் இவற்றை விளக்கி விசுவாசிகளைத் தைரியப்படுத்தியிருக்கிறார்கள். இயேசுவும், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நாம் புறம்பே தள்ளுவதில்லை” என அறிவித்திருக்கிறார். இயேசுவின் இந்த வரிகள் முன்குறித்தலையும், தெரிந்துகொள்ளுதலையும் விளக்குகின்றன என்பது புரியவில்லையா? இவை இரண்டையும் உதாசீனப்படுத்துகிறவர்கள் மீட்புக்கான திரித்துவ தேவனின் நித்திய திட்டத்தையும் இறையாண்மையையும் கொச்சைப்படுத்தி உதாசீனப்படுத்துகிறார்கள். அவற்றை அவசியமற்றவையாகக் கருத இவர்களுக்கு யார் உரிமை தந்தது? இறையாண்மைகொண்ட கர்த்தரின் வார்த்தைக்கு எதிராக நிற்க இவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? இதெல்லாம் அறியாமையின் அறிகுறிகள்.
புதிதாக சீர்திருத்த போதனைகளை அறிந்துகொள்கிற சிலர் கல்வினித்துவ ஐம்போதனைகள் மட்டுமே முக்கியமானவை, அடிப்படையானவை; வேறெதைப் பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள். இதுவும் மிகவும் அறிவீனமான வார்த்தைகள். ஐம்போதனைகள் ஆர்மீனியத்துவத்திற்கெதிராக டோர்ட் கவுன்சிலால் தொகுக்கப்பட்டவை. அவை கல்வினித்துவத்தை எதிர்த்தவர்களுக்கு எதிரான வரலாற்றில் எழுந்த காலத்துக்கேற்ற பதில்கள் மட்டுமே. அவை மட்டுமே வேதமாகிவிடாது. இவற்றிற்கு மேல் அடிப்படைச் சத்தியங்கள் வேதத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஐம்போதனைகளைத் தாண்டி முன்னோக்கிப் போகாதவர்கள் வேதஞானத்திலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும் பின்தங்கிப்போய் குறைபாட்டோடு மட்டுமே வாழ்வார்கள்.
கர்த்தர் தன்னுடைய வெளிப்படுத்தலான வேதத்தில் அவசியமற்ற எதையும் நமக்கு விளக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய அனைத்தையும் நமக்கு அருளித்தந்திருக்கிறார். அவரே எந்தெந்த சத்தியங்கள் அதிமுக்கியமான அடிப்படைப் போதனைகள், எந்தெந்த சத்தியங்கள் அவ்வாரில்லாத, ஓரங்கட்டப்படக்கூடாத சத்தியங்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள உதவுகிறார். அதனால் நாம் நினைத்தபடி சுயமாக எந்தப் போதனையையும் நம்முடைய வசதிக்கும், எண்ணங்களுக்கும் ஏற்றபடி அவசியமானவை, அவசியமில்லாதவை என்று தீர்மானித்து ஒதுக்கித்தள்ள முடியாது. கர்த்தரின் வார்த்தை தனக்குத் தானே விளக்கமளிக்கிறது. இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும், வரலாற்றில் திருச்சபையும், விசுவாச அறிக்கைகளும் இனங்காட்டி அவசியமானவையாக விளக்கும் போதனைகள் எல்லாமே நமக்குத் தேவையானவை.
உயிரை மாய்க்கும் நஞ்சிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியவேண்டும். அதேநேரம் கொசுத்தொல்லையைப் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும்! அடிப்படைப் போதனைகளில், ஒற்றுமை. அவ்வாறல்லாத போதனைகளில், சுதந்திரம். எல்லாவற்றிலும், அன்பு! எனும் தத்துவத்தை நாம் கைக்கொள்ள வேண்டும்.
1689 விசுவாச அறிக்கை – வாசகர் மதிப்பீடு
1689 விசுவாச அறிக்கை நூலுடனான என் பயணம் அதன் கடைசி இரண்டு அதிகாரங்களில் இருந்துதான் ஆரம்பமானது. பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர்களாக சேர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் அவிசுவாசிகளின் ஆத்துமாவுக்கு என்ன ஆகும்? என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தார்கள். சீர்திருத்த போதனைகளின் ஆதிக்கம் எனக்குள் தலைதூக்கியிருந்த அந்த ஆரம்ப நாட்களில், கேட்பதை எல்லாம் அப்படியே நம்பி விடும் குணம் மாறி, காரணகாரியங்களோடு வேதத்தின் அடிப்படையில் அவற்றை சிந்தித்துப் பார்க்கும் எண்ணம் வேரூன்றியிருந்தது. எனவே இந்தக் கேள்விக்கான சரியான பதிலைத் தேடி, இறுதியில் 1689 விசுவாச அறிக்கையின் கடைசி அதிகாரத்தில் அதனைக் கண்டுகொண்டேன்.
மரணம் மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அதன் விளக்கங்கள் ஒவ்வொன்றையும் சந்தேகத்திற்கிடமின்றி என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. கடந்த ஆறேழு வருடங்களில் தனிப்பட்டவிதத்தில், குடும்ப ஆராதனையில், வேதப்பாட வகுப்புகளில் என்று பலமுறை வாசித்தும், ஆய்வு ரீதியிலான அதன் போதனைகளைக் கேட்டும், அதன் சில பகுதிகளை மனப்பாடம் செய்தும். . . . என்று பலமுறை அலசி ஆராயப்பட்ட ஒரு நூலிது. பலமுறை இதை வாசித்திருந்தபோதும் “போதும்” என்ற எண்ணம் இன்றுவரையில் தோன்றியதில்லை. அத்தோடு ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் தனிப்பட்ட ஆத்மீக அனுபவம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் மேலும் மேலும் ஆழமான வேத அறிவை அள்ளிக் கொடுத்து ஆச்சரியப்படுத்திய புத்தகமும் இதுவே.
1689 விசுவாச அறிக்கை 76 பக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நூல். ஆனால் பிரித்தானிய அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் பலவகையான விலையேறப்பெற்ற வைரங்கள் போல விலைமதிப்பில்லா அடிப்படை வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்து வழங்கும் ஒரு ஒப்பற்ற புத்தகமாகும். நூலுடனான எனது பயண அனுபவம் மற்றும் அதன் மூலமாக நான் அடைந்த பயன்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- நூல் முழுவதும் இறையியல் போதனைகளாக இருப்பதால் முதல் வாசிப்பிலேயே இதை இலகுவாக, எல்லாவற்றையும் புரிந்துகொள்வது இயலாத காரியம். போதகர் பாலா மூலமாக சீர்திருத்த போதனைகளுடன் தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் இந்த நூல் என் கரங்களில் கிடைத்தது. ஆனால் அதை முழுமையாக வாசித்து முடிப்பது என்பது எனக்கு மிகவும் சவாலாகவே இருந்தது. பலமுறை அதன் முதல் சில அதிகாரங்களை மட்டும் வாசித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் இல்லாமல் வேறு புத்தகங்களை நாடிச் சென்று விடுவேன். (ஆர்வம் இல்லாமைக்கு காரணம் அதன் இறையியல் போதனையைப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் போதிய அறிவும் பொறுமையும் இல்லாமையே! என்று பின் நாட்களில்அறிந்து கொண்டேன்). கடைசியில் ஒருமுறையாவது நூலை முழுமையாக வாசித்து முடிப்பது எனத் தீர்மானித்து, அதற்காக நேரம் கொடுத்து கவனத்துடன் வாசித்து முடித்தேன். முதல் வாசிப்பில் மேலோட்டமாக அதன் இறையியல் போதனைகளோடு ஏற்பட்ட பரிச்சயம் என்னை மறுபடியும் நூலை வாசிக்கத் தூண்டியது. அதன் பின்னர் இன்றுவரையிலும் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்று தொடர்ந்து அதை வாசித்து வருகிறேன்.
- 1689 விசுவாச அறிக்கையை எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் நம்பிக்கையுடன் வாசிப்பதற்கு அதன் அறிமுகப் பகுதி மிகவும் உதவி செய்கிறது. குறிப்பாக விசுவாச அறிக்கை உருவான வரலாற்றுச் சூழல், அதற்கான அவசியம் மற்றும் திருச்சபை அரசமைப்பிலும், திருநியமங்களைப் பயன்படுத்துவதிலும் அதன் பயன்பாடுகள் குறித்த பல போதனைகளைத் தருகின்றது. மேலும் இந்த விசுவாச அறிக்கை சில மனிதர்களின் அறிவுசார்ந்த சித்தாந்தப் போதனைகளால் உண்டானதோ அல்லது “வேதம் மட்டுமே” என்ற சீர்திருத்த கொள்கைக்கு எதிரானதோ அல்ல! மாறாக இது “வேதத்தின் அடிமை” என்ற அடிப்படை உறுதியை நமது மனசாட்சிக்கு அளித்து தொடர்ந்து நம்பிக்கையுடன் நூலை வாசிக்க இந்த அறிமுகப் பகுதி மிகவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் அடிக்குறிப்பாகத் தந்திருக்கும் வசனங்களையும் சேர்த்து வாசிக்கும்போது இந்த உண்மை நமக்கு நன்கு உறுதிப்படும்.
- நூலை வாசித்திருக்கும் அனைவரும் பொதுவாகவே ஆச்சரியப்படும் ஒரு விஷயம் அதன் முறையான அதிகார ஒருங்கிணைப்பு. நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் இறையியல் போதனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள, ஒரு “நூலேணியில் கீழ் முனையில் இருந்து ஒவ்வொரு படியாக மேலே ஏறுவது போல, புத்தகத்தின் அதிகாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக முறையாக வாசித்து, அதன் இறையியல் போதனைகளை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளும்போது முழுமையாக அதன் பயனை அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, நூலின் முதல் அதிகாரம் குறிப்பிடும் வேதாகமத்தின் முழுமையான, தவறிழைக்கவியலாத அதன் தெய்வீக அதிகாரத்தை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளாதவரையில் அதன் அடுத்தடுத்த அதிகாரங்கள் குறிப்பிடும் திரியேகத் தேவனையும், அவரின் ஆணை, படைப்பு, பராமரிப்பு, வீழ்ச்சி, உடன்படிக்கை, இரட்சிப்பு, . . . ஆகியவை குறித்த அடிப்படை வேதசத்தியங்களை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளவே முடியாது. நூலின் ஒரு அதிகாரத்தை அடுத்துவரும் அதிகாரத்தில் இருந்து பிரிக்க முடியாது. அதனால் ஒன்றை மற்றும் விசுவாசித்து இன்னொன்றை ஒதுக்கிவைக்க முடியாது.
- விசுவாச அறிக்கையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, ஆழமான பொருள் பொதிந்து காணப்படுகின்றன. எனவே ஒவ்வொரு வார்த்தையையும் அதன் சரியான அர்த்தம், அவற்றின் இலக்கண அமைப்பு ஆகியவற்றைப் புரிந்து வாசிப்பது மிகவும் அவசியம். உதாரணமாக, 2ம் அதிகாரத்தில் திரியேக தேவனின் குணாதிசயமாக “அவர் மாறாதவர்; அளக்க முடியாதவர்; என்றுமுள்ளவர்; புரிந்துகொள்ள முடியாதவர் (மனிதனுடைய சிந்தனைகளுக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவர்); எல்லாம் வல்லவர்; எல்லாவிதத்திலும் எல்லையற்றவர்; மிகப்பரிசுத்தர்; மிகுந்த ஞானமுள்ளவர்; பெருஞ் சுதந்திரம் உள்ளவர்; முழுமையானவர்; . . .” என்று அந்த பட்டியல் நீளுகிறது. அந்த வார்த்தைகளின் அர்த்தத்தைச் சரியாக அறிந்து விசுவாசிக்கும்போதுதான் கர்த்தரின் பிரசன்னத்தைத் தரிசித்த பரிசுத்தவான்கள் ஏன் செத்தவனைப்போல அவர் பாதத்தில் விழுந்தார்கள் என்பதன் அர்த்தம் புரியும்; என் தேவன் எத்தனை உயர்ந்தவர்! என்ற மரியாதை, அதிர்ச்சி, பயம், பிரமிப்பு, ஆச்சரியம், நம்பிக்கை என பலவகை உணர்வுகளைக் கடந்து அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கர்த்தர் மேலுள்ள நமது விசுவாசமும் அன்பும் உறுதிப்படும்; சர்வ வல்லமையும் ஞானமும் நிறைந்த நல்லவராகிய தேவனுடைய பராமரிப்பில் உறுதியான நம்பிக்கையும், திருப்தியும், மெய்யான சந்தோஷமும் உண்டாகும்.
- 1689 விசுவாச அறிக்கையை நமது கிறிஸ்தவ வினாவிடைப் போதனைகளோடு சேர்த்து வாசிப்பது, வாசிப்பை இலகுவாக்கி நமது புரிந்து கொள்ளுதலை மேம்படுத்த உதவும். அத்தோடு அடிப்படை சத்தியங்களைக் குறித்த பிரசங்கங்கள் கேட்பது, அது குறித்த விளக்கவுரை புத்தகங்களை வாசிப்பது, கிறிஸ்தவ வரலாறு குறித்த பரவலான அறிவைக் கொண்டிருப்பது ஆகியவை இந்த விசுவாச அறிக்கையின் மூலம் மேலான பயனைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். குறிப்பாக, மனித சித்தம் என்ற இறையியல் போதனையை விளக்கமாக அறிந்துகொள்ள போதகர் பாலா அவர்களின் “மனித சித்தம்” என்ற நூல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, “மனித சித்தம்” என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் கூடவே ஆர்மீனிய, பேலேஜியனிச போலிப் போதனைகளும் அவற்றிற்கு எதிராகப் போராடிச் சத்தியத்தை நிலைநாட்டிய ஆகஸ்தீனும் நினைவில் தோன்றாமல் போவதில்லை. அதுபோலவே தேவமனிதனாகிய கிறிஸ்து “மனித உருவெடுத்து, ஒரே ஆளில் கடவுள், மனிதன் ஆகிய இருவேறு தனித் தன்மைகளைக் கொண்டு அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நித்திய தேவகுமாரனாக இருக்கிறார்” என்ற வரிகளை மனனம் செய்து படித்திருந்தும், “நித்திய தேவகுமாரன்” என்பதன் முழுமையான அர்த்தம் அடிப்படைச் சத்தியம் தொடர்பான ஒரு பிரசங்கத்தைக் கேட்டபோதுதான் சட்டென்று எனக்குப் புரிந்தது.
- “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது போல வெறுமனே சத்திய அறிவை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து விடமுடியாது. அதற்கு பரிசுத்த ஆவியாகிய தேவனின் உயிரூட்டலும், விசுவாச நண்பர்களின் அனுபவ உதவியும் மிகவும் அவசியம். எனவே நூல் விளக்கும் இறையியல் போதனைகளை விசுவாசித்து அதன்படி வாழ ஆவியானவரின் உதவிக்காக தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும்போது அவற்றை சபை மூப்பர்கள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு சக விசுவாச நண்பர்களோடு நல்ல நட்புறவை வளர்த்து அவர்கள் பெற்றிருக்கும் கிருபையின் வரம், கிறிஸ்தவ அனுபவம், இறையியல் அறிவு ஆகியவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ளும்போது இந்த விசுவாச அறிக்கையின் போதனைகளை நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் செயல்படுத்தி ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும்.
அடுத்தபடியாக 1689 விசுவாச அறிக்கையின் மூலம் அடைந்த நன்மைகள் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு குறிப்பிடுகிறேன்.
- Pelagianism, Arminianism, Pragmatism, Gap theory, Dispensationalism, Pre-Millennialism போன்ற பல தவறான போதனைகளின் பிடியிலிருந்து விடுபட இந்த விசுவாச அறிக்கையின் மூலமாக கர்த்தர் உதவி செய்தார்.
- பல வருடங்களுக்கு முன் பிரசங்கி, உன்னதப் பாடல் போன்ற புத்தகங்கள் தேவனால் அருளப்படாத மனித சித்தாந்தங்கள் எனும் எண்ணம் எனக்குள் வேரூன்றி இருந்தது. ஆனால் முழு வேதமும் தேவ ஆவியானவரால் ஊதி அருளப்பட்டது என்ற உண்மையையும், தவறிழைக்கவியலாத வேதத்தின் தெய்வீக அதிகாரத்தையும் அறிந்து விசுவாசத்தோடு அதற்குக் கீழ்ப்படிய இந்த விசுவாச அறிக்கை மிகவும் உதவியது.
- சில வருடங்களுக்கு முன்பு இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள் குறித்த இதன் இறையியல் போதனைகள் என் எண்ணத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும், உள்ளத்தில் உண்டாக்கிய சந்தோஷத்தையும் இன்றும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
- வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளால் பிரச்சனைகளும் குழப்பங்களும் சோர்வும் உண்டாகும் நேரங்களில் எல்லாம் விசுவாச அறிக்கையின் 17 மற்றும் 18ம் அதிகாரங்களான, பரிசுத்தவான்களின் விடாமுயற்சி மற்றும் கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும் ஆகிய அதிகாரங்களை வாசித்து அதன் மூலம் மிகுந்த ஆறுதலும் தைரியமும் அடைவதோடு, பராமரிப்பில் கர்த்தர் அளித்திருக்கும் கிருபையின் சாதனங்களை வைராக்கியத்தோடு பயன்படுத்தி இன்றுவரையிலும் தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க உதவி செய்திருக்கிறது.
- தனிப்பட்ட வேத வாசிப்பில் ஒரு வேதப் பகுதியின் மையக் கருத்தைக் கண்டுபிடித்து அதனடிப்படையில் அந்த இறையியல் போதனையைப் புரிந்துகொள்ள விசுவாச அறிக்கை மிகவும் உதவி செய்கிறது.
- தெய்வீக பராமரிப்பு, கிறிஸ்துவின் மத்தியஸ்த பணிகள், உடன்படிக்கை இறையியல், நீதிமானாக்குதல், கிறிஸ்தவ சுதந்திரமும் மனசாட்சியின் சுதந்திரமும் போன்ற இறையியல் போதனைகளால் நடைமுறை வாழ்வில் நான் அடைந்த நன்மைகள் மிகவும் அதிகம். அவற்றை எல்லாம் விவரமாக எழுதினால் இந்த ஆக்கம் இன்னும் பல பக்கங்கள் நீண்டு விடும், எனவே இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இளம் பிள்ளைவாதம் நோய் வராமலிருக்க, குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “போலியோ” சொட்டு மருந்து கொடுப்பார்கள். அதுபோலவே இளம் ஆத்துமாக்களின் நரம்பு மண்டலத்தை எளிதாகத் தாக்கி அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடும் கொடிய “போலிப்போதனை வைரஸ்”களிடமிருந்து விசுவாசிகளைக் காப்பாற்ற இந்த விசுவாச அறிக்கையின் இறையியல் போதனைகள் குறிப்பிட்ட இடைவேளையில் புகட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் “போலியோ அட்டாக்” இல்லாத ஆத்துமாக்களைக் கொண்ட ஆரோக்கியமான சபைகள் உருவாகும்; “சீர்திருத்தம்” எனும் சொல் சபையின் பெயர் பலகையில் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு சபை அங்கத்தினர்களின் இதயத்திலிருந்து ஆரம்பித்துச் செயலில் வெளிப்படும். அத்தோடு ஒவ்வொரு விசுவாசியும் தான் எதை விசுவாசிக்கிறேன் என்று உறுதியாக அறிந்து தயக்கம் இன்றி தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடவும் இந்த விசுவாச அறிக்கை மிகவும் உதவி செய்கிறது.
தமிழ் கிறிஸ்தவத்தின் வரலாற்று ஏடுகளில் பொறிக்கப்படவேண்டிய ஒரு மிகப்பெரியச் சாதனை! என்று 1689 விசுவாச அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சொன்னால் அது மிகையாகாது. போதகர் பாலா அவர்களின் கடினமான உழைப்பையும், மொழிபெயர்ப்புத் திறனையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. எங்கள் பிள்ளைகள் விசுவாச அறிக்கையை ஆங்கிலத்தில் கற்று வருவதால் இதே விசுவாச அறிக்கையை ஆங்கிலத்திலும் வாசித்திருக்கிறேன். எனவே மிகச்சரியான தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடித்து எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்! என்று அவரின் மொழிபெயர்ப்பைப் பார்த்து பலமுறை வியந்து போயிருக்கிறேன். கண்டிப்பாக இது தேவனுடைய கிருபையின் ஈவு என்பதில் சந்தேகமே இல்லை. போதகர் பாலா அவர்களுக்கும், சீர்திருத்த வெளியீடுகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– ஷேபா, ஓமான்